அந்த வானத்தைப் போல….

 அந்த வானத்தைப் போல….

அந்த வானத்தைப் போல….
*
(கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி)
*

*
ஒரு மனிதனின் மரணத்தின் போது அவன் இந்த உலகத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்கான மதிப்பீடு நிகழ்கிறது. அவனைப் பற்றிய தங்கள் உணர்வை, அன்பைப் பகிர்ந்து கொள்ளும் மனிதர்கள் அந்தப் பிரிவை ஆற்றாது அழுது கண்ணீர் சிந்துவார்கள். சிலரது மரணங்களோ எந்த பாதிப்பையும் நிகழ்த்துவதில்லை. அதனால்தான் நாட்டுப்புறத்தில் ஒரு நுணுக்கம் சொல்வார்கள். ஒரு மனிதன் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவன் மரணத்திற்கு சென்று அங்கு அவரது இறுதி ஊர்வலத்தில் செல்பவர்கள் பேசும் பேச்சை கேட்டு விட்டு அதன் பிறகு முடிவு செய்து கொள் என்று.

இன்றைக்கு புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மரணத்தில் கூடி நிற்கும் மாபெரும் மக்கள்திரளும் கேட்கும் அழுகுரலும் அவரோடு பணியாற்றியவர்களின் பேட்டிகளில் அவர்கள் கூறும் அவர் பற்றிய நினைவுகளையும் கேட்டால் அவர் ஒரு அசாதாரண அன்பை தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதும், தன்னை வளர்த்த தமிழ் மக்கள் மீதும் செலுத்தி இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் உடல் ரீதியாகத்தான் மறைந்துவிட்டாரே தவிர அவருடைய புகழ் நீண்ட காலத்திற்கு அவரது ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கக் கூடியது என்பது தெரிகிறது .

திரைப்படங்களில் நடித்து ஏராளமான பணத்தையும் புகழையும் சேர்த்துக் கொண்டு, பின் பொதுமக்களிடமிருந்து விலகி இருக்கும் சாதாரண நடிகர் அல்ல அவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பே, நடிகராக இருக்கும்போதே தான் சேர்த்த பொருளையும் தன்னுடைய புகழையும் திரும்ப மக்களுக்கே செலுத்தி அதில் நிறைவு கண்டவர் விஜயகாந்த்.

ஒரு சிறிய உதாரணம்… என்னுடைய அனுபவத்திலிருந்தே கூறுகிறேன். 1992 இல் நான் சென்னை வந்தேன் மாதம் 300 ரூபாயில் அறை பிடித்துத் தங்கி இருந்த நாட்களில் காய்ச்சல் வந்து அதற்கான மருத்துவரை பார்க்க கூட வசதி இல்லாத ஒரு சூழல். அப்போது என் அறைக்கு அருகில் விஜயகாந்த் மருத்துவமனை இலவசமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலை ஆறு மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரு மருத்துவர் அங்கு வருவார். மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசம். அங்கே சென்று என் காய்ச்சலுக்கான மருந்தைப் பெற்றுக் கொண்டு சில நாட்களில் குணம் அடைந்தேன் . இது ஓர் உதாரணம்தான். என்னைப் போல ஏராளமானவர்கள் மருத்துவ வசதியைப் பெற்றார்கள்.

அதேபோல அவரைப் பற்றி யார் பேசினாலும் அவருடைய அலுவலகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டு வந்ததைக் மறக்காமல் குறிப்பிடுகிறார்கள். அதில் பலன் பெற்றவர்களும் ஏராளம்.

