தீபம் நா. பார்த்தசாரதி நினைவு தினம்

 தீபம் நா. பார்த்தசாரதி நினைவு தினம்

தீபம் நா. பார்த்தசாரதி நினைவு தினம்: டிசம்பர் 13:

………………………….

*தீபம் நா.பா.வின் ஒளிவீசும் பொன்மொழிகள்!*

*திருப்பூர் கிருஷ்ணன்*

………………………….

*தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அந்தத் தனித்தன்மை காரணமாகவே அவர்கள் இலக்கிய உலகில் நிலைபெற்று இன்றளவும் பேசப்படுகிறார்கள்.

தி. ஜானகிராமன் என்றால் அழகியல், ராஜம் கிருஷ்ணன் என்றால் கள ஆய்வு, ஆர். சூடாமணி என்றால் உளவியல், ஜெயகாந்தன் என்றால் விவாதக் கோணம், லா.ச.ரா. என்றால் தத்துவப் பார்வை, கி.ராஜநாராயணன் என்றால் வட்டார வழக்கு…என்றிப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அப்படிப் பார்த்தால் மாபெரும் சாதனையாளராக விளங்கிய தீபம் நா.பார்த்தசாரதி படைத்த இலக்கியத்தின் தனித்தன்மை என்ன?

அவரது தனித்தன்மை மொழியின் சொல்நயங்கள் அனைத்தும் துலங்கும் வகையில் அமைந்த அவரது நடைதான். காலில் சலங்கை கட்டிக்கொண்டு தமிழ்ச் சொற்கள் ஜல்ஜல் எனக் கொஞ்சுகிற அழகை நா.பா. நடையில் நாம் மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கலாம்.

`அவள் பார்வையே ஒரு பேச்சாய் இருந்ததென்றால் அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது` என்றெல்லாம் சொற்களை மடக்கிப் போட்டு எழுதும் ஆற்றல் அவருக்கே உரியது.

கையெழுத்தைப் பற்றிச் சொல்லும்போது `தேர்ந்து பழகிய கை பூத்தொடுத்த மாதிரி இருந்த கையெழுத்து` என எழுதுவார். (அவர் கையெழுத்தே அப்படித்தான்.)

அத்தகைய எழில் நிறைந்த வரிகள் நம்மைக் கவரும். படித்து நெடுநாள் ஆனாலும் நம் மனத்தில் அந்த வரிகள் மின்னிக் கொண்டே இருக்கும். சில வரிகள் மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கும். சில வரிகள் நம் வாழ்க்கைக்கே வழிகாட்டும்.

இந்த வரிகள் பலதரப்பட்டவை. இன்றைய அரசியல், இன்றைய சினிமா, இன்றைய வாழ்வியல், இன்றைய கலை எனப் பற்பல துறைசார்ந்து அவர் தம் சிந்தனைகளை அழகழகான தமிழ்ச் சொற்களில் பொதிந்து வைத்திருக்கிறார்.

நா.பா.வின் படைப்புகளில் இருக்கும் இத்தகைய வரிகளில் பல, படைப்பிலிருந்து தனியே எடுத்தாலும் உயிரோட்டத்துடன் இருப்பவை. அவற்றைப் படைப்போடு சேர்க்காமல் தனி வரிகளாகக் கூட நம்மால் படித்து வியந்து ரசிக்க முடியும்.

உண்மையில் அவரது படைப்புகளைச் சிறப்பாக்குவதே இத்தகைய முத்து முத்தான வரிகள் தான்.

நாவலின் அத்தியாயங்களின் முகப்பிலும், சிறுகதைகளின் முகப்பிலும் உள்ளிருக்கும் அத்தகைய வரிகளைத் தனியே எடுத்துக் கட்டம்கட்டி வெளியிடும் வழக்கத்தை நா.பா. கையாண்டார்.

தொடராக வரும்போது மட்டுமல்லாமல் புத்தகமாக உருவாகும்போதும் அந்த வரிகள் படைப்பின் உள்ளே வருவதோடு கூட, தனியே படைப்பின் முகப்பிலும் வரவேண்டும் என்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.

நா.பா. தரத்தில் மட்டுமல்லாமல் எண்ணிக்கையிலும் நிறைய எழுதிக் குவித்த படைப்பாளி.

ஐம்பத்து நான்கு வயதே வாழ்ந்த அவர், தன் குறுகிய வாழ்நாளில் எப்படி எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான படைப்புகளை எழுதினார் என்பது பெரும் ஆச்சரியம்.

படைப்புகள் அவரிடமிருந்து பொங்கிப் பிரவகித்தன என்பதே உண்மை. நாள்தோறும் எழுதியவர் நா.பா.

