பொதுமக்கள் சாலைமறியல் காவல் ஆய்வாளருக்கு இடமாற்றம்
இடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளருக்கு ஆதரவாக பொதுமக்கள் சாலைமறியல்
தமிழ் சினிமாக்களில் எப்போதும், ரவுடிகளை ஆதரிப்போர் போலவே சித்தரிக்கப்படும், காசிமேடு மக்களின் அன்பை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….!
இங்கே பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்வது, குடிநீர் கேட்டோ, அல்லது நிவாரண நிதி கேட்டோ அல்ல- நியாயமான காவல் ஆய்வாளர் ஒருவரை, தங்கள் பகுதியில் இருந்து பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான் இந்த போராட்டம்..!
தாயைக் கண்ட பிள்ளைகள் போல சாலையில் இருந்து எழுந்து சென்று அங்கு வந்த காவல் ஆய்வாளரின் காலில் விழவும், அவர்களை அந்த காவல் ஆய்வாளர் கைதூக்கிவிடவும், கண்ணீருடன் மூதாட்டி ஒருவர் அரவணைக்கும் இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் நிகழ்ந்த இடம்… தாதாக்களின் கூடாரமாகவும், ரவுடிகளின் பிறப்பிடமாகவும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படும் காசிமேடு..!
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இங்கே நிரம்ப இருக்கிறார்கள்…! நல்லவர்களை மதிப்பதும், அவர்களுக்கு பின்னால் அரணாக இருப்பதும் இந்த மக்களின் கூடுதல் சிறப்புக்கள்.
இந்த பகுதியில் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்று வந்தவர்களை ஒழித்ததோடு, அதிகாலை வேளையில் மீன்வாங்கச் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தவர் காசிமேடு காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன்…! அதனால் தான் பெண்களின் ஏகோபித்த ஆதரவு அவருக்கு இங்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், சிதம்பர முருகேசன் அம்பத்தூர் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட தகவல் அறிந்து ஒன்று திரண்ட பெண்கள், நேர்மையான காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசனை இடமாற்றம் செய்ய கூடாது என்றும், தொடர்ந்து காசிமேட்டிலேயே பணிபுரிய ஆணையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.சூழ்நிலையைப் பொறுத்து போலீசாரின் நடவடிக்கைகள் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசனை போல காவல்துறைக்கு பெருமை சேர்க்கின்ற கண்ணியமிக்க அதிகாரிகளும் தமிழக காவல்துறையில் நிறைய பேர் உள்ளனர் என்பதற்கு இந்த சம்பவமே சான்று…!