இனிது இனிது; காதல் இனிது | ஸ்ரீநிரா

 இனிது இனிது; காதல் இனிது | ஸ்ரீநிரா

“காதல்”

உலகத்திற்கு அதிகமாகத் தேவைப்படுவது.

உலகில் அதிகமாக இழக்கப்படுவதும் அதுவே.

அன்பின் உன்னத நீட்சியே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல்.

இங்கே அன்பு என்பது அதிகமாக காயப்படுத்தப்படுகிற ஒன்று.

ஆயின் காதல் என்பது இங்கே அதிகம் கொச்சைப்படுத்தப்படுகிற ஒன்றாகி விட்டது.

எது காதல் என்ற கேள்விக்கு இது தான் வரையறை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத உணர்வு காதல்.

‘Being and Becoming’ என்பது காதலுக்கான ஒரு விளக்கம் என்றால் அதைத் தவறு என்று நிறுவவும், வேறு ஒரு விளக்கத்தை அளிக்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

ஏன் என்றால் காதல் என்றால் உணரப்பட வேண்டியதே அன்றி உரைக்கத்தக்கது மட்டுமல்ல.

திருமணத்தில் முடியும் காதலைத் தான் ஜெயிக்கின்ற காதல் என்று கருதும் சமூகம் நம்முடையது.

ஆனால் விட்டுத் தரப்பட்ட காதலர்களின் தியாகம் தான் காதலின் உச்சம் என்பேன் நான்.

“கையைப்பிடித்துக் கொண்டு நடக்கும் சிநேகம் தான் காதல், கல்யாணம் பண்ணிக்கொள் என்ற நச்சரிப்பு அல்ல” என்று ஒரு வரி பாலகுமாரனின்  பச்சை வயல் மனது குறும்பு தினத்தில் வரும்.

ஆனால் நல்ல மனிதர்களின் இயல்புகள் என்று சமூகம் விதித்துள்ள  சில விழுமியங்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதை நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை.

அதனால் தான் காதல் இங்கே தவறான பாதையில் காமத்தின் மறுமுகமாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

ஹார்மோன்களின் சேட்டை எலலாம் சீரிய காதல் ஆகிவிடாது என்பதைப் புரிந்து கொள்ள நம் பதின்மர்கள் தவறுவதற்கு நாமும் ஒரு காரணம். முக்கியக் காரணம்.

பக்குவம் இல்லாத வயதில், எந்த விஷயத்தைப் பற்றியும் ஒரு தீர்க்கமான கருத்தை வனையக்க கூடிய அனுபவம்

குறைவான வயதில், அடுத்த வேளை சோற்றுக்குக் கூடப் பெற்றோரை நம்பி இருக்கும் ஒரு  இளம் பையனை ஒரு இளம் பெண் காதலிப்பது சரி என்றால் அது அவர்களின் வாழ்க்கைப் பாதையையும் நோக்கத்தையும் தடம் மாற்றிவிடாதா?

தான் ஒரு 20 வயது மாணவனைக் காதலிப்பதாக ஒரு 18 வயதுப் பெண் என்னிடம் சொன்ன போது அவளிடம் கேட்டேன்.

‘இன்னும் ஐந்து வருடங்களில் உன் படிப்புக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப உன் பார்வையும், பாதையும், கருத்துக்களும் மாறப்போகிறதா இல்லையா?

‘ஆமாம்’

‘ அப்படி இந்த பையனைப் பற்றிய உன் அபிப்பிராயமும் மாறும் அல்லவா?’

‘ஆமாம்’

‘மற்றதெற்கெல்லாம் பக்குவமும் அனுபவமும் வரட்டும் என்று காத்திருக்கும் போது காதலுக்கு மட்டும் என்ன அப்படி ஒரு அவசரம்?’

அவளின் மெளனம் அவள் யோசிப்பதைக் காட்டியது.

நடப்பில் உள்ள காதலைப் பற்றி பத்திரிக்கைச் செய்திகளைப் படிக்கும்போது இது எல்லாமே காமத்திற்கான ஒரு ஒப்பனையோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

அது மட்டும்  உண்மை என்றால் அதைவிட காதல் என்ற உணர்விற்கு வேறு பெருத்த அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஒரு வேளை செக்ஸ் இங்கே கொஞ்சம் ஈசியாகக் கிடைத்து விட்டால் இத்தனை காதல் இருக்காதோ? என்றும் சில நேரங்களில் தோன்றுகிறது.

காமத்தின் தேவையையும் காதலில் காமத்தின் பங்களிப்பையும் மறுப்பதற்கில்லை. சொல்லப் போனால் காதல் என்ற அந்த நுண்ணிய, நுட்பமான ஒன்றை காமத்தோடு இணைத்து பார்ப்பதால் காதலிப்பதற்கு ஒரு தகுதி வயதும் மனப்பக்குவமும் தேவைப்படுகிறது.

காதலற்ற தாம்பத்தியம் எப்படி இருக்கும்? தெரியாது . ஆனால் அப்படி ஒன்று நம் பெற்றோர் காலம் வரை நேர்ந்து கொண்டு தானே இருந்தது?

இன்றைய சூழ்நிலையில் ஊடகங்களின் முக்கியப் பங்களிப்பாக காதல் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பதை சொன்னால் மிகையில்லை.

காதல் இங்கு திணிக்கப்பட்ட ஒரு உணர்வாகவும், ஒரு போதையூட்டும் கருவியாகவும் சித்தரிக்கப்படுவதே முக்கியக் காரணம்.

