ஜரீனாவின் சப்பரம் – 2 – சுப்ரஜா

 ஜரீனாவின் சப்பரம் – 2 – சுப்ரஜா
பாகம் 2
பாஸ்கர் வீட்டின் பின்னாலேயே அவனின் பட்டறை. பட்டறையில் வேலை நடந்து கொண்டிருந்தது. கூஜாவிற்கு அடிவட்டுத் தட்டை அடித்துக் கொண்டிருந்தாள். ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்தான் சிவா.
“சாப்பிட்டியா..?”
“ம்..என்ன ஆச்சு நீ”
“ம்”
“பஷீர் உனக்கு லெட்டர் போட்டாளா..?” – சிவா கேட்க
‘சடா’ரென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னடா திடீர்ன்னு பஷீர் பத்தி கேட்கறே.. அவங்க வீட்டுக்குப் போனியா..?’
“இல்ல கேட்டேன்..அவங்க வீடு இன்னும் துவரங்குறிச்சியிலதானே..?”
“ஆமாம்..” – சொல்லிக் கொண்டே பாஸ்கர் அவனை ஆழமாய்ப் பார்த்தான். குனிந்து சிவாவின் காதில் “ஜரீனாவை பார்த்தியா ?” என்றான் குறும்பாகச் சிரித்துக் கொண்டே. சிவா என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மௌனமானான்.
“அவங்க அம்மாவைப் போய் பார்க்கணும்டா…”சிவா சொல்ல
“போலாண்டா..ஐந்து மணிக்கு கூட்டிட்டுப் போறேன்..”
மாலை வரை பாஸ்கருடனே உட்கார்ந்து இருந்தான் சிவா. ஓட்டு வீடு.கதவை தாளிடப் படாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது. மெல்ல தட்டினான்.
“யாரு?” என்ற குரல் அதை தொடர்ந்து இன்னொரு குரல் “ஜரீனா போய் வாசல்ல யாரு வந்திருக்கா?”என்றது.
சிவாவிற்கு ஏனோ படபடப்பாய் இருந்தது.
“யாரு ..?’- என்றபடியே கதவு திறக்கப்பட –
திறந்த ஜரீனாவின் முகத்தில் கண் நேரம் ஆச்சர்யம், சந்தோஷம் இரண்டும் மின்னலடித்ததைப் பார்த்தான் சிவா. மனசுக்குள் ஏனோ சந்தோஷ மணி அடித்தது. கண் மையை நீளமாய்த் தீட்டியிருந்தாள் ஜரீனா. அவளின் பெரிய கண்களை இன்னமும் பளீரென்று பார்க்க வைத்தது அது.
“வாங்க..” என்றாள் ஒற்றைச் சொல்லில்.
பாஸ்கரும் சிவாவும் உள்ளே நுழைய – சிகடாவிற்கு நூல் சுற்றிக் கொண்டிருந்த பஷீரின் அம்மா பாஸ்கரை அடையாளம் கண்டு கொண்டாள்.
“என்ன பாஸ்கரு நல்லா இருக்கியா..உட்காரு..கூட இது யாரு?”
ஜரீனா தறி மேடை அருகே மறைந்து நின்றாள்.
“நம்ம சிவா…பட்டணத்துக்குப் போயிட்டான்ல்ல சினிமாவுக்கு பாட்டெல்லாம் எழுதுறான்..”
சிவாவை உற்றுப் பார்த்தாள்..
“அட வாத்தியார் புள்ளை சிவாவா..எப்படி இருக்கே..தம்பி..பஷீர் மலேசியா போயிட்டான் தெரியும் இல்ல ..?”
“நானே சொல்லிட்டான்..”
“என்னமோ பொழப்பு இங்க ஓடுது.. ஏதோ காசு மட்டும் வருது.. இவ பிடிவாதமா இங்கதான் படிப்பேன்னு நிக்கறா.. என்னமோ தறியோட பொழப்பு ஓடுது.. ஆமான் ஆடுதுறை இகியாஸ் தெரியும் இல்ல..””
“தெரியும்..””
“அவனுக்கு இவளை கட்டிக் கொடுத்துட்டா எனக்கு பளுவெல்லாம் குறைஞ்சா போகும்”
சிவா சட்டென்று ஜரீனாவைப் பார்த்தான்.ஆடுதுறை இலியாஸை அவளுக்கு பிடிக்கவில்லை என்று அவள் முகமே சேதி சொன்னது.
