ஏ.சி.திருலோகசந்தர்
அன்பே வா’ படத்தில் நடிக்க முதலில் மறுத்த எம்.ஜி.ஆர்.!
– இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்
இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் ஒரு எம்.ஏ., பட்டதாரி.
1952ல் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘குமாரி’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
அந்தப் படத்தின் இயக்குநர் பத்மநாப ஐயரின் மகனும், திருலோகசந்தரும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் வகுப்புத் தோழர்கள். நண்பனுடன் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கச் சென்று, சினிமா மீது திடீர் காதல் கொண்டு இத்துறைக்கு வந்தவர் ஏ.சி.டி.
‘குமாரி’ படப்பிடிப்பில் டைரக்டர் பத்மநாப ஐயர் ஓய்வு எடுத்துக் கொள்ளும்போது எல்லாம் அந்தச் சிறு வயதிலேயே எம்.ஜி.ஆரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் ஏ.சி.டி. அதன் பிறகு இவர் எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஒரு படம் தான் இயக்கினார்.
அது வழக்கமான எம்.ஜி.ஆர். படமாக இல்லாமல் தனித்துவமாக இருந்து வெற்றி பெற்றது. அது தான் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்றும் மறக்க முடியாத ‘அன்பே வா’.
இந்தக் கதையை எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது, “இது தம்பி கணேசனுக்கு தான் பொருத்தமா இருக்கும். எனக்கு சரியா வராது” என்று நடிக்க மறுத்துவிட்டாராம் எம்.ஜி.ஆர்.
ஆனால் “இது நிச்சயம் உங்க ரசிகர்களுக்கே புது அனுபவமா இருக்கும்.
அதனால நீங்க தான் நடிக்கணும்” என்று ஏ.சி.திருலோகசந்தர் உரிமையுடன் வற்புறுத்தியதும் தான் “சரி… உங்களுக்காகவும், ஏ.வி.எம்.-காகவும் நடிக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
‘அன்பே வா’வுக்கு பிறகு தனக்கு மீண்டும் ஒரு படம் பண்ண ஏ.சி.டி.யை அழைத்துள்ளார் எம்.ஜி.ஆர்.
“என் வாழ்நாளில் உங்கள் டிரெண்டை மாற்றி அமைத்து ஒரு கதை பண்ணி அதில் வெற்றியும் கண்டுவிட்டேன். அந்தப் பெருமையுடனேயே வாழ்நாள் முழுவதும் இருந்துவிட விரும்புகிறேன். உங்களுக்கு ஏற்றாற்போல கதை பண்ணுவது எனக்கு சிரமமான காரியம். அதனால் மன்னித்து விடுங்கள்” என்று அந்த வாய்ப்பை மென்மையாக மறுத்து விட்டாராம் ஏ.சி.திருலோகசந்தர்.
சிறுகதை எழுதுவதில் கெட்டிக்காரரான ஏ.சி.டி. குமுதத்தில் மிஸ்.சந்திரா என்ற பெயரில் ஏராளமான சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.
நன்றி: தாய்