“பல்லவியே சரணம்” – சிறுகதை |இராஜலட்சுமி

 “பல்லவியே சரணம்” – சிறுகதை |இராஜலட்சுமி

 

(நகைச்சுவை சிறுகதை)

அனுபல்லவி,  சரண்யன்  இவர்களின் காதல்,  கலாட்டாவில் துவங்கி கவிதை போல எப்படி கனிந்தது? அதாங்க இந்த கதை.  வாங்க முதல்ல இவங்க குடும்பத்தை பத்தி சொல்லிடுறேன் நான் வசிக்கிற குமரன் காலனியில தான் இவங்களும் குடியிருக்காங்க. என் வீட்டு பக்கத்து வீடுதான் அனுபல்லவி, அவ அப்பா அம்மா,  தாத்தா பாட்டி மற்றும் தங்கச்சி பவித்ராவோட குடி இருக்கிற வீடு.  அவங்க வீட்டுக்கு நேர் எதிர் வீடு தான் சரண்யன்  தன் அப்பா அம்மா  மற்றும்  லேபரடார்  வகை  செல்ல  நாய்  ரங்குடுவோட   இருக்கிற வீடு.   நான் இந்த காலனிக்கு 12 வருஷம் முன்னாடி தான் வந்தேன்.  சரண் பிறந்ததுல இருந்து 24  வருஷமா அவங்க இதே வீட்லதான் இருக்காங்க.  இந்த பல்லவி பொண்ணு இருக்காளே அவங்க குடும்பம் இப்பதான் ரெண்டு வருஷம் முன்னாடி இங்க வந்தாங்க.  ஏற்கனவே இந்த வீட்ல இருந்த நரசிம்மாச்சாரி கிட்ட இருந்து வீட்ட விலைக்கு வாங்கிட்டு வந்துருக்காங்க.  நரசிம்மாச்சாரி அவர் பார்யாளோட ஸ்ரீரங்கத்துக்கே போய் செட்டில் ஆயிட்டாராம்.   பல்லவி அம்மாவுக்கும் சரண்யன் அம்மாவுக்கும் நல்ல சிநேகம்.  வத்த குழம்பும்,  வாழைப்பூ  பருப்பு உசிலியும், எவர்சில்வர் டப்பாக்கள்ல எதிரும் புதிரும் போயிண்டு  வந்துண்டுதான் இருந்தது. பல்லவி காலேஜ்ல செகண்ட் இயர்  பிஎஸ்சி  மேத்தமேடிக்ஸ் படிச்சிட்டு இருந்தா.  அவ தங்கை பவித்ரா பிளஸ் ஒன்.   சரணுக்கு இன்ஜினியரிங் முடிச்சுட்டு ஒரு நல்ல கம்பெனியில் கேம்பஸ் மூலம் வேலை கிடைச்சிருந்த சமயம் அது.

ஆரம்பத்துல பல்லவி, சரண்யன் ரெண்டு பேரோட வீட்டாரும் ரொம்ப சுமூகமா தான் இருந்தாங்க, ஆனா ரங்குடு தான் பல்லவி வீட்டாருக்கு ஒரு பெரிய வில்லனா இருந்தான்.

ரங்குடு 50 நாள் குட்டியா இங்க வந்ததுல இருந்து எங்களோடல்லாம் அவனுக்கு சிநேகம். அதனால எங்ககிட்ட வாஞ்சையா வாலாட்டுவான்.  நரசிம்மாச்சாரி கூட அவனைத் தொட மாட்டார் என்றாலும்,  ‘ரங்குடு’ என்கிற பேரு அவருக்கு ரொம்ப இஷ்டம்,  அதனால வரப்பையும்  போறப்பையும் “என்னடா ரங்குடு, சாப்டியா, தூங்கிறியா, விளையாடுறியா” அப்படின்னு ஏதாவது அவன் கிட்ட அன்பா பேசிட்டே இருப்பார்.  அவனுக்கும் அவர் அடிக்கடி வாங்கி தர “மில்க் பிக்கிஸ்”-னால அவரோட தனி நட்பு, பிரேமை.  சடேர்னு அவர் வீட்டைக் காலி பண்ணி போனத அவனால சாதாரணமா எடுத்துக்க முடியல,  போறாத குறைக்கு புதுசா குடி வந்த  பல்லவி குடும்பத்தார் வேற அவன எப்ப பார்த்தாலும் “ஐயோ நாய், நாய்“-னு கேவலமா பேசினது அவனுக்கு சுத்தமா புடிக்கல.  அதனால அந்தக் குடும்பத்தையே வைரியா பார்க்க ஆரம்பிச்சுட்டான்.  அவன் எப்ப ‘வாக்கிங்’ போக வெளியே வந்தாலும் நேரா எதிர்வீட்டு வாசலுக்கு போய் நனைக்காம மறு வேலை பார்க்க மாட்டான்.  அவங்க வீட்டு மெயின் கேட்ட அவங்களே திறந்துண்டு போனாலும் இவன் குரைத்து குரைத்து கடுப்பேத்துவான்.  என்னதான் இரு வீட்டாரும் சுமூகம் போல காட்டிண்டாலும் இந்த “ரங்குடு” மேட்டர் ஒரு நீரு பூத்த நெருப்பா தான்  கனன்று கொண்டிருந்தது.

