இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,500-க்கும் மேற்பட்டோர் பலி!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான மோதலில், இருதரப்பிலும் இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் மீது நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதேபோன்று சிரியா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் குழுவினரிடையே 6-வது நாளாக இன்று போர் நீடித்து வருகிறது. காசா முனையில் உள்ள ஹமாஸ் குழுவின் முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் விமானப்படையினர் நேற்றிரவு குண்டு மழை பொழிந்தனர்.
காசாவில் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை தடுக்கக் கூடாது என்று ஐ.நா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காசா பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் படையினர், அங்கு உணவு மற்றும் எரிபொருட்களுக்கு தடை விதித்தனர்.
இதையடுத்து, எரிபொருள் இல்லாததால், ஒரே மின் உற்பத்தி நிலையம் முடங்கியதால், காசா பகுதி இருளில் மூழ்கியது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா., அமைப்பு, காசா பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.