தாதாக்கள் பிரபஞ்சம் கூட்டணி – சிறுகதை | ஆர்னிகா நாசர்

 தாதாக்கள் பிரபஞ்சம் கூட்டணி – சிறுகதை | ஆர்னிகா நாசர்

வொண்டர்லான்ட் ஸ்டுடியோ. குளிர்பதன மூட்டப்பட்ட கேரவன்.

      ரெட்டணங்கால் போட்டு சரிவாய் அமர்ந்திருந்தார் சூப்பர் ஸ்டார் விமல் கிருஷ்ணா. வயது 72. நீரழிவு நோயால் நலிந்து மெலிந்த உடல். இடுங்கிய யானைக்கண்கள். கத்திமூக்கு. காக்டெய்ல் வாய். பல் செட்டின் செயற்கை பற்கள் ரின் மின்னல் கிளப்பின.

      விமல்கிருஷ்ணாவுக்கு எதிரே டைரக்டர் மாதேஷ் நின்றிருந்தான். நோயாளி முகம் பம்பை தலைகேசம். அறியாமை ஒளிக்கும் கண்கள் ரோமக்கட்டு அதிகம் இல்லாத பிசிறுதட்டிய தாடி. மாதேஷ் இதுவரை ஆறு படங்கள் எடுத்திருக்கிறான். ஆறுமே சூப்பர்டூப்பர் ஹிட் ஆறாவது படம் 1000கோடி வசூல்.

“சார்I சீனை பார்க்கலாமா?”

“சொல்லு…”

“நீங்க ஒரு டான் ஈஸிசேர்ல படுத்திருக்கீங்க. வலது கை வாக்கிங் ஸ்டிக்கை படுஸ்டைலா சுழற்றுறீங்க. வில்லன் டானின் அடியாட்கள் ஆயிரம் பேர் கத்தி கோடலி துப்பாக்கி ஏகே47 ராக்கட் லாஞ்சர் எல்லாம் தூக்கிக்கிட்டு உங்களை கொல்லவராங்க. நீங்க ஈஸிசேர்ல படுத்துக்கிட்டே அவங்களோட சண்டை போடுறீங்க. டோட்டலா பாலய்யா ஸ்டைல். உங்க வாக்கிங் ஸ்டிக் பட்டு வில்லன் டானின் ஆட்கள் அம்பதுபேரா நூறு பேரா சாமர்சாட் அடித்து சிதர்றாங்க. கார் கண்ணாடிகள் உடைஞ்சு தூள்தூளாகுது. தொடர்ந்து ரணகளப்படுத்திட்டு ஒரு பஞ்ச் டயலாக் உதிர்க்கிறீங்க.

“நான் படுவயலன்ட் தாத்தா.

உங்க மூஞ்சி முகரையை பேத்தா

பிறந்திருவீங்க காக்கா மூக்கா

நாலாபக்கமும் ரத்தம் தெறிக்கும் படுஷோக்கா”

விமல்கிருஷ்ணா கைதட்டினார். பல்செட்டை கழற்றி வைத்து விட்டு வாயை ‘நடிகர் பாண்டு’ செய்தார்.

திடீரென்று காட்சியமைப்புக்குள் ஒரு இடிஇடித்து ஒரு மின்னல் வெட்டியது.

நடிகர் மிஸ்கின் சைஸில் ஒரு தடியன் நின்றிருந்தான். யோகிபாபு தலைகேசம். தூக்கக்கண்கள் அடர் ஒட்டடைதாடி பல்துலக்காதவாய் கழுத்தில் தாயத்து கட்டி இருந்தான் பியர்தொப்பை சட்டையின் மேலிரு பட்டன்களை போடாமல் விட்டிருந்தான். சல்லடை ஓட்டைகள் கொண்ட பனியன். அழுக்கு கைலி கையில் ஒரு துருப்பிடித்த கத்தி வைத்திருந்தான்.

“நீதானே மாதேஷ்? நீதானே சூப்பர்ஸ்டார் விமல்கிருஷ்ணா?”

“ஆ.. ஆமாம்I”

“வீணாப்போனவன்களா… உங்க ரெண்டு பேரையும் கிட்நாப் பண்றேன்I”

“அய்யய்யோண்ணா… என்னை விட்ருங்க.. நான் திரும்ப கோயம்புத்தூருக்கு ஓடிபோயிர்ரேன் ஷார்ட் பிலிம் எடுத்து பிழைச்சிக்கிறேன்I”

விமல் கிருஷ்ணா இருமினார்.

“பாத்தீங்களா நான் ஒரு வியாதி கிழவன். பிபிசுகர் கொலஸ்டிரல் நுரையீரல் கோளாறு கல்லீரல் கோளாறு பார்கின்ஸன் எல்லாமே இருக்கு. என்னை விட்ருங்க ஹுக்கும்I”

“அடச்சீI  ரெண்டு பேரும் என் ஓட்டை ஸ்கூட்டிக்கு நடங்கI”

இருவரும் நடந்தனர். “கிட்நாப்பர் தம்பி உங்க பெயர் என்ன?”

