அரிசி விவசாயிகளுக்கு ஜாக்பாட்! தனுஜா ஜெயராமன்
மத்திய அரசு பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசியின் ஏற்றுமதிக்கான வரிக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிக்கவும், பாசுமதி அரிசி வகைகளுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) நிர்ணயம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அரிசி விலை ஆகஸ்ட் 2022ல் ஒரு கிலோ 37.4 ரூபாய்க்கு ரீடைல் சந்தையில் விற்கப்பட்ட நிலையில், தற்போது (ஆகஸ்ட் 2023) 41.4 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் புழுங்கல் அரிசி ஏற்றுமதி 2.6 மில்லியன் டன்னாக இருந்தது, 2023 ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 3.1 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இதேபோல் பாசுமதி அரசியின் ஏற்றுமதி அளவு ஏப்ரல் – ஜூன் காலக்கட்டத்தில் 1.1 மில்லியன் டன்னில் இருந்து 1.2 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. பாசுமதி அரிசி மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (MEP) இதற்கு முன்பு 2011 ஆம் நிதியாண்டில் நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது அரிசி விவசாயிகளுக்கு ஜாக்பாட் ஆக விளங்கும், இதேபோல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி கட்டுப்படுத்தப்படும். உலகின் பெரும்பாலான மக்களின் பிரதான உணவாக இருக்கும் அரிசியின் (பாசுமதி அல்லாத அரசிக்கு) ஏற்றுமதிக்கு இந்தியா சில வாரங்களுக்கு முன் தடை விதித்த நிலையில் அரிசி விலை பெரிய அளவில் உயர்ந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பாசுமதி அரிசிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) நிர்ணயம் செய்ய திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு. பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிக்க அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. அதே நேரத்தில் பாஸ்மதி அரிசிக்கு ஒரு டன்னுக்கு சுமார் 1,250 டாலர் என குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) விதிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.