திரைக்கவித் திலகம் என்ற அடைமொழிக் கொண்ட பெருங்கவிஞர்அ. மருதகாசி

 திரைக்கவித் திலகம் என்ற அடைமொழிக் கொண்ட பெருங்கவிஞர்அ. மருதகாசி
👑

அ. மருதகாசி மறைந்த நாளின்று

😰

:

பாகவதத் தமிழுக்கு பதில் பாமரத் தமிழை திரையில் ஒலிக்கச் செய்த திரைக்கவித் திலகம் என்ற அடைமொழிக் கொண்ட பெருங்கவிஞர் 👑அ. மருதகாசி மறைந்த நாளின்று😰:

பாட்டு… உறங்கிக் கொண்டிருக்கும் பல உணர்வுகளை எழுப்பிவிடுகிறது. பாதி இரவில் கண்விழிப்பதும், பாட்டுக் கேட்டுக்கொண்டே விடியும் வரை உறங்காதிருப்பதும் ஒரு சுகமான அனுபவம். பாட்டில்லாமல் இங்கு எதுவுமில்லை… பாட்டுதான் எல்லா உணர்வுகளுக்கும் எல்லை…

அந்த வகையில்

#🎼#சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா… (நீலமலைத் திருடன்)

#🎼#ஆளை ஆளைப் பார்க்கிறார் (ரத்தக்கண்ணீர்)

#🎼#சமரசம் உலாவும் இடமே (ரம்பையின் காதல்)

#🎼#சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு (ராஜா ராணி)

#🎼#கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த (தூக்குத்தூக்கி)

#🎼#ஆனாக்க அந்த மடம்… (ஆயிரம் ரூபாய்)

#🎼#கோடி கோடி இன்பம் பெறவே (ஆட வந்த தெய்வம்)

#🎼#ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே (பிள்ளைக்கனியமுது)

#🎼#கடவுள் என்னும் முதலாளி (விவசாயி)

#🎼#வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே (மல்லிகா)

#🎼#முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல (உத்தமபுத்திரன்)

#🎼#காவியமா? நெஞ்சின் ஓவியமா? (பாவை விளக்கு)

இதுபோல இன்னும் எத்தனையோ இனிக்கும் தமிழ்ப் பாடல்களுக்குச் சொந்தக்காரர்தான் மண்ணின் கவிஞர் மருதகாசி.

மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர்.

திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு என்ற கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அய்யம்பெருமாள், தாயார் மிளகாயி அம்மாள்.

உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் எழுதும் தூண்டுதல் பெற்று சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றார்.

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் “தேவி நாடக சபை’யின் நாடகங்களுக்கும் மு.கருணாநிதி எழுதிய “மந்திரிகுமாரி’ நாடகத்துக்கும் பாடல்கள் எழுதினார்.

கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றியதுடன், அந்நாடகங்களுக்கு இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான ராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.

தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் “மாடர்ன் தியேட்டர்ஸ்’ படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாடகப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.

1949-இல் வெளிவந்த “மாயாவதி’ படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி. “”பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ” (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல்.

அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.

மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.

ஒருசில தமிழ்ச் சொற்களுடன் மிகுதியும் சம்ஸ்கிருதமும், சாஸ்திரியமுமாக பழைய கீர்த்தனைகளை அடியொற்றி உருவாகி வந்த திரையிசைப் பாடல்களில் இடம்பெற்ற பாகவதத் தமிழ், படிப்படியாகப் பாமரத் தமிழுக்கு முற்றிலும் தொனி மாறிய காலகட்டத்தில் பாடல் எழுத வந்தவர் மருதகாசி.

திரைப்பாடல்களுக்கு இலக்கிய ரசிகர்களுக்கான சாளரத்தைத் திறந்து வைத்து, இசைத் தன்மையுடன் பொதுத் தன்மைக்கும் பாடல்களை நகர்த்திய முன்னோடிப் பாடலாசிரியர்களுள் தனிச் சிறப்புப் பெற்றவர் இவர் என்று சொல்லவேண்டும்.

“நீலவண்ண கண்ணா வாடா” என்று மங்கையர் திலகம் படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கும்.

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’, “சமரசம் உலாவும் இடமே’, “முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’, “ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை’, “மணப்பாறை மாடுகட்டி’, “ஆனாக்க அந்த மடம்’, “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’, “காவியமா? நெஞ்சின் ஓவியமா?’ – முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.

, 1940-இல் தனகோடி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.

கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில், “நல்லவன் வாழ்வான்’ படத்துக்காக “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்’ என்ற பாடலை எழுதினார்.

இயற்கைத் தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை; எனவே, பழம்பெரும் பாடலாசிரியர் மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர். மாற்றுப் பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.””புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டாராம். வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது “நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல்கள் எழுதியுள்ளார்.

1960-களிலிருந்து கண்ணதாசனுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், மருதகாசி பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

ஒருசில படங்களைத் தயாரித்து பண நஷ்டத்துக்கும், மனக் கஷ்டத்துக்கும் ஆளானார். அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றவர், எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார். கே.எஸ்.ஜி., தேவர் படங்களுக்கு மட்டும் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

தேவர் பிலிம்ஸின் “விவசாயி’ படத்தின் அத்தனை பாடல்களையும் இவரைக் கொண்டு எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். “கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’, “இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை’ போன்ற “விவசாயி’ திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் கருத்துச் செறிவும், சமுதாயக் கண்ணோட்டமும் உடையதாகப் பாராட்டப்படுபவை. தேவர் பிலிம்ஸ் படங்களில் மருதகாசிக்கு நிச்சயமாக ஒரு பாடல் இருக்கும்.

டி.எம்.செüந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை மருதகாசியையே சேரும்.

மருதகாசியின் திரையிசைப் பாடல்களையும் புத்தகங்களையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்த மருதகாசி, 29.11.1989-இல் காலமானார்.

courtesy:The Desk of கட்டிங் கண்ணையா!

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...