வை.மு.கோதைநாயகி
நாவலாசிரியை, விடுதலைப் போராட்ட வீராங்கனை
விடுதலைப் போராட்ட வீராங்கனையும் பிரபல நாவலாசிரியையுமான வை.மு.கோதைநாயகி (Vai.Mu.Kothainayaki) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* சென்னை, திருவல்லிக்கேணியில் பிறந்தவர் (1901). ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோதே தாயை இழந்தார். பாட்டியும் சித்தியும் வளர்த்து வந்தனர். சிறந்த தமிழ் அறிஞரான சித்தப்பாவிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைக் கற்றார். ஐந்தரை வயதில் பால்ய விவாகம் நடைபெற்றது.
* குழந்தைகளும் பெரியவர்களும் ரசிக்கும் வகையில் கதைசொல்லும் திறன் பெற்றிருந்தார். இதைக் கண்ட கணவர், மனைவியின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அவற்றைப் பார்த்த இவருக்கு தானும் நாடகங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை பிறந்தது. இவரது முதல் நாடக நூல் ‘இந்திர மோகனா’ 1924-ல் வெளிவந்தது.
இந்து, சுதேசமித்திரன், நியு இந்தியா உள்ளிட்ட பல பத்திரிகைகள் இந்நூலைப் பாராட்டி விமர்சனம் எழுதின. மேடைகளிலும் அரங்கேறியது. முதல் நாடகமே மாபெரும் வெற்றி பெற்றதால், மேலும் மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கம் பிறந்தது. தொடர்ந்து, ‘அருணோதயம்’, ‘வத்சகுமார்’, ‘தயாநிதி’ ஆகிய நாடகங்களை எழுதினார். முதன்முதலாக ‘வைதேகி’ என்ற நாவலை எழுதினார்.
* வெளிவராமல் நின்று போயிருந்த ‘ஜகன்மோகினி’ என்ற இதழை 1925-ல் வாங்கி அதைத் தொடர்ந்து நடத்தினார். மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் அந்த இதழில் வெளியிட்டார்.
* பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, விதவைத் திருமணம் ஆகியவற்றைத் தன் நாவல்கள் மூலம் வலியுறுத்தினார். தமிழகம் வருகை தந்த மகாத்மா காந்தியை சந்தித்தது, இவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அணிகலன்களைத் துறந்து கதராடை மட்டுமே அணிந்தார். பல சமூக சேவகிகளுடன் இணைந்து சேவை செய்தார்.
* மது ஒழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 1932-ல் லோதியன் கமிஷனுக்கு எதிரானப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகவும், அந்நியத் துணி எரிப்பு இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகவும் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் ‘சோதனையின் கொடுமை’, ‘உத்தமசீலன்’ நாவல்களை எழுதினார்.
* திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது ‘தயாநிதி’ என்ற நாவல் ‘சித்தி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இவரது மறைவுக்குப் பிறகு சிறந்த கதாசிரியருக்கான விருதும் பெற்றது.
* ‘மகாத்மாஜி சேவா சங்கம்’ தொடங்கி ஏழைகள், ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கு உதவிகளைச் செய்தார். துப்பறியும் நாவல்கள் உட்பட மொத்தம் 115 நாவல்களை எழுதியுள்ளார். தமிழில் துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் இவர்தான். இவர் எழுதிய சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன
* காங்கிரஸ் இயக்கத்தில் செயல்திறன்மிக்க உறுப்பினராக செயல்பட்டார். சத்தியமூர்த்தி, காமராஜர், ராஜாஜி ஆகியோர் இவரிடம் நட்புணர்வு கொண்டிருந்தனர். கர்நாடக இசையிலும் தலைசிறந்து விளங்கினார். பாடுவதில் திறமைமிக்க பெண்களை ஊக்குவித்தார்.
* இவர் தந்த ஊக்கத்தால் பிரபலமடைந்தவர்களுள் முக்கியமானவர், டி.கே.பட்டம்மாள். சில அபூர்வ ராகங்களில் பாடல்களையும் இயற்றியுள்ளார். ‘நாவல் ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ என்றெல்லாம் போற்றப்பட்ட வை.மு.கோதைநாயகி 1960-ம் ஆண்டு 59வது வயதில் மறைந்தார்.
1 Comment
தமிழில் துப்பறியும் நாவலை முதலில்
எழுதிய பெண் எழுத்தாளர் என்பது கவனிக்கப்பட வேண்டியது.