பெருசுகள் நட்பா இருந்த மாதிரியே சிறுசுகளும் நட்பா ஆரம்பிச்சு, அப்புறம் அதுவே பல்லவி-சரண் இடையில காதலா மாறிடுச்சு.  இது பல்லவி தங்கச்சி பவித்ரா குட்டிக்கு மட்டும் தெரிஞ்சிருக்கு.  அதுவும் பெரிய அமுக்குளி.  இதைப்பற்றி யாருக்கும் மூச்சு விடல – அக்காவும் தங்கையும் கூட்டுக்களவாணி.  நம்ம சரண் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்-ல புலி,  பிளஸ் டூ-ல ரெண்டுலயும் சென்டம்.  அதனால பவித்ராவுக்கு அவன் தான் இந்த ரெண்டு சப்ஜெக்ட்லயும் இலவச ட்யூஷன் வாத்தியார்.  பல்லவி கணக்குலையும் கம்ப்யூட்டர் சயின்ஸ்லையும் கெட்டி,  அதனால பவித்ராவுக்கு நாலு சப்ஜெக்ட்க்கும் நல்ல உதவி கிடைச்சுப்போச்சு.  படிப்பில் ரொம்ப ஆர்வம் அவளுக்கு. ஸ்டேட் ரேங்க் எடுக்கிற முயற்சியில இருந்தா.  அக்கா – சரண் காதல் பத்தி வெளியே தெரிஞ்சுட்டா அவங்களோட உதவி கெட்டுப் போயிடுமோன்னு ஒருவேளை கம்முனு இருந்தாளோ என்னவோ?  இந்த காலத்து பசங்களுக்கு சாமர்த்தியம் ரொம்ப அதிகம் இல்லையா?

சரி,  நாம இப்ப மறுபடி ரங்குடு மேட்டருக்கு வருவோம்.  ஒரு நாள் காலங்காத்தால பல்லவியோட பாட்டி வசந்தா மாமி, மூக்குக் கண்ணாடி போட்டுக்காம பால் பாக்கெட் எடுக்க ‘கேட்’ கிட்ட  வந்துட்டாங்க.  பால் பெட்டியில இருந்து பால் பாக்கெட் எடுக்கும் போது கை தவறி கீழே விழுந்துடுச்சு.  அதே நேரம் – வாசப்பெருக்க வந்த வேலைக்காரி சரியா  மூடாம திறந்து போட்டதால, கேட்டத் தாண்டி பாட்டியோட  சேர்ந்து பால் பாக்கெட் எடுக்க வந்துட்டான் நம்ம ‘ரங்குடு’.     கண்ணாடி போடாததால அவன் சூப்பர் ஸானிக் ஸ்பீட்ல வந்தத மாமி கவனிக்கல.  மாமி கையும் ரங்குடு பல்லும் ஒண்ணா பால் பாக்கெட்ல பட,  அவ்வளவுதான் மாமி அலறின அலறல்ல காலனியே திரள, அதுக்குள்ள  பயந்து போன  ரங்குடு தெருவைத் தாண்டி மெயின் ரோட்டுக்கு நாலு கால் பாய்ச்சல்ல ஓடிட்டான்.