“நான் ஒருத்தி..என்ன சாப்பிடறீங்க..ஏய் ஜரீனா வா இங்க…”
“ஒண்ணும் வேண்டாம்”
“இருக்கட்டும்..”
ஜரீனா அருகில் வர சுருக்குப் பையில் இருந்து காசு எடுத்துக் கொடுக்க ஜரீனா ஒரு குவளையை எடுத்துக் கொண்டு ஓடினாள்.
“இப்ப தறியோட ஒடுது வாழ்க்கை..ஏதோ பொழப்பு..இட்லிப் பானை முன்னாடி உட்கார முடியல திடீர்ன்னு சூடு ஒத்துக்கல..இட்லி பொன்னம்மாவை எல்லோரும் மறந்தாச்சு.,,அப்போ அந்த ஆளு பதினொரு மணிக்கு இட்லி சாப்பிட கடைக்கு வருவாரு…தினக்கணக்கு அப்படியே வார கணக்கு ஆச்சு…வார கணக்கு மாச கணக்கு ஆச்சு..திடீர்ன்னு ஒரு நாள் பொட்டுன்னு கேட்டார்..கட்டிக்கிறியான்னு என்னமோ தெரியலை சரின்னு சொல்லிட்டேன்..பஷீர் பொறந்து பெரியவன் ஆகுற வரைக்கும் இட்லி போட்டுட்டு இருந்தேன்..திடீர்ன்னு நிறுத்திட்டேன்..அவங்களும் சொந்தகாரங்க இருக்காங்கன்னு மலேசியா போயிட்டாங்க… அவங்க போனப்ப ஜரீனாவுக்கு ஏழு வயசு..அன்னைக்கு கடைசியா பார்த்ததுதான்..மூணு வருஷம் முன்னாடி தனியா போட்ட கணக்கு ..பஷீரையும் அழைச்சிட்டாரு..”
ஜரீனா காப்பி குவளையுடன் வந்தான். இரண்டு டம்பளரில் காப்பியை ஊற்றிக் கொடுத்தாள். இருவரும் வாங்கி குடித்தார்கள்.
சிவா “’பஷீர் அட்ரஸ் வேணும் ..” – என்றான்.
“எவ்வளவு நாள் இருப்பே தம்பி..?”
“நாலு நாளுன்னு வந்தேன்..இப்ப பத்து நாளாவது இருப்பேன்னு நினைக்கிறேன்..”
சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தாள் ஜரீனா.அந்த ஒரு நிமிடம் அவள்
விழிப்பார்வை இரண்டும் அலைந்தது.ஒரு சந்தோஷக் கீற்று’எனக்காகவா?’என்றது.
மெல்லப் புன்னகைத்தான்.
“ஒரு பேப்பர்ல்ல அண்ணன் அட்ரஸ் எழுதிக் கொடு “என்றாள்.
ஜரீனா எழுதிக் கொடுத்தாள்.
திரும்பி வரும் போது கேட்டான் பாஸ்கர்.
“என்ன சிவா.. உண்மையைச் சொல்லு..உனக்கு ஜரீனாவைப் பிடிச்சிருக்கா..?”
“நீ என்ன நினைக்கறே ?”
“உன்னோட நடவடிக்கைகளைப் பார்த்தா அப்படிதான் தெரியுது..”
“என்னடா சொல்றே..?”
“சிவா தப்பா நினைக்காதே.. நீ சினிமாகாரன், தேவையில்லாம அந்தப் பொண்ணு மனசுல எந்த ஆசையையும் கிளப்பி விட்டுட்டுப் போயிடாதே..பாவம் அப்புறம் அது கிடந்து அல்லாடும்.”
“என்ன பாஸ்கர் நீ..என்ன வழக்கமான சினிமாகாரன்னு நெனைச்சுட்டுயா ..உலகம் எப்படி எல்லாம் போகுது..நான் உண்மையிலேயே அந்தப் பொண்ணை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கறேன்..”
“எல்லாம் நல்லா நடந்தா சரி”
மாமா வீடு வரை வந்து விட்டுப் போகும் போது மணி இரவு ஒன்பது. சாப்பிட்டுப் படுத்தும் தூக்கம் வரவில்லை.ஜரீனாவின் வட்ட முகம் முன்னால் தோன்றிக் கொண்டே இருந்தது. ஜரீனா படுசூட்டிகையானவள்தான்.
