அரசு பள்ளிகளுக்கான கல்வியாண்டு நாட்காட்டி ! | தனுஜா ஜெயராமன்
தமிழக அரசு பள்ளி கல்வி துறையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிட்டது. மேலும் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு வருகிற 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
அதே போல 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் பிற்பகல் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வு நடக்கும். 6,7,8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், 9,10 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வு நடைபெறும்.