அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான்  நடக்கும்: விஷால்-கார்த்தி நம்பிக்கை! | தனுஜா ஜெயராமன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் நேற்று (செப்-10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி S.முருகன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது..

“மூன்று வருடங்களுக்குப் பிறகு அனைவரும் இந்த பொதுக்குழு மூலமாக ஒன்றாக கூடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அன்று அந்த தேர்தல் நடந்திருக்காவிட்டால் எங்களது நடிகர் சங்க கட்டடத்திலேயே இந்த பொதுக்குழு நடந்திருக்கும். இன்னும் ஐந்து மாத காலம் எங்களுக்கு அவகாசம் அளித்திருந்தால் அப்போதே அந்த கட்டிடம் நிறைவு பெற்று இருக்கும். இரண்டாவது முறையும் எங்களை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை வீண் போகாதபடி குறிப்பிட்ட காலத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும். நிச்சயமாக அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் நடைபெறும் என அனைவருமே நம்புகிறோம்.

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே திரும்பி பார்க்கக் கூடிய ஒரு கட்டிடமாக இது வரப்போகிறது என்பதனால் தான் இத்தனை இடைஞ்சல்கள் வருகிறதோ என நினைக்கத் தோன்றுகிறது. அதேபோல சங்கத்தில் நிதி போதுமான அளவு இல்லாத காரணத்தினால் தான் உறுப்பினர்களின் மருத்துவ உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். மற்றபடி செயற்குழு உறுப்பினர்கள் அனைவருமே தனித்தனியாக இதுபோன்ற மருத்துவ உதவிகளை செய்து வருகிறோம். அப்படி தனித்தனி நபர்கள் உதவி செய்தாலும் கூட அவை   சங்கத்தின் வழியாகத்தான் செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்ற மருத்துவ உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு தற்போது தமிழக அரசும் மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே நேரில் சென்று கலைஞர்கள் பலரையும் சந்தித்து மருத்துவ உதவிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். நடிகர் சங்கத்திற்கு இந்த அரசு மிகப்பெரிய ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டட வேலைகள் தடையில்லாமல் நடப்பதற்காக வங்கி மூலமாக நிதியை பெற்று பணிகளை துவக்க உள்ளோம். கட்டுமானத்திற்கு தேவைப்படும் விதமாக கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் வரை கடன் பெறுவதற்கான தகுதியுடன் நடிகர் சங்கம் இருக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்டிடமாக அது உருவாக இருக்கிறது. கோவிட் காலகட்டத்திற்கு பிறகு தற்போது கட்டுமான பணிகளில் 30 சதவீதத்திற்கும் மேல் விலை உயர்ந்துள்ளது. நடிகர் சங்க கட்ட விஷயத்தில் சட்டரீதியாக அனைத்துமே தற்போது சரி செய்யப்பட்டு விட்டதால் இனிமேல் புதிய தடைகள் ஏதும் வர வாய்ப்பு இல்லை. இந்த கடனை அடைப்பதற்கு தேவைப்பட்டால் நட்சத்திர கலை நிகழ்ச்சி போன்றவற்றை நடத்தவும் தயாராக இருக்கிறோம். நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவதற்காக இந்தமுறை பெரிய நடிகர்களிடமும் உதவி கேட்க முடிவு செய்து இருக்கிறோம்.  முன்னணி நடிகர்கள் ஏன் பொதுக்குழுவில் கலந்து கொள்வதில்லை என்பது ஒரு பிரச்சனையே இல்லை. அவர்கள் சங்கத்திற்கான பிரதிநிதிகளை சரியாக தேர்ந்தெடுத்து விட்டோம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

திரைப்படங்களில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் வெள்ளிக்கிழமை ரிலீஸ் தேதியை வைத்துக்கொண்டு வியாழக்கிழமை வந்து புகார் செய்ய வேண்டாம். முன்கூட்டியே அது பற்றி எங்களுக்கு தெரிவித்தால் தான் அந்த பிரச்சினையைப் பேசி தீர்க்க வசதியாக இருக்கும். ஜிஎஸ்டி, டிடிஎஸ் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தொகை என கடைசி நேரம் வரை பலர் செட்டில் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு அனைத்து சங்கங்களும் ஒரே மன நிலையில் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!