உலக சித்தர்கள் நாளின்று (World Siddha day )
உலக சித்தர்கள் நாளின்று (World Siddha day )
சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதாவது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 2009 ஏப்ரல் 14 இல் சித்திரைப் புத்தாண்டு நாளை உலக சித்தர்கள் நாளாக அறிவித்தார். இதனை அடுத்து முதலாவது உலக சித்தர்கள் தினம் 2009 ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு உரையாற்றினார்[1]. 2வது உலக சித்தர்கள் நாள் 2010 ஏப்ரல் 14 இல் சென்னை, அடையாறில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 2000 த்திற்கும் அதிகமான சித்த மருத்துவர் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மூன்றாவது சித்தர்கள் நாள் கேரளாவில் திருவனந்தபுரத்தில் 2011 ஏப்ரல் 14, 15 ஆம் நாட்களில் கொண்டாடப்பட்டது.
சித்திரைக்கும் சித்தர் பெருமக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று வரலாறு கூறுகிறது.
பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்தாலும், “வாசி’ எனப்படும் சுவாசம் மூலமாக காலம் கணிக்கப்பட்டிருப்பதையும் சித்தர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
முக்காலமும் அறிந்த சித்தர் பெருமக்கள், நாளொன்றுக்கு நாம் சுவாசிக்கும் எண்ணிக்கையை வைத்தே காலத்தைக் கணித்திருக்கிறார்கள்.
இதயம் என்ற தாமரை வழியாக சுவாசம் போகும்போது, நான்கு அங்குலம் போக மீதி சரியாகத் திரும்பி வரும் போது சுவாசத்தைக் கணித்திருக்கிறார்கள்.
அது இருபத்தோராயிரத்து அறுநூறு முறை நடக்கிறது. அதுவே அறுபது நாழிகை கொண்ட ஒருநாள்.
நாழிகை ஒன்றுக்கு நம் சுவாசம் 360.
அறுபது நாழிகைக்கு- அதாவது ஒரு நாளைக்கு நம் சுவாசம் 21,600 முறையாகும். இதன்படி கணக்கிட்டுப் பார்த்த போது 360 நாள்- 21,600 நாழிகை கொண்டது என்றும், அதுவே ஒரு வருடம் என்றும் சித்தர் பெருமக்கள் கூறுகிறார்கள்.
இதேபோல் யுகங் களின் கணக்கும் இப்படி கூறப்படுகிறது. 21,600-ஐ எண்பதால் பெருக்கினால் கிருத யுகமாம். அறுபதால் பெருக்க திரேதா யுகமாம். நாற்பதால் பெருக்க துவாபர யுகமாம். இருபதால் பெருக்க கலியுக மொத்த ஆண்டாகும் எனப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு நம் சுவாசம் 21,600. ஒரு வருடத்தின் நாழிகை 21,600.
21,600 ஷ் 80 =17,28,000 கிருதயுகம்.
21,600 ஷ் 60 =12,96,000 திரேதாயுகம்.
21,600 ஷ் 40 =8,64,000 துவாபரயுகம்.
21,600 ஷ் 20 =4,32,000 கலியுகம்.
பஞ்சாங்கத்தில் பார்த்தால், மேற்படி யுகங்களுக்குரிய வருடங்கள் சரியாக இருப்பதைக் காணலாம்.
சித்தர்களின் ஆயுட்காலத்தைக் கணக்கிட முடியாது. அவர்களாக ஜீவசமாதி அடைந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.
இயற்கையுடன் இயைந்து வாழவேண்டு மென்பதை நினைவூட்டவே உலக சித்தர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், தற்கால நவீன விஞ்ஞான வளர்ச்சியாலும், ரசாயனக் கலவையாலும், நச்சுப்புகையாலும் இயற்கையான நிலை மாறிவருகிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது. வளரும் விஞ்ஞானத்தால் ஆதாயங்கள் பல பெற்றா லும் பாதகங்களும் உடல்நல பாதிப்பும் அதிகமாகவே காணப்படுகின்றன.
சித்தர்கள் ஆராய்ச்சிசெய்து வெளிப் படுத்தியதுதான் சித்தமருத்துவம். தவவலிமை, யோகா போன்ற ஒழுக்கம் நிறைந்த கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சித்தர்கள். பிற உயிரினங்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டபோது அதற்குரிய மூலிகைகளை தங்கள் ஞான சக்தியால் கண்டு, அந்த நோய்களுக்கு மருந்தாக அளித்திருக்கிறார்கள். ஓலைச்சுவடிகளில் பதித்திருக்கிறார்கள். இன்றும் மூலிகைகளைக்கொண்ட மருத்துவத்திற்கு தனிமதிப்பு உண்டு. பக்கவிளைவுகளின்றி மூலிகைகளைக் கையாண்டு பல நோய்களுக்கு சித்தர்கள் நிவாரணம் கண்டிருக்கிறார்கள்.
கூடுவிட்டுக் கூடுபாய்வது, ஆகாயத்தில் பறப்பது, மருத்துவம், ஜாலம், பூஜாவிதி, ஜோதிடம், சிமிழ்வித்தை, சூத்திரம், சிற்பநூல், மாந்திரீகம், சூட்சும ஞானம், தீட்சாவிதி, யோகஞானம், திருமந்திரம், ரசவாதக்கலை போன்றவையெல்லாம் சித்தர்களுக்கு கைவந்த கலையாகும். ஒரேசமயத்தில் நான்கு இடங்களில் காட்சிதந்த சித்தர்களும் உண்டு. அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் சமாதியான சித்தர்பெருமக்களும் உண்டு.
சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் பெரும்பாலும் கோவில்கள் அமைந்துள்ளன. அவை இன்றளவும் புகழ்பெற்றுத் திகழ் கின்றன. மேலும் சித்தர்கள் ஜீவசமாதியான இடத்திற்குச் சென்று வழிபட்டால் நமது துன்பங்களுக்கு நல்ல நிவாரணம் கிட்டும். கோவில்கள் மட்டுமல்ல; சித்தர்கள் அருளும் சமாதிகளும் தோஷங்கள் நிவர்த்திசெய்யும் தலங்களாகப் போற்றப்படுகின்றன.
இந்நாளில் சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவுகொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்வோம்
1 Comment
“சித்தர்கள் குறித்த பயனுள்ள குறிப்புகள்.”சுவாசம் குறித்த அரிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.”