சொந்த செலவில் எண்ணற்ற திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். தையல் மிஷின், ஆட்டோ, சலவை செய்யும் பெட்டி, சைக்கிள், மூன்று சக்கர வாகனம் முதலியவற்றை வழங்கி ஆதரவற்ற குடும்பங்களில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்திருக்கிறார். பல மாணவ மாணவிகளுடைய கல்விக்கு நிதி வழங்கியிருக்கிறார். பசிக்கு உணவிட்டவரை உயிர் இருக்கும் வரை மறக்காத நன்றியுடைய மனிதர்கள் தமிழ் மக்கள். அதனால்தான் அவருடைய மரணத்திற்கு ஓடி வந்து கூடி நிற்கிற அனைவரும் அவருடைய இந்த மனிதத் தன்மையைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டி கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்துகிறார்கள்.

ஒரு திரைப்பட நடிகராக அவர் ஏற்ற பாத்திரங்கள் ஒரு எளிய மனிதனின் நிஜமான கோபங்களை வெளிப்படுத்தும் பாத்திரங்களாக அமைந்தன. அவருடைய தோற்றம் நம் வீட்டுக்கு அருகில் இருக்கிற மனிதர்களை அல்ல, நம் வீட்டிலேயே இருக்கும் ஒரு அண்ணனை நினைவுபடுத்தும் திராவிட முகம்.

கோபக்கார இளைஞனாக அவர் நடித்த அவருடைய ஆரம்பகால படங்களான ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சிவப்பு மல்லி’ , ‘ஜாதிக்கொரு நீதி’ , ‘நெஞ்சில் துணிவிருந்தால்…’ போன்ற படங்கள் அரசியலையும் சமூகப் பிரச்சினைகளையும் பேசி வெற்றி அடைந்தன. சாதிய பாகுபாடு , அதிகாரம் இவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் பொதுவுடமைச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் முகமாகத் திரையில் தோன்றினார். இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் நீதிக்காகப் போராடிய விஜயகாந்த்தின் இமேஜ் மளமளவென வளர்ந்தது.

ஆரம்ப காலத்தில் எது அவருக்கு மைனஸ் பாயிண்டாக இருந்தது என்று சிலர் சொன்னார்களோ அதுவே அவர் நடிக்க தொடங்கிய பிறகு பெரும் பிளஸ் பாயிண்டாக மாறிவிட்டது. அவருடைய கறுத்த நிறமுடைய கிராமத்து இளைஞனின் தோற்றம் இவர் நம்மில் ஒருவர் என்ற எண்ணத்தைத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியது. அவருடைய படங்கள் வெற்றி பெற்றால் அதனுடைய வீச்சு கட்டுப்படுத்தவே முடியாது என்று திரையுலகில் சொல்லப்படுவதுண்டு.
அந்த அளவுக்கு வசூலில் கொழிக்கும். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், வல்லரசு, சின்னக் கவுண்டர், வைதேகி காத்திருந்தாள், ரமணா என எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் …

கிராமத்து நாயகன் என்றால் விஜயகாந்த் அளவுக்கு இன்னொரு நடிகர் அவ்வளவு பொருத்தமாக இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் . ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற படங்களில் அவருக்கு அமைந்த கதாபாத்திரங்கள் அப்படி. ‘வைதேகி காத்திருந்தாள் ‘ திரைப்படம் அவரது அந்த வரிசைப் படங்களில் ஒரு கிளாசிக்காக அமைந்தது. வியாபார ரீதியான வெற்றி மட்டுமல்ல மறக்க முடியாத கதாபாத்திரங்களின் வரிசையிலும்அமைந்தது. இந்தப் படங்களில் எல்லாம் அவருக்கு அமைந்த பாடல்கள் காலத்தால் மறக்க முடியாத அழகான பாடல்கள்.

