தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா..!
(29.06.2024) சனிக்கிழமை அன்று மாலை வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, ஓர் புதிய அனுபவமாக இருந்தது!
தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா.
பெயருக்கு ஏற்ப அன்பால் அனைவரையும் கவர்ந்துவிடுபவர்! அவரின் எழுத்துக்களும் அவரைப்போலவே கவரக்கூடிய வகையில் உள்ளது!
நிகழ்ச்சியின் ஆரம்பம் பறையிசையுடன் துவங்கியது. ‘மையம்’ கலைக்குழுவினரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டு, தன்னிச்சையாக பாதமும் தாளம் போடும் வண்ணம் இருந்தது!
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், வழக்குரைஞர் அருள்மொழி, ரிசர்வ் வங்கி சென்னை பொது மேலாளர் இளங்கோ, திரைப்பட இயக்குநர் கீரா அவர்களும் மற்றும் கவிஞர் புனித ஜோதி. உமா சக்தி என மிகச்சிறந்த ஆளுமைகளால் புத்தகங்கள் வெளியிடப் பட்டது.
இரண்டு புத்தகங்களைக் குறித்தும் அனைவரும் பாராட்டியும், தங்களின் கருத்தை மேற்கோள் காட்டியும் பேசினர்.
‘எழுத்துக்களைப்பற்றி சில வார்த்தைகள்’ எனும் நூல், மாறுபட்ட கதைக்களம் கொண்ட, பதினெட்டு நாவல்களை பற்றி தொகுப்புரையாக எழுதப்பட்டுள்ளது. சிறப்பான கவி வரிகளைக் கொண்டு, அழகான அணிகலனாக அமைத்திருக்கிறார்!
‘மேலெழும் சொற்கள்’ எனும் புத்தகம் வரலாற்று ஆவணங்கள், சிறுகதைகள், நாவல்கள் என் பத்தொன்பது தொகுப்பினை உள்ளடக்கியுள்ளது. இவை அனைத்தும் நாம் அறிந்திராத உண்மைகளை கண் முன்னே காட்சியாக காணச் செய்கிறது!
பல எழுத்தாளர்களின் படைப்பை கூர்ந்து, ஆராய்ந்து தனக்கான அடையாளத்தை சிறப்பாக தடம் பதித்து இருக்கிறார்!
இவ்விரண்டு புத்தகங்களும் நம்மை அந்த நூல்களை தேடிப் படிக்கும் ஆவலை தூண்டி விடும் வகையில் உள்ளது! மேலும்,தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் நாவல்களை எழுதிட வேண்டும் என கோரிக்கையும், வாழ்த்துகளையும் முன் வைத்தார்கள்!
இந்நிகழ்ச்சியில் புத்தக விற்பனையின் மூலம் வந்த தொகை முழுவதும், ஓர் மாணவனின் முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கு வழங்கப்பட்டது! இது ஒரு சிறப்பான ஆரம்பம்! எழுத்துப்பணியுடன், அறப்பணியும் சேர்ந்து செயல்படுவது பாராட்டுதலுக்கு உரியது!
தோழர் கருப்பு அன்பரசன் போன்று கலைஞர்கள், படைப்பாளிகள் அனைவரும் சமூகத்திற்கான அறப்பணிகளை செய்திட முன் வர வேண்டும்..