          பல்லவி வீட்டு ஆளுங்களுக்கு  மாமி கைல ரங்குடுவோட பல் பட்டு ஒரு பொட்டு ரத்தம் வந்தது பார்த்து ஒரே பதட்டம்.  சரண் வீட்டு ஆளுங்களுக்கு ரங்குடு தெருவை தாண்டி மெயின் ரோட்டுக்கு ஓடிட்டானே ‘பஸ் ரூட்’ ஆச்சே அப்படிங்கற பதட்டம்.  “ரங்குடு டேய் நில்லுனு” கத்திண்டு சரணும் அவனோட அப்பா ராகவனும் ஓட,  சரண் அம்மா ஆனந்தி எதிர் வீட்டு மாமியின் கைக்காயத்தைப் பார்த்து ஆறுதல் சொல்வதாக நினைச்சுண்டு,  ” ஒண்ணும் இல்ல மாமி பயப்படாதீங்கோ..  லேசா தான் பட்டுருக்கு..  ஒரு TT இன்ஜெக்கஷன் போட்டால் போதும்..  ரங்குடுவுக்கு நாங்க எல்லா ஊசியும் போட்டுருக்கோம்.. ஆனாலும் அவன் இப்படி பயந்து போய் பஸ் போற பாதையில் ஓடினதே இல்லை..  நேக்கு  அவன் சேஃபா திரும்பி வரணுமேனு பதட்டமா இருக்கு..” இப்படி அசட்டு பிசட்டுன்னு உளறுகிறாள்.

அவள் அப்படி சொல்லி முடிச்சது தான் தாமதம்,  பல்லவியின் அப்பா ஸ்ரீராமுக்கு அதுவரை அடக்கி வச்ச கோபம் தலைக்கு ஏற கத்திட்டார் போங்கோ – “என்ன மாமி,  மெண்டல் மாதிரி பேசறேள்?  எங்க அம்மா கையில ரத்தம் கொட்டுறது.  அந்த பிசாசு பிடிச்ச நாய பத்தியே கவலைப்படறேளே? எங்க அம்மாவ ஊசி போட்டுக்கோன்னு சாதாரணமா சொல்றேள்?  கடிக்கிற நாய  வளர்க்கறது மட்டுமில்லாம இப்படி திறந்து விட்டுட்டு வேடிக்கை பாக்கறேள்?  நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்.  இனி முடியாது,  இப்பவே கார்ப்பரேஷன்-ல கம்ப்ளைன்ட் பண்ணி அதை ஒழிச்சு கட்டிட்டுத்தான் மறு வேலை” .  அன்னைக்கு அவரோட ராசிக்கு சந்திராஷ்டமம் போல,  நாக்குல வினை.  ஆனந்தி அவரோட ரௌத்திர  ரூபத்தை பார்த்து பயந்ததோட,  பிள்ளை போல வளர்க்கும் ‘ரங்குடு’வை ஒழிப்பேனேன்று சொன்னதைக் கேட்டுத் துடித்துப் போய்விட்டாள். “வாயில்லா ஜீவனை இப்படி  வையரேளே?”  துக்கம் தொண்டை அடைக்கப் புடவைத் தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு தன் வீட்டுக்குள் ஓடும் மனைவியை பார்த்தவாறு புயல் வேகமாக வருகிறார் சரண் அப்பா ராகவன்.  அவர் பின்னாலேயே, ரங்குடுவை   அலேக்காக தூக்கியபடி சரண்யன் உள்ளே போகிறான்.  ஐந்து நிமிடத்திற்குள் பெரிய சத்தம் போட்டபடி வெளியே வருகிறார் ராகவன்- “யோவ்,  நீர் என்ன  மேயராங்காணம்?  என் ஆம்படயா  கிட்ட எப்படியாக்கும் நீர் அதிர்ந்து பேசுவீர்? ( கூடியிருந்த  அக்கம் பக்கத்தவர்கள் பக்கம் பார்த்து) இவாள்லாம் இங்க வருஷக்கணக்கா இருக்கா,  யாராவது ஒருத்தர ரங்குடுவால தொல்லைன்னு,  ஒரு வார்த்தை சொல்ல  சொல்லுமே?  நீர் என்னமோ வந்த நாள்லருந்து நாய் நாயின்னு கரிச்சு கொட்டிட்டு இருக்கீர். இன்னைக்கு உமக்கு காரணம் கிடைச்சுப்போச்சு..  உம்மால ஆறதப் பாரும்..  இனி உம்ம மூஞ்சில கூட நாங்க முழிக்க மாட்டோம்..  மரியாதை கெட்ட குடும்பம்”  கத்திவிட்டு  கோபமாகத் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு உள்ளே போகிறார் ராகவன்.  ஸ்ரீராம் தன் தாயாரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போகிற அவசரத்தில்,  காட்டுக் கத்தலாக கத்தும் ராகவனை முறைத்து விட்டு, தனது ஆக்டிவாவை  முடுக்கிக்கொண்டு  போய்விட்டார்.

