‘நிறைகுடம்’ சிவாஜி!
நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி!
முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி ‘நிறைகுடம்’ குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு, பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார். அவரின் பேட்டி இதோ…
‘’அப்போதெல்லாம் சிவாஜி படம் என்றாலே, ‘சிவாஜிக்கு தனிப்பாடல் (ஸோலோ பாடல்) இருக்கிறதா?” என்று விநியோகஸ்தர்கள் கேட்பார்கள். ‘நிறைகுடம்’ படத்தின் போதும் கேட்டார்கள்.
அதற்காகவே, ‘விளக்கே நீ கொண்ட ஒளியாலே…’ பாடல் உருவானது. ‘அருணோதயம்’ உள்ளிட்ட பல பாடல்களும் அப்படித்தான் உருவானது.
‘நிறைகுடம்’ படத்துக்கு சிவாஜி சாருக்கு குறைவான சம்பளமே தரப்பட்டது. முக்தா பிலிம்ஸ் கம்பெனியில் சிவாஜி சார் நடிக்கும் முதல் படம் இது. ‘நீ கொடுக்கறதைக் கொடு சீனு. படம் நல்லா வரணும். நல்லா சம்பாதிக்கணும்’ என்று சிவாஜி சார் ஒப்புக்கொண்டார். அப்பாவை (முக்தா சீனிவாசன்) சிவாஜி சாருக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
பட வேலைகள் ஆரம்பித்தன. ஜாலியாக ஆரம்பித்து, சீரியஸாகப் போகிற கதை. சிவாஜி சார், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். ‘ஆப்தமாலஜிஸ்ட்’ மாணவன். கண் மருத்துவப் படிப்பு. இடைவேளைக்குப் பிறகு, ஒரு காட்சியில், கண் நோய் பற்றியும் அதில் உள்ள பாகங்கள் பற்றியும் டயலாக்.
சோ எழுதி, அதை டாக்டர் ஜகதீசன் என்பவரிடம் கேட்டு, விளக்கமாக எழுதி வாங்கி, சிவாஜி சாரிடம் கொடுக்கப்பட்டது. முழுக்க இங்கிலீஷில் பேசுகிற வசனம்.
‘அந்த ஜகதீசனை வரச் சொல்லுங்கப்பா’ என்றார் சிவாஜி சார். அவரும் வந்தார். ‘நான் பேசிக்காட்றேன். சரியா இருக்கானு சொல்லுங்க’ன்னு இங்கிலீஷ் டயலாக்கைப் பேசிக் காட்டினார் சிவாஜி சார்.
அந்த டாக்டர் மிரண்டுபோயிட்டார். ‘என்னை விட பிரமாதமா இங்கிலீஷ் பேசுறீங்க சார்’ என்று பாராட்டினார். அதன் பிறகுதான், நடிக்கவே ஒப்புக்கொண்டார். ‘தப்பாயிடக்கூடாது பாரு, அதான்’ என்றார் சிவாஜி சார். அதுதான் சிவாஜி சார்.
படம் வெளியானது. எல்லோருக்கும் பிடித்த படமாக அமைந்தது. பத்திரிகைகளும் பாராட்டின. ஐந்தாறு வாரங்கள் கழித்து, அப்பா முக்தா சீனிவாசன், சிவாஜி சார் வீட்டுக்குச் சென்று ஒரு கவரைக் கொடுத்தார். அந்தக் கவரில் ஒரு பேப்பர் இருந்தது.
அதில், படத்துக்கான பட்ஜெட், செய்த செலவுகள், விற்ற தொகை, கிடைத்த லாபம் என முழுவிவரங்களும் அப்பா எழுதியிருந்தார்.
‘பரவாயில்லியே சீனு. நல்ல லாபம்தான் கிடைச்சிருக்கு. எனக்கு சந்தோஷம்டா’ன்னு மனதாரப் பாராட்டினார் சிவாஜி சார்.
உடனே அப்பா, இன்னொரு கவரை எடுத்து நீட்டினார். ‘இது என்னது?’ என்றார் சிவாஜி சார்.
வாங்கிப் பார்த்தார். அதில் பணம். கட்டுக்கட்டாக பணம். ‘இன்னிய தேதிக்கு உங்க சம்பளம் இதானே. ஆனா நான் அது தரலியே. படம் நல்லாப் போகுது. அதனால மீதத் தொகையை தரேன்’ன்னு அப்பா சொன்னார்.
ஒருநிமிடம் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தார் சிவாஜி சார்.
அவரின் தோளைத் தட்டிக் கொடுத்தார். ‘உன் நல்ல குணத்துக்குத்தான் இந்தப் படம் பண்ணினேன். இன்னமும் பண்ணுவேன். இதையும் லாபமா வைச்சுக்கோ சீனு’ என்று பணத்தை திருப்பிக் கொடுத்தார்.
ஆனால் அப்பா, பணத்தை வாங்கியே தீரவேண்டும் என்று சிவாஜி சாரிடம் உறுதியாக வலியுறுத்தினார்.
’என்னடா சீனு. இப்படிப் பண்றே. சரி… வாங்கிக்கிறேன். கொடு. ஆனா ஒண்ணு. அடுத்தாப்ல நாம பண்ணப் போற படத்துக்கு, இதை அட்வான்ஸா வைச்சிக்கிறேண்டா’ என்று சொன்னார் சிவாஜி சார்.
அப்பா நெகிழ்ந்து போனார். சிவாஜி சாரின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டார்.
அந்தக் காலத்தில் ஒரு நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான உறவு எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணத்தைச் சொல்லமுடியும்?’’
நன்றி: இந்து தமிழ் திசை