200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன்
200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன்
கமுதி அருகே முத்தாலம்மன் கோயில் சிலையை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத திருவிழா 200 ஆண்டுகளாக நடக்கிறது. இந்த விழாவையொட்டி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்காக தீப்பந்தம் ஊர்வலம், வாண வேடிக்கை நடந்தது.
கமுதி அருகே நாராயணபுரத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். நேற்று முன்தினம் (நவம்., 13ல்) இந்த விழா துவங்கியது. கமுதி கண்ணார்பட்டியில் களிமண் சிலை செய்வோரால் 48 நாட்கள் விரதமிருந்து உருவாக்கப்பட்ட அம்மன் சிலைகளை கமுதியில் இருந்து பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் வாணவேடிக்கை, தீ பந்தங்களுடன் 3 கி.மீ., ல் உள்ள நாராயணபுரம் கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து முத்தாலம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (நவம்., 13ல்) பகல் முழுவதும் திருவிழா கொண்டாடப்பட்டு மாலை முத்தாலம்மன் சிலை உடைப்பு நிகழ்ச்சி நடந்தது. இவ்விழா கடந்த 200 ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.