கி.மு.6- ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர்

கி.மு.6- ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றான, கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டதற்கு பாராட்டுகள் – வாழ்த்துகள்!

“தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்”

– கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை !

“தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர்” என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது; தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.

தமிழர்களின் மிகத் தொன்மை வாய்ந்த எழுத்தறிவுக்கு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றும், தமிழர் நாகரிகம் பெரும் பழைமையான நாகரிகம் என்பதற்கு அசைக்க முடியாத சிறப்பான ஆதாரங்களும் கிடைத்திருப்பது; ஒவ்வொரு தமிழர் மனதிலும் பெருமித உணர்வு ஊற்றெடுத்துப் பொங்க வைத்துள்ளது.

இந்த அரிய தருணத்தில் – கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு க.பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர் திரு த.உதயச்சந்திரன் ஆகியோருக்கும், இந்த ஆய்வுப் பணியில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும், முதன்முதலில் இது குறித்து நாடு தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்திய எழுத்தாளரும், தற்போதையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழடி நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த 5,820 அரும்பொருட்களின் தேர்ந்தெடுத்த மாதிரிகள், சர்வதேச ஆய்வகங்களுக்கும், தேசிய அளவிலான ஆய்வு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு – அந்த ஆய்வகச் சோதனைகளின் அடிப்படையிலான முடிவுகள், தொல்லியல் அறிஞர்கள் குழுவால் சரி பார்க்கப்பட்டுள்ளது.

அதன் விளைவாக, “கீழடி, வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது.

இந்த ஆய்வின் முடிவுகளால், உலக நாகரிகங்களில் தமிழர் நாகரிகம் “முற்பட்ட நாகரிகம்” என்பதும், இந்திய வராலற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும் என்பதும் மீண்டும் உறுதியாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழர்களின் வரலாற்றை அடிப்படையாகவும் ஆரம்பமாகவும் வைத்தே இந்திய வரலாற்றைப் பார்க்க வேண்டும்; படித்தறிந்திட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, இந்த கரிம மாதிரிகள் ஆய்வில் வெளிவந்துள்ள அற்புதமான தகவல்கள், தமிழர்களின் இதயங்களைக் குளிர வைத்துள்ளது.

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த எலும்புத் துண்டுகளில் இருந்து ‘திமிலுள்ள காளை’யின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது – வேளாண் தொழிலில் நாம் முதன்மைக் குடியாக இருந்ததையும் – தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குரிய தொன்மையையும் எடுத்துக் காட்டுகிறது.

ஆய்வுகளில் கிடைத்துள்ள பல்வேறு அரிய தகவல்கள்; தமிழர்களின் நாகரிகத்தை முதன்மை நாகரிகமாக – மிகவும் தொன்மை மிகுந்த நாகரிகமாக உலகிற்கு இன்றைய தினம் அறிவித்திருக்கிறது.

இதுவரை சாக்குப் போக்கு சொல்லி வந்தவர்கள், இனியாவது தமிழ்மொழி தொன்மையானது – அதற்கு அனைத்து நிலைகளிலும் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணருவார்கள் என்று கருதுகிறேன்.

“கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே, தமிழர்களிடம் எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது” என்ற கண்டுபிடிப்பின் மூலம் – தமிழர் சமுதாயம் எழுத்தறிவு பெற்ற சமுதாயமாக அந்த நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “அடுத்த கட்டமாக கீழடிக்கும் அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்படும். ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று, தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் திரு.உதயச்சந்திரன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தத் தருணத்தில் மத்திய அரசுக்கு மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

கீழடிக்குப் பிறகு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட சனோவ்லி என்ற இடம் உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசால் தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் தோண்டப்பட்ட கீழடி அகழாய்வு இடமும் பாதுகாக்கபட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும்.

கீழடி ஆய்வுகளில் பல்வேறு அரிய – தொன்மை வாய்ந்த தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போதுள்ள தொல்லியியல் துறை சென்னை வட்ட அலுவலகத்தைப் பிரித்து – தென் தமிழகத்திற்கு என்று, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும்.

இது, தென் தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதற்கும், மேலும் பல தொல்லியல் அகழ்வை முன்னெடுத்துச் செல்லவும் அடிப்படையாக அமையும்.

கீழடியோடு அகழாய்வு துவக்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட் நகரில் மத்திய அரசு, “சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளது. அதைப்போலவே கீழடியிலும், சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

மேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்து – தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காப்பாற்றவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றும், மாநில அரசும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

ம.ஸ்வீட்லின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!