ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி முதல் தங்கப்பதக்கம்! | தனுஜா ஜெயராமன்
ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி சீனாவை வென்று நடப்பு தொடரில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய உலக சாதனையை முறியடித்து இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீரர்கள் ருத்ரான்க்ஷ் பாட்டீல், ஐஸ்வர்ய் பிரதாப் சிங் தோமர், திவ்யன்ஷ் சிங் பன்வார் அடங்கிய குழு தங்கம் வென்றது. கூடவே, 1893.7 புள்ளிகள் பெற்று இப்போட்டியில் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீன ஆடவர் குழு வீரர்கள் நிகழ்த்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி சீனாவை வென்று நடப்பு தொடரில் முதல் தங்கப்பதக்கத்தை பெற்றது.
மேலும், இப்போட்டியில் முந்தைய உலக சாதனையையும் இந்தியா முறியடித்துள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கத்துடன் 6வது இடத்தில் உள்ளது.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் இந்தியாவின் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சி ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
எட்டு பேர் பங்கேற்கும் துடுப்புப் படகுப் போட்டியில் நீரஜ், நரேஷ் கல்வானியா, நீத்திஷ் குமார், சரண்ஜீத் சிங், ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனீத் குமார், ஆசிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இரண்டாவது நாளில், ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்புப் படகுப் போட்டியில், இந்தியாவின் அர்ஜுன்லால் ஜாட், அரவிந்த் சிங் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.