இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது! | தனுஜா ஜெயராமன்

மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15 நடந்த உலகக்கோப்பை பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதியது இந்திய கிரிக்கெட் அணி. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 4வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 2019 உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இந்த போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவும் பறிபோயுள்ளது. தொடர்ச்சியாக 5 உலகக்கோப்பை தொடர்களில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து 5வது முறையாக கோப்பையை வெல்ல முடியாமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் எந்தவிதமான பெரிய குறைபாடுகளும் இல்லாமல் அனைத்து அணிகளுக்கும் சவாலான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார் இதையடுத்து சிறப்பாக ஆடிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 71 ரன்களை சேர்த்தது. பின்னர் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் விராட் கோலி – சுப்மன் கில் கூட்டணி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 41 பந்துகளில் அரைசதம் அடிக்க, பின்னர் கியரை அதிரடிக்கு மாற்றினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென காலில் பிடிப்பு ஏற்பட்டு ரிட்டையர்ட் ஹர்ட்டாகி 79 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 117 ரன்கள் எடுக்க, இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 20 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே – ரச்சின் ரவீந்திர கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முகமது ஷமி பந்துவீச்சில் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின் வந்த வில்லியம்சன் – மிட்சல் கூட்டணி இந்திய பவுலர்களை விரட்டி விரட்டி வெளுத்தது. ஒரு கட்டத்தில் யாருக்கு பந்தை கொடுப்பது என்று புரியாமல் ரோகித் சர்மா குழம்பி நின்றார்.

3வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், முகமது ஷமி வீசிய பந்தில் கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த லேதமும் அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். இதன் மூலம் இந்திய அணி ஆட்டத்திற்குள் மீண்டும் வர முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய மிட்சல் 85 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஆனால் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பின் இந்திய அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீச தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் ரன் ரேட் அழுத்தம் ஏறிக் கொண்டே சென்ற நிலையில் கிளென் பிலிப்ஸ் 41 ரன்களிலும், தொடர்ந்து வந்த சேப்மேன் 2 ரன்களிலும், சிறப்பாக ஆடிய மிட்சல் 134 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசியில் வந்த டெய்லண்டர்கள் முகமது ஷமியின் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்று அசத்தியுள்ளது. அதேபோல் 2019 உலகக்கோப்பை அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!