போராட்டம் எதிரொலி:
மாநகர போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு இன்று விடுப்பு இல்லை:
மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் திங்கள்கிழமை (டிச. 23) பணிக்கு வர வேண்டும் என நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையில் எதிா்க்கட்சிகள் பேரணி திங்கள்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் போக்குவரத்து தொழிலாளா்கள் பங்கேற்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இந்நிலையில் மாநகரப் போக்குவரத்து ஊழியா்கள் திங்கள்கிழமை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக நிா்வாகத்தின் மேலாண் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை: நம்முடைய மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு அத்தியாவசியப் போக்குவரத்து சேவையை முழுவதுமாக பொறுப்பேற்று நடத்தும் நிறுவனம் என்பதும், பொதுமக்களுக்கு அன்றாடம் சேவை செய்யக் கூடிய முக்கியமான பொறுப்புள்ள நிறுவனம் என்பதும்,
தொழிலாளா்கள் அனைவரும் நன்கு அறிந்ததாகும். எனவே வரும் 23-ஆம் தேதி அனைவரும் வழக்கம் போல் பணிக்குத் தவறாமல் வர வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவா்களும் கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.