அன்னைக்கு ஆரம்பிச்ச விரோதம் கிட்டத்தட்ட  ஒண்ணரை வருஷமா நீடித்துண்டு தான் இருக்கு. ஆனா இந்த இரண்டு இளசுகளும் அப்பா அம்மாவுக்கு நேராக மூஞ்சியைக் கடு கடுன்னு வச்சுண்டு திரியுங்கள்.. அவங்க  தலை மறைஞ்சாச்சுன்னா, முகம் மலர மலர பார்த்துக் கொண்டு கண் சிமிட்டிக் கொள்வதை நானே பல தடவை  பார்த்துருக்கேன்.  இந்த ரெண்டு வீட்டு சண்டையில, காதலர்களை விட அதிக பாதிப்புக்கு உள்ளானது பவித்ராகுட்டி தான்.  பிளஸ் 2-ல கணக்குல மட்டும் தான்  சென்டம்.  பிசிக்ஸ், கெமிஸ்ட்ரியில தல 3,  4 மார்க் போயிடுத்து. சரண் மட்டும் பாடம் எடுத்திருந்தால் மூன்று சென்டம் நிச்சயம் போட்டு இருப்பாள் குழந்தை.

இது பற்றி பல்லவி அம்மா வசுதாவுக்கும் ரொம்ப குறைதான்.   “நம்மாத்து  கேட் தொறந்து கிடந்ததால தானே அந்த நாய் உள்ள வந்தது?.  கண்ணாடி இல்லாம அப்படி என்னத்துக்கு காலங்காத்தால பால் எடுக்க போகணும்?  நான் போக மாட்டேன்?  இத்துனூண்டு ரத்தம் வந்தது; என்னமோ அரை லிட்டர் போனாப்புல குதிச்சுட்டார்.  அந்த பையன் நம்மாத்து பவி குட்டிக்கு எவ்வளவு நன்னா பாடம் சொல்லிண்டு இருந்தான்.  ஆனந்தி ரொம்ப நல்லவோ, பாவம்! இவர்தான் தேவையில்லாதைக்கு ருத்ர தாண்டவம் ஆடி அவளை அழப் பண்ணிட்டார்.  நாலு மனுஷாளோட சேர்ந்து வாழ தெரியாததுகள்..  இதுகளால எனக்கும் என் பொண்களுக்கும் தான் திண்டாட்டம்”.  இப்படி – தனக்கு இரண்டும் பெண்ணாக பிறந்த போது,  தன் மகளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என்ற மிதப்பில் “சுருக் சுருக்” என்று குத்திப் பேசிய மாமியாரையும்,  அம்மா கோண்டுவான புருஷனையும் திட்டுவதற்கு, எதிர் வீட்டை சாதகமாக பயன்படுத்துவாள் வசுதா.  நாளப் பின்ன தங்கள் காதல் விஷயம் வெடித்தால் அம்மா ஓட்டு நிச்சயம் தனக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து பல்லவி, தங்கையைப் பார்த்து சமிக்கை செய்து மகிழ்வாள்.  ஆனால் அப்பாக்கள் இருவரும் எலியும் பூனையுமாக காலனி மீட்டிங்கில் கூட வாக்குவாதம், சண்டை என தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆச்சு!  பல்லவியும் படிப்பு முடித்து வேலைக்கு போய் விட்டாள்..  அவளுக்கு ஜாதகம் எடுக்கலாம் என்று பாட்டி தாத்தா சொல்லியாச்சு.  அவளும் சரண் கிட்ட இது பத்தி ரகசியமா சந்திக்கும் போது சொல்லிவிட்டாள்.  என்ன செய்வது என்று புரியாமல் இளசுகள் இருவரும் ஒரு வாரமாகவே ரொம்ப மனக் கவலையோடு தான் இருக்கிறார்கள்.

