போனில் கேட்டு நர்ஸ் சிகிச்சை

போனில் கேட்டு நர்ஸ் சிகிச்சை: இரட்டை சிசு இறப்பு

     

                 தஞ்சாவூர்: மொபைல் போன் மூலம் டாக்டரிடம் கேட்டு கேட்டு நர்சுகள் சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்கள் உயிர் இழந்தன. டாக்டரின் அலட்சிய போக்கை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
தஞ்சை மாவட்டம் பூண்டி கல்லூரி சாலையில் வசித்து வருபவர்கள் குமரவேல், விஜயலட்சுமி தம்பதி. திருமணம் நடந்து 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். குழந்தை பேறுக்காக தஞ்சையில் உள்ள மகபேறு மருத்துவர் ராதிகா ராணியிடம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
              விஜயலட்சுமி கர்ப்பம் அடைந்தைத் தொடர்ந்து ராதிகா ராணியிடம் ஐந்து மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இரட்டை குழந்தையுடன் கருவை சுமந்து வந்த விஜயலட்சுமிக்கு நேற்று (நவ.,14) புதன்கிழமை காலை இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு ராதிகா ராணி அறிவுறுத்தலின் பேரில் விஜயலட்சுமி சேர்க்கப்பட்டார்.
விஜயலட்சுமியை பரிசோதனை செய்த ராதிகா ராணி குழந்தை நல்ல வளர்ச்சியுடன் இருக்கிறது. பயம் அடைய வேண்டாம் என உறவினர்களிடம் தெரிவித்து உள்ளார். மேலும், சில சிகிச்சை முறைகள் அளிக்குமாறு நர்சுகளிடம் கூறி விட்டு அவர் சென்னை சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

     
             இந்நிலையில் விஜயலட்சுமிக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து நர்சுகள் சென்னையில் இருந்த ராதிகா ராணியிடம் மொபைல் போனில் கேட்டுள்ளனர். டாக்டரும், மொபைல் போன் வழியாகவே அளிக்க வேண்டிய சிகிச்சையை கூறி உள்ளார். நர்சுகளும் அதன்படி போனில் பேசியபடி விஜயலட்சுமிக்கு மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இருந்தும் சிசிச்சை பலன் அளிக்காமல் விஜயலட்சுமி வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் உயிர் இழந்தன. இதனை அடுத்து வேறு ஒரு டாக்டர் வந்து கருவை அகற்றியதாக கூறப்படுகிறது.

           இந்த தகவல் அறிந்து மருத்துவமனையை முற்றுகையிட்ட விஜயலட்சுமி உறவினர்கள் டாக்டரின் அலட்சிய போக்கால் குடும்ப வாரிசுகளை இழந்து நிற்பதாக வேதனை தெரிவித்தனர். ராதிகா ராணி போலீசை வைத்து மிரட்டுவதாக விஜயலட்சுமி மாமனார் ராமச்சந்திரன் கூறினார். இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!