“மலேஷிய பிரதமருடன் சூப்பர் ஸ்டார் திடீர் சந்திப்பு”
மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப்,வசந்த ராவி, யோகி பாபு,ஷிவராஜ்குமார் என பலர் நடித்திருந்தனர்.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தார். ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் அடுத்து நடக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடிக்கும் 171வது படத்தையும், சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், தற்போது மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பாக இமயமலை சென்ற ரஜினிகாந்த், பயணத்தை முடித்துவிட்டு வரும் வழியில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அண்மையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தனது பூர்விக கிராமத்துக்குச் சென்றிருந்த ரஜினி அங்கு தனது பெற்றோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.