உடல் வளர்ச்சி காமத்திற்கு மட்டும் போதுமானதாக இருக்கலாம். ஆனால் காதலுக்கு அது மட்டும் போதுமானது அல்ல.

கல்வியில் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாத, தன் சொந்தக் காலில் நிற்க முடியாத, பெற்றோரின் பாக்கட் மணியில் செலவு செய்யும், பெட்ரோலுக்கும் செல் போனுக்கும் தன்னால் பணம் சம்பாதித்து செலவழிக்கும் வக்கும்  வழியும் இல்லாத ஒருவன் அந்த இளம் வயதில் அதே நிலையில் உள்ள இன்னொரு சிறு பெண்ணைக் காதலிப்பதில் என்ன பெரிய புனிதமான நோக்கம் இருந்துவிடப் போகிறது?

சமூகத்தில் புரையோடிப் போன பல வழக்கங்களை வேரறுக்க காதல் திருமணங்கள் அவசியம்.

அது ஒரு புறம் இருக்க பொருத்தமும் தகுதியும் அற்ற ஒரு துணையை அந்த அறியாத வயதில் சரியான கவனமும் பக்குவமும் இல்லாமல் தேடி அதனால் சிறு வயதிலேயே சீரழிவது மட்டும் பண்பாடு ஆகிவிடுமா?

பொருளாதாரம் முக்கியமான உலகத்தில் அல்லவா வாழ்கிறோம்!

பெண்களின் பக்கம் இருந்து பார்த்தால் இதன் இன்னொரு பரிணாமம் புரியும். தற்போதைய சூழ்நிலையில் திருமண உறவு நிலையானதோ நிரந்தரமானதோ அல்ல. அந்த பந்தம் எப்போது வேண்டுமானாலும் உடையக் கூடியதாகவும் மீண்டும் சேர்க்கக் கடினமானதாகவும் இருக்கிறது. அப்படி நேரும் போது அந்த வகையான நெருக்கடிகளில் ஒரு பெண் சுயமாகத் தன் காலின் வலிமையில் தானே நிற்கவும், நடக்கவும், பாயவும் வேண்டாமா?

கணவன் நல்லவனாக இல்லை என்று அவனைப் பிரியும் பெண்கள் ‘ சரிதான், போடா’ என்று அவனை உதறிவிட்டால் மட்டும் போதுமா? வாழ வேண்டாமா?

தான் யார் என்பதை இவ்வுலகிற்கு நிரூபிக்க வேண்டாமா? ஜெயித்துக் காட்ட வேண்டாமா?

அதற்கு ஒரு பெண்ணிற்கு முதலில் என்னவெல்லாம்  வேண்டும் ?

தன்னம்பிக்கை?

துணிவு?

இவை மட்டும் போதாது…

கல்வித் தகுதியும் சொந்தமாகப் பொருளீட்டும் வேலையும் கட்டாயத் தேவை

இவை இல்லாவிடில் மற்றவை இருக்காது.

இவ்விரண்டும் இல்லாத பெண்ணால் எப்படித் துணிவுடன் அந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும்?

அதுவும் குழந்தைகளோடு மணமுறிவு என்றால் இன்னும் பரிதாபம். கணவன் தரும் வாழ்க்கைப் பொருளுதவி எந்த மூலைக்கு உதவும்? அதைக்கூடப் போராடியோ கெஞ்சியோ வழக்காடியோ தானே வாங்க முடிகிறது?

அது பெண்ணின் உரிமைதான். ஆனால் அவளின் தன்மானத்திற்கு அது ஒரு சறுக்கல் இல்லையா?

பெண்களே, நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்களா?

இல்லை, சோதிக்கப் பிறந்தவர்களா?

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

தற்போது புதிய கலாச்சாரம் ஒன்று உருவாகியிருக்கிறது. சரியாகக் கல்வி பயிலாத, நிரந்தர வேலையும் வருமானமும் இல்லாத, உழைக்க வணங்காத சில ஆண்கள் நன்கு படித்த, வேலை பார்க்கும் பெண்களைப் பொறுக்கித் தேர்ந்தெடுத்து, காதல் என்ற போர்வையில் பழகி, மணமுடித்து அவளது உழைப்பைச் சுரண்டி சுகமாய்க் குளிர்காயும் கலாச்சாரம் இங்கே வளர்ந்து வருகிறது. அத்தகைய திருமண உறவிலிருந்து வெளியேறுவது கடினம். வெளியேறிய பிறகு தொலைந்து போன வாழ்க்கையை மீட்பதும் கடினம்.

அப்படிப்பட்ட ஆண்களிடமிருந்து தப்பித்துக் கொள்வது என்பது பொதுவாக இளம் வயதில் கடினம்.

ஆண்களே, முழுமையான கல்வித் தகுதியும் வேலைக்கான தகுதியும் இனிமையான இல்லறத்திற்கான வளமான பொருளாதாரமும் இன்றி, எதற்கு அந்த அரைகுறை அவசரக் காதல்?  தங்கள் காதல் துணையை வாட விடுவதா காதல்?

அவரை மதிப்பதில் இருக்கிறது அந்தக் காதலின் அளவு…

இனிது இனிது காதல் இனிது.

உரிய வயதில், இந்தப் பரந்த உலகில் கெளரவமாக வாழ்வதற்காக தன்னைத் தகுதிப் படுத்திக் கொண்டால் மட்டுமே!

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...