“ இன்ஃபினிட்டி “ ஈர்க்கவில்லை – வழக்கமான க்ரைம் திரில்லர் …!!!-தனுஜா ஜெயராமன்
சாய் கார்த்திக் இயக்கத்தில் நடராஜ் என்கிற நட்டி சிபிஐ ஆபீசராக நடித்து வெளி வந்திருக்கும் படம் இன்ஃபினிட்டி. இதில் கதாநாயகியாக
வித்யா பிரதீப் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடக்கும் தொடர் கொலைகளை , துப்பறியும் சிபிஐ ஆபீசராக வரும் நட்டி விசாரித்து வருகிறார். அரசு ஆஸ்பத்திரி டாக்டராக வருகிறார் வித்யா ப்ரதீப்.
கொலையின் பின்னணியை சி. பி. ஐ விசாரிக்கும் போது நடக்கும் திடுக்கிடும் திருப்பங்களும் மர்மமான கேள்விகளுக்கு கிடைக்கும் விடைகளும் படத்தை வேறு கோணத்தில் நகர்த்தி செல்கிறது. சில முறை நட்டியையும் கொல்ல முயற்சி நடக்கிறது. கொலைக்கான காரணம் யார்? மோட்டிவ் என்ன? என்பதே மீதிக்கதை .
கொலைக்கான பிண்ணனி என்ன என படம் நெடுகிலும் சீரியஸாக விரைப்பாக வருகிறார் கதாநாயகன் நட்டி. சிபிஜ ஆபிசராக வரும் அவர் வசனங்கள் பேசுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஹீரோவாக சண்டை போடுகிறார். ஒடுகிறார், துரத்துகிறார், குழம்புகிறார் … நட்டியை போலவே பல இடங்களில் நம்மையும் குழப்பி விடுகிறார் இயக்குனர்.
க்ரைம் திரில்லர் ஜானரில் வரும் மெடிக்கல் க்ரைம் கதைகள் தற்போதைய வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆனால் இந்த படத்தில் தெளிவில்லாத கதை மற்றும் திரைக்கதையால் கதாநாயகன் மற்றும் வில்லனையும் சேர்த்து நம்மையும் எரிச்சலடைய செய்கிறார் இயக்குனர்.
கதையை போலவே வில்லனுக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள்… வில்லனாக வருபவரின் கேரக்டர் எப்போதும் அதீத குழப்பத்துடன் அலைகிறது.. ஆதவன் கண்டமேனிக்கு ஆட்களை போட்டு தள்ளுகிறார்… எதற்கென அவருக்கும் புரியவில்லை நமக்கும் புரியவில்லை.
வித்யா ப்ரதீப் வித்யாசமாக ஏதோ நடிக்க முயன்றிருக்கிறார். கதையே போலவே கதாபாத்திரங்களும் மனதில் ஒட்ட மறுக்கிறது.
படத்தில் கொல்லப்படும் பெண் ஒருவர் தவறான பாலியல் விருப்பம் உடையவள் என்பதை ஏன் திரும்ப திரும்ப சொல்கிறார்கள் என புரியவில்லை.. தவறான கேரக்டர்கள் கொல்லபடவேண்டியவர்கள் என பதிய வைப்பது நியாயப்படுத்துவது தவறான முன்னுதாரணம்.
கதையில் கிளைமாக்ஸ் வரை என்ன சொல்லவருகிறார்கள் என நமக்கும் , ஏன் அவர்களுக்குமே புரிந்திருக்க வாய்ப்பில்லை…
படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் என முடிக்கிறார்கள்.. ஒருவேளை இரண்டாம் பாகத்தில் கதை பார்ப்பவர்களுக்கு புரியும் என எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இன்ஃபினிட்டி ஈர்க்கவில்லை…!!!