அந்த வாரம் ஞாயிறு அன்று  பல்லவி – பவித்ராவின் மாமா வெங்கடேசன் மகளுக்கு திருவனந்தபுரத்தில் திருமணம்.  அண்ணன் மகள் கல்யாணம் என்பதால் வசுதா திங்கட்கிழமையே பவித்ராவை கூட்டிக்கொண்டு ட்ரெயினில் போய்விட்டாள்.  வெள்ளி மாலை ஃப்ளைட்டில் பல்லவியும் ராகவனும் கிளம்பி விட்டனர்.  வயது மூப்பு காரணம் காட்டி ராகவனின் பெற்றோர் போகாமல் வீட்டிலேயே தங்கி விட்டனர். ஏதோ தங்களால் முடிந்ததை சமைத்து சாப்பிட்டு பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் கிழடுகள். இரண்டு நாட்களாக, பல்லவி முகம் பாராமல் சரண் சந்திர கிரகண  நேரத்து நிலா மாதிரி சுற்றிக் கொண்டிருக்கிறான்.

ஞாயிறு காலை  ஏழு மணிக்கு,  ரங்குடு ஓயாமல் குரைப்பது கேட்டு சட்டென்று கண்விழிக்கிறான்  சரண்.  ரங்குடுவின் குரல் எதிர் வீட்டு பக்கத்தில் இருந்து வருகிறது.  அம்மா பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்க, அப்பா வாக்கிங் போய் இருக்க,  நிலைமையின் விபரீதம் புரிகிறது சரணுக்கு. “அய்யய்யோ,  ரங்குடு மறுபடி சொதப்பிட்டியாடா?” தலையில் அடித்துக் கொண்டு போர்வையை உதறிவிட்டு வெளியே ஓடுகிறான். அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு மயக்கத்தையே தந்து விட்டது.  ஆம்! பவித்ராவின் பாட்டி அவர்கள் வீட்டு கேட் அருகே பேச்சு மூச்சின்றி கீழே கிடக்க, பக்கத்தில் நின்றபடி விடாமல் குரைத்துக் கொண்டிருக்கிறான் ரங்குடு.  பின்பக்க அறையிலிருந்து வாக்கர் வைத்து மெல்ல பாதி வீடு கடந்து பதறியவாறு வந்து கொண்டிருக்கிறார் தாத்தா மாதவாச்சாரி.  அதற்குள் துள்ளி நாலு எட்டில் பாட்டிக்கு பக்கத்தில் போய் பார்க்கிறான் சரண்.  பாட்டிக்கு ரங்குடுவால் எந்த பாதிப்பும் இல்லை; அவர் ஏற்கனவே மயங்கி கிடக்கிறார் என்பதை புரிந்து கொள்கிறான்.  அதற்குள் தாத்தா படி இறங்க முடியாமல் பதட்டத்தோடு அலறுகிறார் ” என்னடாப்பா ஆச்சு  அவளுக்கு? “ .. “தாத்தா பாட்டி மயக்கம் போட்டு கிடக்கிறார்கள்,  ஆனா ரங்குடு ஒண்ணும் பண்ணல” சரண்யன் கலவரமாக பதில் தருகிறான். “ அது தெரியும்ப்பா,  அவ விழுந்தத நான் உள்ளே இருந்து பார்த்தேன்.  அதுக்கு அப்புறம் தான் உங்க ஆத்து நாய் ஓடி வந்தது.  உங்களை கூப்பிட தான் அது கொலைச்சிண்டு இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன்..  அவளுக்கு என்ன ஆச்சு?  இருக்காளா?  போயிட்டாளா?”  குரல் தழுதழுக்க கேட்கிறார் அவர். “ மூச்சு இருக்கு  தாத்தா பயப்படாதீங்கோ,  இதோ வந்துட்டேன்” சொல்லிவிட்டு ஓடி  போய் தன் வீட்டுக்  கார்  சாவியை எடுத்து வந்து, பாட்டியை அப்படியே தூக்கிப் போய் காரில் கிடத்தி,  வீட்டில் அணிந்திருந்த உள்டிராயர் கையில்லாத பனியன் உடையிலேயே,  அதற்குள் குளித்து முடித்து வந்துவிட்ட தன் தாயையும்  ஏற்றிக் கொண்டு,  ரங்குடுவை கேட்டுக்குள் விட்டு பூட்டி சாவியை தாத்தாவிடம் நீட்டி ” தாத்தா நான் பாட்டிய  ஹாஸ்பிடல் கொண்டு போறேன், உங்க வீட்ல எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டு, எங்கப்பா வந்தால் சாவியை கொடுத்து ஆஸ்பத்திரிக்கு வர சொல்லுங்க”  என்று கூறிவிட்டு பறந்து விடுகிறான்.