“என் பேரை கேட்டு ரேஷன்கார்டு போட்டு ஒருபாமாயில் பாக்கட் தரப் போறியா?”

“இல்ல.. நீ மேட்டாள் தனராஜ்க்கு சொந்தக்காரனா இருப்பியோன்னு ஒரு சந்தேகம்I”

“எனக்கு சொந்தக்காரன்களே கிடையாது. என் பெயர் தேசிங்கு ராஜாI”

ஸ்கூட்டியில் முதலில் தேசிங்கு அடுத்து விமல்கிருஷ்ணா அடுத்து மாதேஷ் நாலாவதாக தேசிங்கின் அல்லக்கை உட்கார்ந்தனர்.

ஸ்கூட்டி உருமி பாய்ந்தது.. ஒரு குடிசை அருகே போய் ஸ்கூட்டி நின்றது குடிசைவாசலில் நெத்திலி கருவாடு காயப்போடப்பட்டிருந்தது.

விமல்கிருஷ்ணா மாதேஷ் கைகால்களில் இரும்பு சங்கிலியை சுற்றி பூட்டினான் தேசிங்கு.

“மாதேஷ் உன் ரசிகர்கள் எல்லாம் எம்சியூ என்கிறார்களே அப்டின்னா என்ன?”

“மாதேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்I”

“புரியல..”

“நான் சொல்றதை வெளில சொல்லிராத என் மொத படத்ல வந்த கதாபாத்திரம் என் அஞ்சாவது படத்திலும் வரும். எனக்கு கற்பனை வறட்சி அதிகம் அந்த கதைய தூக்கி இந்த கதைல போடுவேன். இந்தக்கதைய தூக்கி அந்த கதைல போடுவேன். மீந்த இட்லி உப்புமா ஆகும். சாம்பரை இறுத்து ரசம் ரெடி பண்ணுவேன். எப்படியாவது படம் ஹிட்டடிச்சா போதும் எனக்கு. இது தெரியாம ரசிகக்குஞ்சுகள் மாதேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்னு வடை சுடுதுகI”

“உன் படத்ல ஹீரோ வில்லன் துணை கதாபாத்திரங்கள் எல்லாமே சதா தம்மடிக்குதுகளே.. சிகரட் கம்பெனி விளம்பரமா?”

“அதான் படம் முழுக்க முழுக்க புகைபிடித்தல் உடல்நலத்துக்கு கேடு என்று எச்சரிக்கை போடுரோமே.. ஹிஹி..”

“உன் ஆறுபடங்களில் போதை பொருள் கடத்தல்தான் மெயின் தீமாக இருக்கு. போதை பொருட்களுக்கான விளம்பர தூதரா நீ?”

“மத்த க்ரைம் சப்ஜக்ட் எல்லாம் சாய்ஸ்ல விட்டுட்டேன். கதையா முக்கியம்? டபார் டுபார் ப்யூங்ப்யூங் படங்பாங் டிஸ்யூம் டிஸ்யூம் சதக்சதக் டட்டளாஷ் இருந்தா பத்தாது?”

“தேசிங்கு பிரதர்I எங்களை எதுக்கு கிட்நா பண்ணீங்க?”

“எனக்கு உங்க மேல பயங்கர கோபம்டா.. டான் அல்லது தாதா பத்தி படம் எடுக்றீங்களே அதுல ஒரு துளியாவது உண்மை இருக்கா?”

“என்ன உண்மை வேணும்?”

“ஒவ்வொரு டானும் அய்நூறு அரநூறு அடியாள்கள் துப்பாக்கி வெடிகுண்டு மகேந்திரா தார்ஜீப் சகிதம் வலம் வருகிறதா காட்றீங்களே.. அப்படி எந்த டான்டா வாழுரான்.. உங்க கதைகள் படி ஒரு டான் வாழனும்னா தினசரி அடியாட்கள் மெயின்டன்ஸ் செலவே அஞ்சுலட்சத்தை தாண்டும். மாசத்துக்கு ஒன்றரை கோடி. வருஷத்துக்கு 18கோடி. நாங்க எங்க போய் பிச்சை எடுக்றது? எல்லாம் அடியாளுக்கும் துப்பாக்கி கொடுக்கனும்னா நாங்க சொந்தமா துப்பாக்கி தொழிற்சாலைதான் நடத்த வேண்டி வரும். நாங்க வாழ்றது ஒருசாக்கடை பெருச்சாளி வாழ்க்கை. கஞ்சா பொட்டலம் விப்போம். கள்ளச்சாராயம் காய்ச்சி முட்டு சந்துல விப்போம். எங்க மாத டர்ன் ஓவர் ஒரு லட்சத்தை தாண்டாது. நாங்க பொதுவா தனியாதான் செயல்படுவோம். அபூர்வமா எங்க கூட ரெண்டு மூணு அல்லக்கைகள் இருப்பாங்க. எங்க மெயின் வெப்பனே கத்திதான்டா…”

“சினிமா கொஞ்சம் மிகைபடுத்திதானே காட்டும்?”