‘பத்து நாள் இருக்கப் போகிறேன்’என்றதும் மின்னலாய்ப் பார்த்தாளே? படங்களில் காதல் பாடல்கள், கானாப் பாடல்கள் எழுதியவனுக்கு இப்பொழுது நிஜக் காதல் வர நரம்புகளைச் சுண்டியது.உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான். காலையில் பட்டீஸ்வரம் போகலாய் என்று குளித்து கிளம்பினான். ஆர்த்தியும் உடன் கிளம்பினாள்.
“எனக்கு எலுமிச்சங்காபாளையத்தில் ஒரு வேலைப் பாக்கி இருக்கு..நானும் வர்றேன் மாமா..கொஞ்சம் இருங்க மாமா …ஜரீனாவையும் அழைச்சிட்டு வர்றேன்..” – அவன் பதிலுக்குக் காத்திருக்காமல் சைக்கிளில் பறந்தாள் ஆர்த்தி.
இரண்டு சைக்கிளில் கிளம்பினார்கள். சிவா ஒரு சைக்கிளை ஓட்ட அவன் பின்னால் ஏறிக் கொண்ட ஆர்த்தி “ஜரீனா நீ மாமா சைக்கிள்ல்ல நீ ஏறிக்க”என்றாள் யதார்த்தமாக. ஜரீனா தயங்கி நிற்க “நீ முழுங்கிட மாட்டேன்..” என்றான் சிரித்தபடியே. ஏறிக் கொண்டாள்.
சைக்கிள் தாராசுரம் நெருங்கும் போது சிவா..”மூச்சு வாங்குது..உடற்பயிற்சி செய்யறது நல்லதுன்னு நினைக்கறேன்..ஒரு பொவண்டோ அடிச்சிட்டுப் போவலாம்”
“ஏன் மூச்சு வாங்கு?”
“ஓட்டி ரொம்ப நாள் ஆச்சு இல்ல”
கடை ஒன்றில் நிறுத்தி பொவண்டோ குடித்தார்கள்.
“எத்தனை கலர் வந்தாலும் பொவண்டோவில் இருக்கற திருப்தி வேற எதுலேயும் இல்ல” என்ற சிவா,பக்கவாட்டில் ‘ஸ்ட்ரா’ போட்டு உறிஞ்சிக் கொண்டிருந்த ஜரீனாவின் கண்களைப் பார்த்தான்.அவள் சற்றைக்கொருதரம் தன் பார்வையை அவன் மீது செலுத்திக் கொண்டிருந்தாள்.சிவா தன்னைப் பார்ப்பதை அறிந்ததும் சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டாள்.
ஆர்த்தியிடம் “ஆர்த்தி..நான் அந்த சைக்கிள்ல உட்கார்ந்துக்கறேன்..நீ உங்க மாமா சைக்கிள்ல உட்கார்ந்துக்கோ..””
“அது முடியுதுப்பா..”
ஆர்த்தி ஓடி விட்டாள். பொவண்டோவிற்க்கு காசு கொடுத்தவன் சைக்கிள் அருகில் வந்தான். பூட்டிய சைக்கிளைத் திறந்தான். திரும்பி ஜரீனாவைப் பார்த்தான். அவசரத்தில் கிளம்பியதில் அவள் உடையை அப்பொழுது கவனிக்கவில்லை. வெளிர் மஞ்சள் நிறத் தாவணியும் அதற்கு ஏற்ற அரக்குத் கலர் பாவாடையும் அணிந்திருந்தாள். ஜாக்கெட் மாம்பழக் கலரில்.
“போலாமா?”
பக்கத்தில் வந்தவள் அவனை வெட்கத்துடன் பார்த்தாள்.
“இப்படி பண்ணிட்டுப் போயிட்டாளே..”
“என்ன பண்ணிட்டுப் போயிட்டா?”
“ம் சுரைக்காய்..”
மெல்ல அவளருகில் குனிந்து கேட்டான்.
“ஏன் என் கூட வந்தது உனக்கு பிடிக்கலையா?”
(தொடரும்)
பாகம் 1 பாகம் 2  |  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...