வெப் சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படம் – இயக்குனர் ஹாருண் மற்றும் தயாரிப்பாளர் முனிவேலன்….!
வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக கே.எஸ்கே செல்வா பொறுப்பேற்றுள்ளார்.
இந்த விழா நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா நிகழ்வில் அனைவரையும் வரவேற்றுறை தயாரிப்பாளர் முனிவேலன் பேசும்போது, “சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. இந்த இடத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் சில வேண்டுகோள்களை வைக்கிறேன். படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் கட்டாயம் படத்தின் புரமோசனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தராத நடிகர்கள் மீது தடை விதிக்க வேண்டும். ஓடிடி வியாபாரத்தை ஒழுங்குபடுத்தி தரவேண்டும். மேலும் பைரசியை தடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
நடிகர் நட்டி பேசும்போது, “எங்களுக்கு சம்பளத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் வெப் படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர். இயக்குனர் ஹாரூன் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்து விட்டது. இப்போதைய சூழலில் பல பேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப்” என்று கூறினார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசும்போது நான் தமிழுக்கு அடிமை. ஹீரோயின்கள் அழகாக தமிழ் பேசியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நட்டியுடன் அவர் அறிமுகமான நாளை உட்பட 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன் இயக்குனர் மிஷ்கின் போல ஒரு சிலர்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்குவதை சரியாக தெரிந்து வைத்து இருப்பார்கள் அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் ஹாரூணும் ஒருவர்” என்றார் .
இயக்குனர் ஹாரூண் பேசும்போது, “நல்ல படைப்புகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலத் தான் தயாரிப்பாளர்களும்.. கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100% எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி” என்றார்.