பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள் மறைந்த நாளின்று
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அற்புதத் துறவிகளில் ஒருவர் பாம்பன் சுவாமிகள்.
கனவிலும் நனவிலும் முருகப் பெருமானையே நினைந்துருகி வாழ்ந்தவர். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவான ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர்.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் என்னும் ஊரில் பிறந்தார். தாய், செங்கமலத்தம்மையார், தந்தை சாத்தப்பப்பிள்ளை. மத் குமரகுருதாச சுவாமிகளான இவர், பிறந்த ஊரின் நினைவாகப் பாம்பன் சுவாமிகள் என்றே அடியார்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். சிறுவயது முதலே தினமும் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை ஓதுவார். முருகன் மீது கந்த சஷ்டி கவசம் போலவே துதி பாட வேண்டும் என்று விரும்பினார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தன் ஞான குருவான அருணகிரிநாதரின் பெயரை வைத்து முடிக்க வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம். முருகன் திருவருளால், ‘கங்கையை சடையிற் பரித்து’ என்னும் முதலடியுடன் தொடங்கி, முருகன் துதிகளை இயற்றினார். தினமும் உணவு உண்னும் முன் ஒரு பாடலை இயற்றுவது என்ற நியதியை வகுத்து, அதன்படி நூறு பாடல்களை இயற்றி முடித்தார்.
முருகப் பெருமான் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, சுவாமிகளுக்கு இல்வாழ்க்கையில் நாட்டம் இல்லை. துறவறம் பூண வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் சுவாமிகளுக்கு ‘சடாக்ஷர மந்திர உபதேசம்’ செய்த சேது மாதவ ஐயர், சுவாமிகளைத் திருமண வாழ்வில் ஈடுபடச் சொன்னார். அவருடைய வழிகாட்டலில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். சுவாமிகளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். சுவாமிகளின் மனம் முருகனை நினைத்தபடியே இருந்தது.
சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்த நேரம் அது. சுவாமிகளின் தந்தை சிவபதம் எய்தினார். அப்போது துறவறம் பெறுவதற்காகப் பழநி செல்ல இருப்பதாகத் தன் நண்பர் அங்கமுத்துப் பிள்ளையிடம் கூறினார். பழநிக்கு வர பெருமானிடம் இருந்து உத்தரவு வந்ததா என்று கேட்ட நண்பரிடம் சுவாமிகள் ஆம் என்று பொய்யுரைத்தார். அன்று மாலை சுவாமிகள் முருகன் துதியைப் பாடிக் கொண்டிருந்தபோது, அச்சுற்றுத்தும் முகத்துடன் சுவாமிகளின் முன் முருகன் தோன்றினார். “நான் உத்தரவு தருவதற்கு முன்பே தந்துவிட்டதாகப் பொய் பகன்றாயா?” என்று முருகப் பெருமான் கேட்டார். “நான் சுயலாபத்துக்காக அப்படிச் சொல்லவில்லை. ஆன்ம லாபம் கருதித்தான் அப்படி பொய் உரைத்தேன்” என்று சுவாமிகள் சொன்னார். முருகப் பெருமானின் சினம் தணிய வில்லை. “எக்காரணம் கொண்டும் பொய் சொல்வது தவறு” என்று சொல்லிவிட்டு, தன்னிடம் இருந்து உத் தரவு கிடைக்கும் வரை பழநிக்கு வரக் கூடாது என்றும் சொல்லி மறைந்தார்.பழநியம்பதிக்கு வருமாறு முருகப் பெருமானிடம் இருந்து அழைப்பு வரும் என்று சுவாமிகள் காத்திருந்தார். ஆனால் அவருடைய இறுதிக்காலம் வரை பெருமானிடம் இருந்து அழைப்பு வரவேயில்லை. ஆன்ம லாபம் கருதிக்கூட பொய் சொல்லக் கூடாது என்பதைத் தனக்கு உணர்த்தவே பெருமான் அப்படி நடந்துகொண்டதை சுவாமிகள் புரிந்துகொண்டார்.
சத்தியத் திருநாள்
இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆடி மாதமும் சுக்கிரவாரத்தில் ‘சத்தியத் திருநாளா’கக் சுவாமிகளின் அடியார்கள் கடைபிடித்து வருகிறார்கள். அடியாரின் வழி நின்றி தாங்களும் சத்தியத்தை மீறக் கூடாது என்பதே சத்தியத் திருநாளின் நோக்கம். சுவாமிகள், தான் வழிபடுகிற மூர்த்திகளில் எல்லாம் முருகனையே காணும் கொள்கைப் பிடிப்பு கொண்டவர். தன் வாழ்நாளில் முருகனிடம் உபதேசம் பெற வேண்டும் என்பது சுவாமிகளின் பெரு விருப்பம். அதனால் பிரப்பன்வலசை என்னும் ஊரில் தவத்தில் ஈடுபட்டார். தவத்தைத் தொடர விடாமல் பல்வேறு இடையூறுகள் வந்தன. அனைத்தையும் முருகன் திருநாமத்தால் தகர்த்து எறிந்தார்.ஏழாம் நாள் இரவு, இரண்டு முனிவர்களுடன் அடியார் உருவத்தில் முருகன் வந்தார். சுவாமிகளிடம் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டு மறைந்தார். சுவாமிகள் அந்தச் சொல்லை உச்சரித்தபடியே தவத்தில் ஆழ்ந்தார் . முப்பத்தைந்தாம் நாள் தவத்தில் இருந்து எழச் சொல்லி அசரீரி கேட்டது. எம்பெருமான் சொன்னால் மட்டுமே எழுவேன் என்று சுவாமிகள் சொன்னார். இது முருகன் கட்டளை என்று பதில் வந்த பிறகே தவத்தில் இருந்து எழுந்தார் சுவாமிகள்.
உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத் துக்கள் இவற்றின் எண்ணிக்கையை ஒன்றிணைத்து சண்முகக்கவசம் பாடினார். இந்த 30 பாடல்களையும் பாடினால் இன்னல்கள் தீரும் என்பது அடியார்கள் வாழ்வில் கண்ட உண்மை.
ஒரு முறை சுவாமிகள் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூப்பின் காரணமாகவும், சுவாமிகள் உப்பு இல்லாத உணவை உண்பதாலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது வானத்தில் இரண்டு மயில்கள் தோகை விரித்தாடின. இன்னும் பதினைந்து தினங்களில் குணமாகும் என்ற அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து குழந்தை வடிவில் முருகப் பெருமான் காட்சியளித்தார். சுவாமிகளின் கால் குணமானது. சென்னை அரசு மருத்துவமனை பதிவுக்கல்லில் இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முருகப் பெருமான் மீது 6666 பாடல்களைப் பாடிய பாம்பன் சுவாமிகள், தமது 79ஆவது வயதில் இதே நாளில் சென்னை, திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார்.
பாம்பன் சுவாமிகளின் மகாசமாதியில் ஆண்டுதோறும் மார்கழி வளர்பிறை பிரதமையில் மயூர வாகன சேவன விழா நடைபெறுகிறது. அன்று சுவாமிகளின் அடியார்கள், சுவாமிகள் இயற்றிய பாடல்களைப் பாடி முருகன் அருளைப் பெறுவர்.