          பல்லவி குடும்பத்தார் வந்து சேர மறுநாள்  இரவு 9 மணி ஆகிவிடுகிறது.  ஆனால் அதற்குள்ளாக சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்ததால் பாட்டி பெரிய ஆபத்து எதுவும் இல்லாது ஒரு நாள்  “ஐ சி யு”  வில் இருந்து விட்டு வார்டுக்கு வந்து விட்டார்.  ரத்தக் கொதிப்பு அதிகமானது தான் மயக்கத்துக்குக் காரணம்.  பெரியவர் மாதவாச்சாரி, மகன் மருமகள், பேத்திகளிடம் நடந்த விபரங்களை ஸ்கிரீன் பிளே உடன் சொல்லி,  ரங்குடு மற்றும் சரண் இருவரும் சரியான சமயத்தில் தெய்வம் போல வந்து காப்பாற்றியதைப் பற்றி சிலாகிக்கிறார்.  கேட்டு விட்டு ஸ்ரீராம் கண்களும் பனித்து விடுகின்றன.  தன் ஆருயிர் தாயின் உயிரைக் காப்பாற்றிய அந்தப் பிள்ளையாண்டானின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறார்.  அவர் முதுகு குலுங்க அழுவதைப் பார்த்து மனசு கேட்காமல் சரணின் அப்பா ராகவன் அவரை ஆதரவாக அணைத்துத் தட்டித் தருகிறார்.  அவர்கள் மூவரும் ஒன்றாக காரில் வந்து இறங்குவதைப் பார்த்து சரணின் அம்மாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.  அதைவிட,  பல்லவி அப்பா கையில் இருந்த “மில்க் பிக்கி” பாக்கெட்டைப் பிரித்து ரங்குடுவுக்கு தன் கையாலேயே ஊட்டி விடுவதை அவள் கண்களால் நம்பவே முடியவில்லை.

அந்த ஒரு வாரத்தில் ஒன்றரை வருடம் தடைப்பட்ட சிநேகம் இரு குடும்பங்களுக்கு நடுவில் மறுபடி கரை புரண்டு ஓடியது.  அப்போதுதான்,  யாருமே எதிர்பாராத ஒரு வினாடியில் தன் அருகில் அமர்ந்திருந்த சரண்யனின் கையை வருடியப்படியே எல்லோராலும் ” சிடுமூஞ்சி”  என பெயர் பெற்ற வசந்தா  பாட்டி,  சரண் அம்மாவிடம் ” ஏண்டிம்மா!  நீங்க என்ன கோத்திரம்?  ஏன் கேட்கிறேன்னா,  எங்க பல்லவிக்கு வரன் பார்க்க போறோம்.  நேக்கு என்னமோ வெண்ணையக் கைல வச்சுண்டு நெய்க்கலையறாப்புல என்னத்துக்கு வெளியே பார்க்கணும்,  நம்ம சரணுக்கு கொடுத்துட்டா என்னனு தோண்றது? நீங்க எல்லோரும் என்ன சொல்றீங்க? ஏண்டாப்பா நோக்கு பல்லவியை பிடிச்சிருக்கா?”  என்று கேட்டதும் அந்த வீடு ஆனந்தத்தில் நிறைந்து விட்டது.       “மாமி என் புள்ள என் பேச்சை தட்ட மாட்டான் நீங்க கவலையே படாதீங்கோ”  என்கிறாள்  ஆனந்தி.  அதற்கு பாட்டி ” போடி அசடு.. அந்த காலம் எல்லாம் மலை ஏறிப் போச்சு..  இனிமே பல்லவியே சரணம்பான் பாரு உன் புள்ள..  நமக்கெல்லாம் ஒரு வேலையும் இல்லை”   இளசுகளைப் பார்த்து குறும்பாக சொல்கிறாள் பாட்டி..

பி. கு:  சரி!  இத்தனையும் சொல்ற நான் யாருன்னு நீங்க கேட்கவே இல்லையே?  நான் சரண்  வீட்டுக்கு பக்கத்து காம்பௌண்ட்லதான் ஜாகையா இருக்கேன்..  மத்தவங்க எனக்கு வச்சிருக்க பேரு ‘வேப்பமரம்’..  ரங்குடு நிறைய வாட்டி என் கால நனச்சிருக்கான் .. ஆனா எனக்கு அவன் மேல கோவம் எல்லாம் கிடையாது.  எப்படியோ ரெண்டு குடும்பமும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்.  எப்படி என் கதை சொல்ற திறமை?  பிடிச்சிருக்கா? 

 (முற்றும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...