“கொஞ்சமாகவா மிகைப்படுத்றீங்க…. டானை காட்டும் போதெல்லாம் ஒரு கில்மா பிகரை வைச்சு ஒரு அயிட்டம் டான்ஸ் போடுறீங்க. ரியல்லைப்ல நான் அயிட்ட்ம் டான்ஸே பாத்ததில்லைடா. எங்களுக்கு ஒரு விதவைப்பெண் கணவனால் கைவிடப்பட்ட பெண் விலைமகளிர் பூமர் ஆன்ட்டிகள் கிடைப்பதே பெருசு…”

“அச்சச்சோ பாவமே…”

“எழுபத்திரெண்டு வயசுல தாதா காட்றீங்க.. டான்கள் எல்லாம் குத்துபட்டோ வெட்டுபட்டோ லாக்கப்ல மிதிபட்டோ என்கவுன்டர்ல சுடப்பட்டோ அல்பாயுசுல செத்துப் போயிருவாங்கடா..”

“ஹிஹி.. ஓஹோI”

“டான்கள் எல்லாம் நூறு இருநூறு கார்களோட எங்க போனாலும் தம்பிமலை மாதிரி ஊர்கோலம் போறாங்க. இத்னி காரையும் மெயின்டைன் பண்ணனும்னா ஒரு பெட்ரோல் பங்கே டான் சொந்தமா வச்சிருக்கனும்..”

“காட்சி ரிச்சா அமைய இதெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. கர்மத்த..”

“டானோட இரகசியம் அவனுடைய எதிரி டானுக்கோ போலீசுக்கோ தெரிஞ்சிட்டா டான் சந்தேகப்படுற அடியாளை டப்பு டுப்புன்னு சுட்டு அல்லது ஆசிட்ல முக்கிக் கொல்ரதா காட்றீங்க.. அப்படி ஒரு அடியாளையும் டான் கொல்ல முடியாது. கொன்னா மத்த அடியாள்க எல்லாம் போடா மயிருன்னு ஓடிருவாங்க அல்லது டானை போட்டுத் தள்ளிருவாங்க. டான்னு சொல்லப்படுறவன் பர்ஸ்ட் அமங் ஈக்குவல்தான்டா…”

“புரியுது புரியுதுI”

“பிக்பாக்கட், செயின் ஸ்நாச்சிங், ஹவுஸ் பிரேக்கிங் செய்யுற பிசிக்கல் பிட்னஸ் போன பிறகுதான் சொண்டிசோறு கஞ்சா பொட்டலம், கள்ளசாராயம் விக்கறோம். போலீஸும் நாங்களும் மாமன் மச்சான் மாதிரி தொழில்முறை பங்குதாரர்கள். எங்களுக்கும் அவங்களுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் நாங்க யூனிபார்ம் போடல அவங்க யூனிபார்ம் போட்டுருக்காங்க. எங்களின் குற்றதன்மை கொண்ட உறவை இதுவரை சித்தரித்து எந்த தமிழ்சினிமாவும் வரவில்லை..”

“உன் கதையை சொல்லு படமா எடுத்திரலாம்..”

“எப்ப பாத்தாலும் யாராவது உங்களுக்கு ஸ்பூன் மூலமாகவோ கை மூலமாகவோ ஊட்டனும். சொந்தமா சுபமா எடுத்து தின்னத்தெரியாது உங்களுக்கு. மூளை சோம்பேறி அறிவு திருடர்கள்I”

“திட்டாதே.. அழுதிருவோம்..”

-தொடர்ந்து முப்பது நாட்கள் மாதேஷும்  விமல் கிருஷ்ணாவும் அந்த குடிசையில் கைதிகளாக பூட்டி வைக்கப்பட்டனர்.

பழையசோறும் மீன்குழம்பும் மூன்று வேளைகளும் இரவில் கடற்கரை மணலில் மலம் கழிப்பு.

கல்லூரி மாணவர்கள் கஞ்சா பொட்டலம் வாங்கி சென்றனர். போலீஸ் மாமூல் வாங்கி சென்றது. முப்பது நாட்களும் குளிக்காமல் மாதேஷும் விமலும் கப்படித்தனர்.

இருவரையும் அண்ணாசாலையில் விடுவித்து “இனிமேலாவது  ரியல் தாதா படங்கள் எடுங்கடா” என்றான் தேசிங்கு.

-‘எட்டிலிருந்து எண்பது வரை பட ஷுட்டிங். விமல்கிருஷ்ணாதாத்தா தாத்தா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நம்மை பார்த்து சிரித்து ‘நோமோர் தாதாக்கள் சினிமாட்டிக் பிரபஞ்சம்’ என்கிறார் விமல்கிருஷ்ணா.

(முற்றும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...