பாகப்பிரிவினை
பாகப்பிரிவினை
கமலாவைச் சுற்றி பிள்ளைகள். அம்மாவின் வீட்டை எப்படி பங்குபோடலாம் என்ற எண்ணத்தோடு பிள்ளைகள். கமலாவிற்கு ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண், இரண்டு ஆண்.
மூத்தவள் கன்யா நல்ல படிப்பு. தனியார் அலுவலகத்தில் வேலை. இரண்டு ஆண் குழந்தையுடன் வசதியுடனும் வாழ்கிறாள். அடுத்தவள் நித்யா பெண் குழந்தையோடு சிங்கபூரில் கொழிக்கிறாள். மூன்றாவது பெண் முற்றமெல்லாம் பொன் என்பார்கள். (கிராமத்து வீடுகளில் இருக்கும் ஒரு பகுதி முற்றம்) அப்படிதான் சாந்தா பிறந்தவுடன் அவ்வளவு செல்வ செழிப்பு கமலாவின் வீட்டில்..
ஆனால் சாந்தாவின் வாழ்க்கைதான் சிறக்கவில்லை, குடிகாரக்கணவன். குழந்தை இல்லை. தனக்கு அவ்வளவுதான் என்று எண்ணி போராட்டத்தோடு வாக்கையை ஒட்டுபவள்.
நான்காவதாக கலா. அரசுவேலை கலாவிற்கும் கணவனுக்கும். ஆண், பெண், இரண்டு குழந்தைகள். மகிழ்ச்சியான வாழ்க்கை.
ரவி, ரகு, இரண்டு பிள்ளைகள். இருவரும் வெளிநாட்டில் வேலை. ரவி அமெரிக்காவிலும். ரகு துபாயிலும். மனைவி குழந்தைகளோடு வாழ்கிறார்கள்.
இப்போ அனைவரின் கவலை அம்மா வீட்டை எப்படி பங்குபோடுவாள் என்பது. அம்மா அனைவரையும் அழைத்தாள்.
“இந்த வீட்டை நான் சாந்தாவின் பெயருக்குத்தான் எழுதியுள்ளேன்” என்றதும், அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றனர்.
“அவளுக்கு குழந்தை குட்டியா இருக்கு. எதுக்கு இந்த வீடு” என்று ஒவ்வொருவராக முனுமுனக்க ஆரம்பித்தனர்.
“ஆம் அதே தான் நானும் சொல்கிறேன், உங்களுக்கெல்லாம் உங்களுடைய குழந்தைகள் உங்களை காப்பாற்றும். அவளுக்கு கணவனும் சரியில்லை. பிற்காலத்தில் அவளுக்கென இடம் இருந்தால்தான் அவளுக்கு பாதுகாப்பு” என்றாள் கமலா.
அனைவரும் சிலையாய் வாயடைத்து நின்றனர்… சாந்தாவும்…