‘ஊமை விழிகளி’ல் ஒரு நடுத்தர வயது போலீஸ்காரராக நடித்தார். அது கண்ணியமிக்க தோற்றம் அதே சமயத்தில் ஆக்சன் இரண்டுக்கும் பொருத்தமாக அமைந்தது குடும்பத் தலைவனாகவும் பொறுப்பான போலீஸ் அதிகாரியாகவும் நிஜமாக தோற்றமளித்தார்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு திரை உலகில் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது விஜயகாந்த் அவர்களும் அவரது நண்பரான இப்ராஹிம் ராவுத்தரின் நிறுவனமான ராவுத்தர் ஃபிலிம்ஸூம். ஆர்.கே. செல்வமணி ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’ அருகியவை அதற்கான தொடக்கமாக அமைந்தது. அதன் பிறகு ஏராளமான திரைப் படக் கல்லூரியின் மாணவர்கள் இயக்குனர்களாகவும் ஒளிப்பதிவாளர்களாகவும் விஜயகாந்த் படங்களில் அறிமுகமாகி வெற்றி பெற்றார்கள். புதிய இயக்குனர்கள், புதிய கலைஞர்கள், பெரும் உயரங்களை தொடுவதற்கு விஜயகாந்த்தின் புதியவர்களை ஊக்கப்படுத்திய இந்த அணுகுமுறை பெரிதும் உதவியது. அது மட்டும் அல்ல… புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை வெள்ளித்திரை கண்டது.

அவரைச் சிறந்த மனிதர் என்று பாராட்டுவதற்காக அவரை ஒரு சாதாரண நடிகரை போல் சொல்வதுண்டு. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உண்மைத் தன்மையை உருவாக்குவதற்கு அவருடைய தோற்றத்தில், அவருடைய உடல் மொழியில், அவருடைய வசன உச்சரிப்பில் பெருமளவுக்கு மெனக்கெட்டு இருக்கிறார். அவை நடிப்பிற்கு இலக்கணம் கொடுத்ததா என்று கூற முடியாவிட்டாலும் பாத்திரங்கள் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைவதற்கு அவர் முயன்றிருக்கிறார் என்பதை உணர முடியும். அவரது உடல்மொழிக்கேற்ப சில முயற்சிகளாக செந்தூரப்பூவே பூந்தோட்ட காவல்காரன், சின்னக் கவுண்டர் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார். நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதுதான் நடிப்பில் முதல்மையானது. அதில் விஜயகாந்த் எந்தக் குறையையும் வைக்கவில்லை.

சண்டைக் காட்சிகளில் அதுவரை இல்லாத கடினமான சண்டைகளைக் கூட இலகுவாக செய்தார். அதுவும் அவரது கால்கள் மூலமாக நடத்தும் தாக்குதல்கள் பிரசித்தி பெற்றவை.

அப்படி எத்தனை கதாபாத்திரங்கள் ?

நேர்மையான போலீஸ் என்றால் முதலில் நினைவு கூறுவது விஜயகாந்த்தான். அவருடைய :சத்திரியனி’ல் டி.எஸ்.பி. பன்னீர்செல்வம், ஊமை விழிகளில் இன்ஸ்பெக்டர் தீனதயாள் , வல்லரசு என்று அவர் போலீஸ் வேடமட்ட பல படங்களைப் பட்டியலிட முடியும்.

‘சத்ரியன்’ திரைப்படத்தில்
‘நீ பழைய பன்னீர் செல்வமா வரணும் ‘ என வில்லன் அவரை அழைக்கும் வசனம் அவ்வளவு பிரபலம்.

அவருடைய ‘ரமணா’ நடு வயதில் ஒரு நடிகன் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்றால் வெற்றி பெற முடியும் என்பதற்கான உதாரணம்.
ஒரு கல்லூரி பேராசிரியராகவே வாழ்ந்தார். ‘மன்னிப்பு… தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை ‘ என்ற வசனம் இப்படத்தில் பிரபலம்.

அவருடைய வெள்ளை மனதுக்கும் பெருந்தன்மைக்கும் மிகப் பொருத்தமான
‘அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே’ என்ற அந்த பாடலின் பல்லவி அமைந்தது. சில வார்த்தைகள் சிலருக்கு கச்சிதமாகப் பொருந்தும். கேப்டன் என்ற அடைமொழி விஜயகாந்த்க்கு மிகச் சரியாகப் புரிந்து இருக்கிறது என்று சூப்பர் ஸ்டார் சொல்லியதைப் போல இந்த ‘அந்த வானத்தைப் போல’ என்ற வார்த்தையும் விஜயகாந்துக்கு பொருந்தியதை ‘வானத்தப் போல’ படத்தின் மாபெரும் வெற்றி நிரூபித்தது.

