கலைவாணர் என் . எஸ். கே
கலைவாணர் என் . எஸ். கே பிறந்த நாள் இன்று.
என்.எஸ். கிருஷ்ணன்… தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி… சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!…
நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்
நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பமாயிற்று. அந்த காலஆனந்த விகடனில் இவர் எழுதிய ‘சதிலீலாவதி’ தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம். ஆனால், ‘சதிலீலாவதி’யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த ‘மேனகா’ படமே முதலில் திரைக்கு வந்தது. மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்!
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். (‘வசந்தசேனா’ படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு, ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறவிடவே, வழிச் செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசியை தீர்த்தார் கலைவாணர். அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது. மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். கலைவாணர்- மதுரம் ஜோடி திரையுலகில் பெரிதும் பேசப்பட்ட ஜோடி.)
நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.
சீர்திருத்த கருத்துகளை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டு உழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று.
ஒரு முறை கலைவாணரைப் பெண்கள் கூடி நடத்திய கூட்டத்திற்கு அழைத்திருந்தனர். அக்கூட்டத்திற்கு அவரும் மனைவி மதுரமும் சேர்ந்து சென்றிருந்தனர். அங்கே அவர் பேசத் தொடங்கினார் “சகோதரிகளே! தாய்மார்களே! நீங்கள் எல்லோருமே பூ வச்சிருக்கீங்க, சிலபேரு ரோஜாப்பூ வச்சிருக்கீங்க, சிலர் மல்லிகை, முல்லை, கனகாம்பரம் என்று பலவகையான பூக்களை வச்சிருக்கீங்க . அதனாலேயே பெண்களுக்கு பூவையர் என்று பெயர் இந்தப் பூக்கள் எல்லாம் இன்னிங்கு வைச்சா நாளைக்குத் தூக்கி எறிய வேண்டியப் பூக்கள். இதெல்லாம் மலரும் பூக்கள், மலர்ந்த மறு நாளே வாடும். வாடாமல் வளரும் பூவே சிறந்த பூ. அந்தச் சிறந்த பூ என்ன பூவென்னு சொல்லுங்கப் பார்க்கலாம்” என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களைப் பார்த்துக் கேட்டார்.
பலரும் விழித்தனர். கேட்பவர் நகைச்சுவை மன்னர் என்பதால் ஒரு பெண் “சிரிப்பு” என்றார், கலைவாணர் புன்முறுவல் பூத்தார். தான் சரியான விடை கூறிவிட்டதாக அந்தப் பெண்ணும் சிரித்தார். கூட்டத்தினரும் சிரித்தனர்.
அடுத்து, கலைவாணர், “பாத்தீர்களா! இதுவும் ஓரளவிற்கு வளரும் பூதான். ஆனால், தொடர்ந்து வளராது. இதோ பேச ஆரம்பிச்சதும் நின்னிருச்சு, நிக்காம தடைபடாமல், வளந்துகிட்டேயிருக்கிற பூ “சேமிப்பூ”தான்.
ஒரளவு நீங்க சேமிப்பு செய்து விட்டு அப்படியே விட்டுவிட்டால் கூட வட்டியின் மூலம் அது வளரும். ஆகையால், சேமிப்புதான் சிறப்பூ, பெண்களாகிய நீங்கள் சேமிக்கத் தொடங்கணுமுங்கிறதை வற்புறுத்தத்தான் இந்தக் கூட்டம். ஆகவே, சேமிப்பே சிறந்த பூ” என்று கூறி முடித்தார்.
இப்படி, இடம், பொருள், ஏவல் ஆகியவற்றை அறிந்து, உணர்ந்து அதற்கு ஏற்ப சமயோஜிதமாய் பேசி, கேட்போரை ஒரு சில நிமிடம் மெய் மறக்கச் செய்யும் வல்லமை இந்த கிருஷ்ணனைத் தவிர வேறு எந்த கிருஷ்ணர்களுக்கு வரும் என்பது இன்றளவும் கேள்விக் குறியே.
இப்பேர்பட்ட நாகரிக கோமாளி,’நகைச்சுவை அரசு’ , ‘தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ‘, ‘கலைவாணர் ‘ அவர்களுக்கு
நமது
வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி