“தமிழில் பேசுப்பா” தனது மகனிடம் ஸ்டேஜில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்…
ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனிடம் ஸ்டேஜில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தையை தெரிந்தவர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் அண்மையில் வெளியாகின. படத்தில் அவரது இசையமைபில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஒரு அடையாளம் இருக்கிறது. ஷங்கர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களுக்குத்தான் இசையமைப்பார் என்பதுதான் அது. ஆனால் மாமன்னன் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் தனக்குள் அப்படி எந்த பாகுபாடும் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்.
பார்ப்பத்பற்கு அமைதியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பதில்களால் அதிரவைப்பவர். ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது இப்போதைய பாடல்களில் வரிகள் ஒழுங்காக கேட்க மாட்டேங்குது என செய்தியாளர் கூற நல்ல குவாலிட்டியில் ஹெட்ஃபோன் வாங்கி போட்டு கேட்டு பாருங்க என அதிரடியாக கூறியிருந்தார். அதேபோல் தனது மனைவி ஹிந்தியில் பேசியபோது தமிழில் பேசுங்க ப்ளீஸ் என சொல்லி அரங்கத்தை அதிரவைத்தார்.
இந்நிலையில் தன்னுடைய மகன் அமீனிடம் ஸ்டேஜில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, ஒரு மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் வாசிக்க அமீன் பாடலை பாடினார். பாடலை பாடி முடித்த பிறகு தனது மகனிடம் ஏ.ஆர்.ரஹ்மான், “பொண்னுங்க எல்லாம் இருக்காங்க எப்படி ப்பா இருக்கு. கூச்சமா இருக்கா. பயமா இருக்கா? உற்சாகமா இருக்கா? என கேட்கிறார். அதற்கு அமீன் ஆங்கிலத்தில் பதிலளிக்க; உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் பேசுப்பா’ என சொல்ல அந்த அரங்கமே அதிர்ந்தது.