மதுரையில் ஒரு கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த ஒரு மனிதன் 150 படங்களில் நடித்து நடிகர் சங்கத் தலைவராக ஆகி, அதுவரை நடிகர் சங்கத்தில் யாரும் செய்ய முடியாத மிகப் பெரும் பணியான நடிகர் சங்கக் கடனை அடைத்தார். ஈழத்தமிழர் போராட்டத்தின்போது தமிழகத்தில் இருந்து திரையுலகின் ஆதரவு குரலை ஒன்றுதிரட்டி எழுப்பினார். காவிரி நீர்ப் பிரச்சனையின் போது நெய்வேலையில் திரையுலகின் சார்பாக ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை பொறுப்பேற்று நடத்தினார் . இவை எல்லாம் அவரது தமிழ் உணர்வு ஆழமானது என்பதை உலகிற்கு உணர்த்தின.

நலிந்த கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அப்போது அறிமுகப்படுத்தினார்.

நடிகர் சங்கத்தின் தலைவராக பணியாற்றியபோது உண்டான இந்த அனுபவங்கள் எல்லாம் அவர் அரசியல் நுழைவதற்கு படிக்கட்டாக அமைந்திருக்கலாம்.

பின் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பின்னர் எதிர்க் கட்சித் தலைவராக உயர்ந்தது என்று பல சாதனைகளை ஒரு தனி மனிதனின் வெள்ளந்தியான மனதின் மூலமாகவே சாதித்தார்.

அவருடைய கோபம் அவருக்கு ஒரு அடையாளமாகி போனது. ஒரு குழந்தையின் கோபத்தைப் போல அது அவரால் தடுக்க முடியாத ஒன்று. அதற்குப் பின்னால் இந்த உள்நோக்கம் இருந்ததில்லை. அதனால்தான் கோபக்கார இளைஞன் கதாபாத்திரம் அவரது ஆரம்பகால படங்களுக்கு இப்படி சரியாக பொருந்தி இருக்கும் போல.

திரை உலகில் நண்பர்கள் என்றால் விஜயகாந்த் இப்ராஹிம் ராவுத்தர் நட்புதான் பிரபலம். மதங்களைக் கடந்தது நட்பு முதல் தெரிந்தது. எளிய மனிதர்களின் உணர்வுகளை இந்த நிஜ முகம் கவர்ந்ததில் வியப்பில்லை.

‘சண்டக்கோழி’ படத்திற்குப் பிறகு
விஜயகாந்த் அவர்களுடன் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் பணியாற்ற கேப்டனை ஒரு முறை சந்தித்தேன். ‘வாத்தியார்’ என்று ஒரு கதையை அப்போது லிங்குசாமி கூறினார்.
அதற்கு பிறகு ஜி.ஜே. சினிமா நிறுவனத்தில் ஒரு முறை அவர் படத்திற்கு வசனம் எழுதுவதற்காக அழைத்தார்கள். நானே கூட ஒரு கதை அவருக்காக தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால் இவை எதுவும் நிகழாமல் போய்விட்டன. அவருடைய சரித்திரத்தில் இடம் பெறும்
வாய்ப்பு அமையாமல் போய்விட்டது.

எத்தனையோ பேரின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்திய விளக்காக விளங்கிய விஜயகாந்த் அவர்கள் நிரந்தர ஒளியில் நிலைத்து நிற்கச் சென்று விட்டார். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக நிலைத்து நிற்பார் என்பது உறுதி. அவருக்கு என் அஞ்சலிகள்.
*
நன்றி: இனிய உதயம்/ ஜனவரி 2024

இயக்குனர் பிருந்தா சாரதி

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...