உள்ளாட்சி தேர்தல்: ஸ்டாலின் உறுதி
உள்ளாட்சி தேர்தல்: ஸ்டாலின் உறுதி
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு பொய் சொல்கின்றனர். தேர்தலை நடத்தக்கூடாது என்பதில் தான் அவர்களின் கவனம் உள்ளது.
தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். தேர்தலை நிறுத்துவது எங்களின் நோக்கம் இல்லை. இதனை நாங்கள் சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் கூறியுள்ளோம். அதிமுக தேர்தலை நடத்தாது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மக்களிடம் உறுதி அளித்துள்ளோம்.
மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து, தேர்தலின் போது சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளதா, ஐகோர்ட் உத்தரவுப்படி நடத்த போகிறீர்களா என தான் கேட்டோம். தேர்தலை நிறுத்த வேண்டும் எனக்கூறவில்லை. எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வு ரத்து
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி, ஜனாதிபதி ஒப்புதலை பெற வேண்டும். மாணவர்களின் டாக்டர் கனவை சிதைக்கும் கொடிய நீட் தேர்வு அடுத்து வருவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.