படப்பொட்டி – 6வது ரீல் – பாலகணேஷ்
படப்பொட்டி – 6 வது ரீல் – பாலகணேஷ்
மாமாயாபஜார்!! உங்களில் இந்தப் படம் பார்க்காதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படம் என்றாலும் சற்றும் சலிப்படையச் செய்யாமல் விறுவிறுவென்று ரசிக்கும்படியாக அமைந்திருந்த படம். ஒரே கதை பதினொரு முறை படமாக்கப்படுவது என்கிற அதிசயத்தை நிகழ்த்திய ஒரே படம் இந்த மாயாபஜார். தெலுங்கில் இரு முறையும், தமிழில் இரு முறையும் மற்ற பிராந்திய மொழிகளில் பலமுறையுமாக வெளியான அதிசயப் படம் இது.
மகாபாரதத்திலிருந்து உருவப்பட்ட ஒரு துணுக்குப் பகுதிதான் கதை. பலராமரின் மகள் வத்ஸலா, அபிமன்யுவைக் காதலிக்கிறாள். கௌரவர்கள் துரியோதனனின் மகன் லக்ஷ்மண குமாரனுக்கு அவளை மணமுடிக்க சதி செய்கிறார்கள். கிருஷ்ணனின் விருப்பம் அபிமன்யு பக்கம் இருப்பதால் அவரது வழக்கம்போல சிலபல சிலுமிஷங்களைச் செய்து, பீமனின் மகன் கடோத்கஜன் உதவியுடன் காதலர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். –சில வரிகளில் சுருக்கமாகச் சொன்னால் கதை இவ்வளவே. ஆனால் ஒவ்வொரு முறை படமானபோதும் அதிசய மாயாஜாலக் காட்சிகளும், இனிய பாடல்களும் அமைவதற்குத் தோதான களமாக அமைந்த கதை இது.