கே. பாலச்சந்தரின் நினைவு நாள் இன்று.

 கே. பாலச்சந்தரின் நினைவு நாள் இன்று.
🥲

தமிழ் திரையுலக இயக்குனர் சிகரம்’ எனப் புகழப்படும் கே. பாலச்சந்தரின் நினைவு நாள் இன்று. 🥲

இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என பல ரூபங்கள் எடுத்த மாபெரும் கலைஞன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தி, எதிர்கால கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இன்று வரை விளங்குகிறார்.

டைரக்‌ஷன் டச்’ என்றொரு வார்த்தை எப்போதில் இருந்து திரையயுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருக்கத் தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இவரின் வருகைக்குப் பிறகுதான், இவரின் படங்களைப் பார்த்துவிட்டுத்தான், இவரின் படக்காட்சிகளையும் வசனங்களையும் கொண்டுதான் ‘டைரக்‌ஷன் டச்’ என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. அந்த ‘டைரக்‌ஷன் டச்’சில் சிகரம் தொட்ட இயக்குநர்… கே.பாலசந்தர். அதாவது ஊருக்குப் போய்விட்டதைக் காட்ட ரயிலைக் காட்டுவார்கள் சினிமாவில். ஆனால் பத்துப்பையன்கள், ஒருவர்பின் ஒருவராகச் சட்டையைப் பிடித்துக் கொண்டு, ரயில் மாதிரி செல்வதைக் காட்டுவார். ஒரு வாரத்தைக் காட்ட, படபடவெனப் பறக்கும் தினசரிக் காலண்டரைக் காட்டுவார்கள். கல்கி, விகடன் என ஒவ்வொரு நாளும் வருகிற புத்தகங்களைக் கொண்டே ஒருவாரத்தைக் காட்டியிருப்பார்

அரசு ஊழியராக இருந்தவர் மேடைநாடக கலைஞராகப் புது வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ்த் திரைப்படத்துறையில் அரைநூற்றாண்டுகளையும் கடந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, மாபெரும் இயக்குனராக விளங்கிய கே. பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு திரும்பி பார்க்கிறது :

மேடைநாடகத் துறையில் இருந்து திரைப்படத்துறையில் கால்பதித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1965 ஆம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி” திரைப்படத்தை இயக்கினார். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்திருப்பார். மனித உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைக் கதைக் கருவாகக்கொண்டு இவர் இயக்கிய இத்திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் சில மாறுதல்களை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, ‘அபூர்வ ராகங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘இருகோடுகள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘தில்லு முல்லு’ போன்றவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது. இதில், ‘இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன.

நாடகத்தைத் தொடங்கும் போது, கடவுள் வாழ்த்து போடுவார்கள். பிறகுதான் நாடகம் ஆரம்பமாகும். ஆனால் தன்னுடைய நாடகங்களை திருக்குறளில் இருந்து தொடங்குவதுதான் பாலசந்தரின் வழக்கம். இதுவே பின்னாளில், திரையிலும் எதிரொலித்தது. படத்தை எந்தக் கம்பெனி தயாரித்தாலும் பாலசந்தர் இயக்கிய படங்களில் மட்டும், திருவள்ளுவர் வந்துவிடுவார். ‘அகர முதல எழுத்தெல்லாம்…’ குறளும் குரலும் ஒலித்துவிடும். பின்னர், ‘கவிதாலயா’வின் லோகோவாகவும் திகழ்ந்தார் திருவள்ளுவர். .

பல துணிச்சலானக் கருத்துகளைத் தன்னுடைய படங்களில் மூலம் திரையில் தந்த அவரது திரைப்படங்களான ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘எதிர்நீச்சல்’, ‘தண்ணிர் தண்ணீர்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’ போன்றவைத் தமிழ் திரையுலகில் அற்புத படைப்புகளாகப் போற்றப்படுகிறது.

பாலசந்தரின் படமும் கதையும் கதாபாத்திரங்களும் ஒரு நாவலைப் போல் கட்டமைக்கப்பட்டிருக்கும். கதை சொல்லவேண்டியதை, காட்சிகள் சொல்லவேண்டும். காட்சிகள் உணர்த்த வேண்டியதை வசனம் சொல்லவேண்டும், வசனம் சொல்லவேண்டியதை ஒரு பாடலே சொல்லிவிடவேண்டும். சில சமயங்களில், மெளனத்தையும் இசையையும் கொண்டு கூட உணர்வுகளைச் சொல்லிவிடுவார் பாலசந்தர். ஒரு காட்சியை ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் ஆரம்ப – இறுதிக்கு நடுவேயும் நகாசு பண்ணிக் கொண்டே இருப்பார். இவையெல்லாம் ‘பாலசந்தர் டச்’ என்று பிரமிக்கவும் ரசிக்கவும் வைத்தன.

தமிழ் திரையுலகில் தற்போது ஜாம்புவான்களாக விளங்கும், ‘கமல்ஹாசன்’ மற்றும் ‘ரஜினிகாந்த்’ எனப் பல நடிகர்க நடிகைகளைத் திரையுலகிற்கு தந்தவர். செறிவான கதை, நுட்பமான வசனம், பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு போன்றவை இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகளாகும். திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

தயாரிப்புகளை கடந்து, 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் தன்னுடைய கவனத்தை சின்னத்திரையின் மீது செலுத்திய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, தூர்தர்ஷனில் வெளிவந்த இவருடைய “ரயில் சிநேகம்” இன்றளவும் பேசப்படுகிறது. மேலும், ‘கையளவு மனசு’, ‘ரகுவம்சம்’, ‘அண்ணி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இவருடைய சின்னத்திரைப் படைப்புகளாகும்.

நினைவஞ்சலி அவருக்கு

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...