பா.வே. மாணிக்க நாயக்கர் நினைவு நாளின்று

 பா.வே. மாணிக்க நாயக்கர் நினைவு நாளின்று

பா.வே. மாணிக்க நாயக்கர் நினைவு நாளின்று🐾😢

1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இன்ஜினியராக, அறிஞராக, குறிப்பா தமிழறிஞரா இருந்த பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்த தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

தங்கிலீஷ் உள்ளிட்ட ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைச்சுப் பார்ப்பது தேவையான ஒன்றாகும்.

மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் – முத்தம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். சென்னை கிண்டி இன்ஜினியரிங் காலேஜில் பயின்று, 1896ல் தமது 24ம் வயதில் பி டபிள்யூ-வில் கன்ஸ்ட்ரக்‌ஷன் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்தார்.

மறைமலையடிகளார் தொடங்கிய “தனித்தமிழ்” இயக்கத்துக்கு மாணிக்க நாயக்கர் புரவலராக இருந்துள்ளார். இவர் கட்டுமானப் பொறியியல் அறிஞராகப் பணியாற்றியபோதும் இவரது மரபுநிலை காரணமாக இயற்கையிலேயே தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார். மாணிக்க நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் செயற்பொறியாளராகப் பணியாற்றிய போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புலவர்களை வரவழைத்து இலக்கிய உரையாடல் நடத்துவது வழக்கம்.

1919ம் ஆண்டு தமிழ்ப் புலவர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். வட ஆந்திர நாட்டிற்கு இவர் மாற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் இந்த மாநாட்டைக் கூட்ட இயலவில்லை.

“தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும்,” என்னும் தமது கருத்தை 1931ம் ஆண்டுக்கு முன்பே நாயக்கர் கொண்டிருந்தார்.

“அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி” என்னும் தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.

நாமக்கல் கவிஞரின் ஓவியத் திறமையை அறிந்த பா.வே.மாணிக்க நாயக்கர் அவரை தில்லிக்கு அழைத்துச் சென்று, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளச் செய்தார். முடிசூட்டு விழா நிகழ்ச்சியை ஓவியமாகத் தீட்டிய நாமக்கல் கவிஞருக்குத் தங்கப்பதக்கம் கிடைக்கக் காரணமாகவும் இருந்துள்ளார். 1923 – 24ல் “செந்தமிழ்ச்செல்வி” இதழ் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து பல, தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அந்த இதழில் எழுதிவந்துள்ளார்.

“அறிவியல் தமிழ்” பற்றிய சில தொடர்கள் “தமிழகம்” என்னும் இதழிலும், “ஜஸ்டிஸ்” இதழிலும் வெளிவந்தன.

1913ம் ஆண்டு மாணிக்க நாயக்கர் நீண்ட விடுப்பில், தமது சொந்தச் செலவில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மான்செஸ்டர் தொழில் பள்ளியில் தமது “Calculograph” என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்தார்.

தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார். ஆந்திர நாட்டில் பணியாற்றியபோது “திராவிடர் – ஆரியர் நாகரிகம்” என்னும் சொற்பொழிவை தெலுங்கு மொழியில் உரையாற்றினார்.

மாணிக்க நாயக்கரின் சொற்பொழிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்தன. காரணம், ஆங்கிலேயரிடையே தமிழ் மொழியின் சிறப்பைப் பரப்ப வேண்டும் என்பதே.

“தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம்” என்னும் தமது நூலில் தமிழ் எழுத்துகளுக்கெல்லாம் முளை எழுத்து (Root letter)”ஓ” என்றும் அது எல்லா வடிவங்களும் பிறக்கக் காரணமானது என்றும் கூறி ஓங்காரத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஈ.வெ.ரா தமது கட்டுரை ஒன்றில் “பா.வே.மாணிக்க நாயக்கர் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்காக எவ்வளவோ செய்தார். அவரது ஓங்காரத்தின் மீது நான் கொண்டிருந்த வெறுப்பு அவரை முழுவதும் அறிந்துகொள்ள இயலாதபடி செய்துவிட்டது. அவர் இருந்திருந்தால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு எவ்வளவோ செய்திருப்பார்,” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் பணியாற்றியபோது பெரியாரின் இல்லத்தில் சிலகாலம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கான வரைமுறை அமைத்தவர் அவர்தான் என்றும் செவிவழிச் செய்தி உண்டு. இவர் சோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததால் தமது ஆயுட்காலத்தைக் கணக்கிட்டு, தமது ஆயுள் 60 ஆண்டுகள் என்று குறித்து வைத்திருந்தார். அதன்படி தமது அறுபதாம் வயதில் (25.12.1931) நள்ளிரவில் இயற்கை எய்தினார் என்பது வியப்பான செய்தி.

தமிழ்ச் சமுதாயம் அவரை மறந்துவிட்டாலும் அவரது படைப்புகளும், ஆய்வுப் பணிகளும் மூத்த தமிழறிஞர்களின் மனதில் பதிந்துதான் உள்ளது. அவற்றை எதிர்கால இளைஞர்களுக்குக் கொண்டு செல்வது அரசின் கடமையாகும்.

#✍️புலவர்_பா_அன்பரசு

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...