நா.பா.வின் மாபெரும் இலக்கியக் கடலில் உள்ள அழகிய பொன்மொழி முத்துக்களைத் தேடி எடுத்துத் தொகுத்துப் புத்தகமாக்கினால், அது ஒரு பெரிய இலக்கியச் சேவையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் சுலபத்தில் சாத்தியப்படாத ஒரு சவாலான பணி அல்லவா அது ?

நா.பா.வின் படைப்புகளிலிருந்து பொன்மொழிகளைத் தொகுக்கும் பணியை நா.பா.வின் படைப்பே மேற்கொண்டால்? அது இன்னும் விசேஷம்தான்.

நா.பா.வின் படைப்பான அவரது புதல்வி செல்வி நா.பா. மீரா, நா.பா. படைப்புகளிலிருந்து அரிய முத்துக்களைத் தேடித் தேடித் தொகுக்கலானார்.

அவர் தொகுத்த பொன்மொழிகளில் பல தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் வாழும் அனைத்து மக்களுக்குமே பொருந்துவதாக இருந்ததை மீரா எண்ணிப் பார்த்தார்.

திருக்குறள் எந்தச் சார்புமற்ற உலகப் பொதுமறையாக இருப்பதைப் போல, நா.பா.வின் பொன்மொழித் தொகுப்பும் கூட அனைவர்க்குமான உலகப் பொதுமறைதான் என அவர் கருதினார்.

அப்படியானால் இந்தத் தொகுப்பு தமிழில் மட்டும் இருந்தால் போதுமா, ஆங்கிலத்திலும் இருக்க வேண்டியது அவசியமல்லவா எனவும் சிந்தித்தார்.

நா.பா. பொன்மொழிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியைச் செய்ய நா.பா.வின் மூத்த புதல்வி திருமதி பூரணியின் கணவர் திரு சம்பத்குமார் முன்வந்தார்.

நா.பா.வின் புதல்வர் நாராயணன், தன் ஒரு சகோதரிக்கும் இன்னொரு சகோதரி கணவருக்கும் அவரவர் பணிகளில் உதவி செய்தார்.

கொஞ்ச காலக் கடின உழைப்பில் இதோ `பொன்மொழிப் புதையல்` நூல் உருவாகிவிட்டது.

நா.பா.வின் தீவிர வாசகர்கள் மட்டுமல்ல, நா.பா. குடும்பத்திலுள்ள அனைவரும் நா.பா. எழுத்தின்மேல் பெரும் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதற்கும் இந்த நூல் சான்றாகிறது.

ஓர் எழுத்தாளரைச் சமூகம் மதிப்பதோடு கூட, அவரது குடும்பத்தினரும் மதிக்கிறார்கள் என்றால், அந்த எழுத்தாளர் தனிமனித ஒழுக்கத்தோடும் சமுதாய ஒழுக்கத்தோடும் வாழ்ந்து குடும்பத்தினர் மேல் அளவற்ற பாசம் செலுத்தி குடும்பத்தினரையும் கவர்ந்திருக்கிறார் என்றுதானே பொருள்?

நா.பா. இலக்கியத்தில் சகோதரி கமலம்சங்கர், கே.ஆர். லதா உள்பட எத்தனையோ பேர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

நா.பா. காலமான பிறகு அவரது எழுத்தின் தகுதி காரணமாக அவர் எழுத்து நாட்டுடைமை ஆகியிருக்கிறது.

நா.பா. காலத்திற்குப் பின் அவர் எழுத்தை ஏராளமான பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன. இவையெல்லாம் நா.பா. இலக்கியத்தைக் கொண்டாடும் வகையிலான உயர்தரப் பணிகள்தான்.

இப்போது தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியாகியுள்ள `பொன்மொழிப் புதையல்` என்ற புத்தகம், நா.பா. இலக்கியம் தொடர்பாக நிகழ்ந்துள்ள பணிகளில் ஒரு மணிமகுடம் எனலாம்.

அவ்வகையில் தந்தையின் புகழுக்கு மகுடம் சூட்டியிருக்கும் அவர் மகளான நா.பா. மீராவையும் திருமதி பூரணியின் கணவரும் நா.பா.வின் மாப்பிள்ளையுமான திரு சம்பத்குமார் அவர்களையும் நா.பா.வின் புதல்வரான என் அன்பிற்குரிய திரு நாராயணனையும் மனமார வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

வாசகர்கள் இந்த அரிய நூலை வாசித்துப் பயனடைவார்களாக.

(நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை.)

(புத்தகத்தின் தொகுப்பாளர்: முனைவர் நா.பா. மீரா, புத்தகம் கிடைக்குமிடம்: எண் 8. மேற்கு சாலை, மேற்கு சிஐடி நகர், சென்னை – 600 035, விலை ரூ 110. அலைபேசி: 99622 95876)

………………………….by

Kandasamy R

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...