துல்கரின் சுவராஸ்யமான கேங்ஸ்டர் களம் – கிங் ஆப் கொத்தா! – பட விமர்சனம் | தனுஜா ஜெயராமன்
துல்கர் சல்மானின் சமீபத்திய கேங்ஸ்டர் படம் ‘கிங் ஆஃப் கோதா’. இப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று முதல் “கிங் ஆஃப் கொத்தா “ (செப்டம்பர் 29, 2023 )டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.
இந்த பரபரப்பான கேங்ஸ்டர் க்ரைம் திரில்லர் படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். இப்படத்தின் திரைக் கதையினை அபிலாஷ் என் சந்திரன் எழுதியுள்ளார்.
படத்தின் ஹீரோவாக துல்கர் சல்மான் மற்றும் ஹீரோயினாக ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
முக்கிய வேடங்களில் பிரசன்னா, ஷபீர் கல்லாரக்கல், கோகுல் சுரேஷ், நைலா உஷா, அனிகா சுரேந்திரன், ஷம்மி திலகன், சுதி கொப்பா, செம்பன் வினோத் ஜோஸ், ரித்திகா சிங் மற்றும் சௌபீன் ஷகிர் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
வேஃபேரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கிங் ஆஃப் கோதா, கேங்ஸ்டர் படமாக இருந்தாலும் தனித்துவமான கதைக்களம், பரபரப்பான திரைக்கதை, யூகிக்க இயலாத திருப்பங்கள் என பார்ப்பவர்களை நன்றாகவே எண்டர்டெயின் செய்கிறது.
படத்தில் தனது தந்தையை போலவே ரவுடியாக ஆசைப்படும் துல்கர் சல்மான் ராஜூ பாயாக அடி , உதை வெட்டு ,குத்து என படம் முழுவதும் எதிரிகளை துவம்சம் செய்கிறார். ஆனால் காதலியான ஜஸ்வர்யா லட்சுமியிடமும் தங்கையான அனிகா சுரேந்திரனிடமும் காட்டும் அன்பில் நெகிழ வைக்கிறார். துல்கரின் நண்பனாக வரும் கண்ணன்பாய் வில்லத்தனத்தினை அசால்டாக செய்கிறார்.
ஐஸ்வர்யா லட்சமி கொடுத்த கதாப்பாத்திரத்தை நிறைவாய் செய்கிறார். வழக்கமான கேங்ஸ்டர் படத்தில் வரும் சண்டை , துரோகம் என்கிற சிலந்தி வலை போன்று பின்னப்பட்ட கதையில் காதல், நட்பு , அன்பு என்கிற டாப்பிங்ஸ்களை தூவி சற்று அழகுப்படுத்தி தந்துள்ளார்கள்.
துல்கர் வழக்கம் போல கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். ஆனாலும் இதிலும் வன்முறை காட்சிகள் அதிகமே. படத்தில் போலீஸாக முதல் காட்சியில் அதிரடியாக தோன்றும் ப்ரசன்னாவை ஊறுகாயை போல தொட்டு வீணடித்திருக்கிறார்கள். ப்ரசன்னாவின் முந்தைய படங்களில் அவரது நடிப்பாற்றல் கண்டு அசந்தவர்கள் ப்ரசன்னா ஏதோ செய்ய போகிறார் என கடைசிவரை எதிர்ப்பார்த்து கடைசிவரை ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பழைய மொந்தையில் அதே பழைய கள் வித் டாப்பிங்ஸ்களோடு் என்பதே “கிங் ஆப் கொத்தா” . கடைசி காட்சியில் இரண்டாம் பாகத்திற்கும் அடி போட்டிருக்கிறார்கள்..ஒரு முறை பார்க்கலாம்.. சுவராஸ்யமான இந்த கேங்ஸ்டர் கதை களத்தினை ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கலாம்.