மகாத்மாவும் மகா ஆத்மாவும்”
மகாத்மாவும் மகா ஆத்மாவும்”
பகவான் ரமணர், மகாத்மா காந்தி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். காந்தி திருவண்ணாமலை வந்திருந்தபோது ரமண மகரிஷியை தரிசிக்க எண்ணியிருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போனது. மூன்று முறை காந்தி ரமணரை தரிசிக்க முயற்சி செய்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.
1948ல் மகாத்மா மறைந்தார் என்ற செய்தி நாடு முழுதும் துக்கத்தை ஏற்படுத்தியது. வானொலிகளில் தொடர்ந்து பஜனை, பிரார்த்தனைப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.
அதைக் கேட்ட பகவான், “தன் வாழ்நாள் முழுவதும் பிரார்த்தனை செய்தவருக்கு மக்களுடைய பிரார்த்தனை இது” என்றார் தழுதழுத்த குரலில்.
மறுநாள் காலை, பகவான் காலை நடைக்காக வெளியே செல்லும் போது ஒரு பத்திரிகை நிருபர், காந்திஜியின் மறைவு பற்றி பகவானின் கருத்தைக் கேட்டார். அதற்கு பகவான் மிகவும் உணர்ச்சி மிக்க குரலில், “மகாத்மா காந்தியின் மறைவுக்காக ஒவ்வொரு மனிதனின் இதயமும் துக்கப்படுகிறது. துக்கப்படாமல் யார் இருக்கிறார்கள், யாரால் இருக்க முடியும்?” என்றார்.
அவர் உலா முடித்து திரும்பி வரும்போது, காந்திஜிக்கு மிகவும் பிடித்த “வைஷ்ணவ ஜனதோ” பாடல் வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அதைக் கேட்ட பகவானின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
மாலை 5 மணிக்கு ஆச்ரமத்தில் காந்திஜிக்காக சிறப்புப் பிரார்த்தனை, வழிபாடு நடைபெற்றது. பகவானும் அதில் கலந்து கொண்டார்.
மறுநாள் காந்தியின் மரணம் பற்றி பக்தர் ஒருவரிடம் “ம்ம். சுயராஜ்யம் கிடைத்து விட்டது. நீங்கள் ‘வந்தவேலை’ முடிந்து விட்டது. ஏன் இன்னும் இருக்கிறீர்கள்? போக வேண்டாமா? ஏற்கனவே தாமதமாகி விட்டது என்பது போல காந்தி அனுப்பப்பட்டு விட்டார்” என்றார் சோகத்துடன்.
பக்தர்களும் அதனை ஆமோதித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மாவை மகா ஆத்மாவால்தான் சரியாக அறிய இயலும் இல்லையா?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
(நன்றி : ரமணர் ஆயிரம் நூல், சூரியன் பதிப்பக வெளியீடு)
-அரவிந் சுவாமிநாதன்