10ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் நூதன போராட்டம்!
10ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் நூதன போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் புதிய கட்டிடம் கட்டப்படாமல் இருக்கும் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் வருவாய் ஆய்வாளர் உட்கோட்டத்தில் கடம்பூர்,சங்கரப்பேரி, குப்பணாபுரம் ,ஒட்டுடன்பட்டி, கே.சிதம்பராபுரம் ,திருமலாபுரம், காப்புலிங்கம்பட்டி, ஓம்நமாக்குளம், இளவேளங்கால், தென்னம்பட்டி, பன்னீர்குளம்,மேலப்பாறைபட்டி, சுந்தரேஸபுரம். குருமலை, சவலாப்பேரி,ஆசூர்,சிவஞானபுரம் ஆகிய 17 வருவாய் கிராமங்களும், அதற்க்குட்பட்டு 40 கிராமங்கள் உள்ளன.
கடம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் கடம்பூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டிடம் சேதம் அடைந்ததாக கூறி, அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர்அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் தனியார் வாடகை கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. தற்போது அரசு அலுவலகங்கள் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
புதியதாக கட்டிடங்கள் கட்டப்படும் என அறிவித்து, பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்தும் இதுவரை இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும், வலியுறுத்திம் வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், இடிக்கப்பட்ட வருவாய் அலுவலர் கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் வடக்கு மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில் இடிக்கப்பட்ட கட்டிடத்தின் முன்பு மலர்களை வைத்து தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கயத்தார் மேற்கு ஒன்றிய தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் கருப்பசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.