இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடும்பாரதிராஜா
கோலிவுட்டின் பாசத்துக்குரிய பாரதிராஜாவுக்கு இன்னிக்கு 82வது வயசு! ( இது சர்டிபிகேட்படி. ஆனா அவரது ரியல் பர்த் டே ஆகஸ்டு 23 ஆம். ஆனா இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக்கும்.)
சினிமா என்றால் மாய உலகம் அதில் நடிப்பவர்கள் அதிசயமானவர்கள் என்ற காலகட்டம் 1977ம் ஆண்டு வரை இருந்து வந்தது. அதன்பிறகு அந்த மாயை உடைத்தெறிந்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அதென்ன 1977 என்கிறீர்களா? அந்த ஆண்டுதான் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே திரைக்கு வந்தது. சினிமா ஸ்டுயோவுக்குள் மட்டுமே சுழன்றுக் கொண்டிருந்த சினிமா கேமரா வையும் திரை நட்சத்திரங்களையும் பரட்டையும் சப்பாணியும் இருந்த கிராமத்து வீதிகளுக்கும், பசுமை போர்த்திய வயல் வெளிக்கும் கொண்டு சென்றார். இப்படிக்கூட சினிமா எடுக்கலாமா என்று பிரபல இயக்கு னர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு அப்படங்கள் திரை அரங்கில் வெற்றி கொடிகட்டி பறந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஏற்கனவே பிரபலங்களாக இருந்தபோதும் இப்படம் அவர்கள் இருவரையும் வேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றது.
அடுத்தடுத்து பாரதிராஜா இயக்கிய சிவப்பு ரோஜாக்கள் (1978), கிழக்கே போகும் ரயில்(1978), புதிய வார்ப்புகள் (1979), நிறம் மாறாத பூக்கள் (1979), கல்லுக்குள் ஈரம் (1980), நிழல்கள் (1980), டிக் டிக் டிக் (1981), அலைகள் ஓய்வதில்லை (1981) என அவரின் அஸ்திரங்கள் தொடர்ந்தன. நடிகர் திலகம் சிவாஜி நடித்த முதல்மரியாதை படம் அவரது பாரதிராஜாவின் படங்கள் என்ற கிரீடத்தில் வைரமாக பதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அலைகள் ஒய்வதில்லை படத்தில் காதலுக்கு சாதி குறுக்கிடும்போது பூணூலையும், சிலுவையும் அறுத்து சாதி வெறியர் களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து பெரும் புரட்சி தீயை படரவிட்டவரிவர்.
புதிய அலை தமிழ் சினிமாவின் முதல் புதல்வன், பாரதிராஜா! அவரது பதினாறு வயதினிலேவில் இருந்து தான், தமிழ் சினிமாவில் இயல்புத்தன்மை இன்றியமையாத ஒன்றாக மாறியது! அவரை அடியொற்றி மகேந்திரன் வந்தார். மகேந்திரனை அடியொற்றி பாலு மகேந்திரா வந்தார். பாலு மகேந்திராவை அடியொற்றி பாலா வந்தார். பாலாவை அடியொற்றி சசிகுமாரும் அமீரும் வந்தார்கள். ஆக, கிட்டத்தட்ட நான்கு தலைமுறையின் கதை சொல்லும் பாணியையே பாரதிராஜா தீர்மானித்தார்.
தமிழ்சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று ஒரு சிறப்பு மரியாதையை ஶ்ரீதர் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது கல்யாணப் பரிசு வந்தபோது தான், ஒரு இயக்குனரின் பெயருக்கு தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டினார்கள். அடுத்து வந்தார், பாலச்சந்தர். போஸ்டர்களில் இயக்குனரின் பெயரைப் பார்த்துவிட்டு படங்களுக்கு செல்லும் பழக்கம் அப்போது ஏற்பட்டது. ஆனால், ஶ்ரீதர், பாலச்சந்தர் என எல்லோரின் ரெக்கார்டுகளையும் மிஞ்சினார், பாரதிராஜா.
1980களில் பாரதிராஜாவின் பெயரில் 950 ரசிகர் மன்றங்கள் தமிழகத்தில் உருவாகின. மாஸ் நடிகர்கள் ஒரு கிளாஸ் இயக்குனரை உயர்ந்து பார்த்த காலம் அது. பின்னர், ‘ரசிகனாக இருக்கலாம், ஆனால் ரசிகவெறியனாக இருக்கக்கூடாது’ என்று சொல்லி, மன்றங்களையெல்லாம் கலைத்து விட்டார் பாரதிராஜா!
தேனி அருகே அல்லிநகரம் என்ற கிராமத்தில் 1941ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பிறந்த சின்னசாமி என்ற குழந்தை தான் பின்னர் பாரதிராஜாவாக சினிமாவு லகில் புயலாக நுழைந்து புதிய புரட்சியை ஏற்படுத்தியது. 82 வயது பாரதிராஜா இன்றைக்கும் ஜீன்ஸ் போட்ட இளைஞராக சினிமாவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
அந்த சாதனையாளருக்கு ஹேப்பி பர்த் டே
From The Desk of கட்டிங் கண்ணையா!