உணர்வுகளின் திரைமொழி “கருமேகங்கள் கலைகின்றன” …!திரை விமர்சனம்

 உணர்வுகளின் திரைமொழி “கருமேகங்கள் கலைகின்றன” …!திரை விமர்சனம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்கர்பச்சன் இயக்கியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இதில் முதன்மை கதாபாத்திரமாக “ஜஸ்டிஸ் ராமநாதன் ” கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். அவருக்கு மகனாக கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். மேலும் அதிதி பாலன் , யோகிபாபு, குழந்தை சாரல் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாரதிராஜா தனது கடைசி மகனாக கௌதம் மேனன் குடும்பத்தோடு இந்தியாவில் வசிக்கிறார். முதல் மகனும் , மகளும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். வக்கீலாக வரும் கௌதம் மேனனும், பாரதிராஜாவும் ஒரே வீட்டில் இருந்தும் பத்து வருடங்களாக பேசிக் கொள்வதி்ல்லை. பாரதிராஜாவின் பிறந்த நாள் விழாவை தனது மூன்று பிள்ளைகளும் இல்லாமல் கொண்டாடும் போது அவர் மனம் உடைந்து போகிறார். அதன் பின் மகள் மகன்கள் மனம் திருந்தி எதோ ஒரு கிராமத்தில் ஒன்றாக வாழ்வார்கள் போல என நினைத்தால் ஏமாந்து தான் போவோம்.. கதை முற்றிலும் வேறு திசையில் திசையற்று பயணிக்கிறது.

அப்போது பாரதிராஜாவிற்கு கிடைக்கும் பழைய காதலியின் 13 வருட கடிதத்தில் கிடைக்கும் தகவலை வைத்து , அதில் குறிப்பிட்டிருக்கும் மகளை தேடி வீட்டை விட்டு யாருக்கும் சொல்லாமல் வெளியேறுகிறார்.

பாரதிராஜா மகள் அதிதி பாலனை தேடி வேறு ஊருக்கு செல்கிறார். அவருக்கு ஜட்ஜாக இருந்தபோது பொய்கேஸில் அதிதிக்கு அநீதியான தீர்ப்பு வழங்கி அவரது போலீஸ் வேலை போக காரணமாக தான் இருந்ததை கண்டுபிடிக்கிறார். மகளிடம் சென்று அழுகிறார் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அதிதி பாலன் அவரை வெறுத்து ஒதுக்குகிறார். இடையில் கௌதம் மேனனும் தந்தையை தேட முயற்சிக்கிறார். இறுதியில் என்னவாகிறது என்பது தான் மீதிகதை.

இடையில் யோகிபாபுவுக்கும் அவரை அடைக்கலம் தேடிவரும் பெண்ணின் குழந்தைக்கும் இடையேயான பாசப் போராட்டம். யோகிபாபு அருமையான குணசித்திர நடிகராக மாறி வருகிறார் தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு குணசித்திர நடிகர் தயார். அந்த குழந்தையின் அம்மாவாக வரும் புதுமுக நடிகையும் நன்றாகவே நடிக்கிறார். குழந்தை சாரலும் அறிமுகம் என்றே தெரியாத அளவு இயல்பாய் நடிக்கிறாள். ஆனாலும் இது கிளைக்கதையாய் ஓடுகிறதே தவிர மெயின் கதைக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.

எப்போதுமே மனித உறவுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சி மயமான கதைக்களத்தையே தேர்வு செய்து, அதனை திரைமொழியில் காட்ட முயல்வதே இயக்குனர் தங்கர் பச்சன் பாணி .

இன்றைய மாறிவரும் பாஸ்ட்புட் காலகட்டத்தில் இப்படியான மிக மெதுவான , சென்டிமென்டான திரையோட்டம் அல்லது திரைமொழி செல்லுபடியாகுமா? என்பது கேள்விக்குறியே. மேலும் அந்த பாச உணர்வுகளும் ஏதோ ஒரு ஒட்டாத செயற்கை தன்மையுடன் இருப்பதாக தோன்றுகிறது. கதை எங்கே , எப்படி எதைநோக்கி பயணிக்கிறது என்பதே புரிபடாமல் கண்ணாம்பூச்சி காட்டுகிறது. கடைசி வரை என்ன தான் சொல்ல முயல்கிறார் இயக்குனர் என குழம்பி போகிறோம்.

மொத்தத்தில் கருமேகங்கள் வானத்திலேயே கலைந்து போகிறது… ஏன் என்று தான் தெரியவில்லை…..!

எப்படியென்றாலும் எண்பத்தியைந்து வயதில் “பாரதிராஜா” என்கிற அருமையான திரைக்கலைஞன் திரையில் நடிப்பதே ஆகபெரும் சாதனை தான் என்பதை சொல்லியே ஆகவேண்டும்….!!!

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...