இசைத் தெய்வம் நானடா
திரை இசை ரசிக உலகத்திலும் பாலமுரளிக்கு என்றும் அழியாத ஓர் இடமுண்டு. பாலையா வேறு, பாலமுரளி வேறு என்று பிரித்துவிட இயலாதபடிக்கு திருவிளையாடலின் சிறப்பு அம்சங்களாகத் திகழும் ‘ஒருநாள் போதுமா’ பாடலுக்கு நிகர் எது! கண்ணதாசனின்
அருமையான அந்தப் பாடலை கே.வி.மகாதேவன் ஓர் இசைச் சிற்பமாகவே செதுக்கி இருந்தார். போதையூறி மெல்லப் பரவும் ஆலாபனையிலிருந்து, அதன் பல்லவியில் கூடிக்கொண்டே செல்லும் ஒவ்வொரு சொல்லும் கிளர்ச்சியுற வைக்கும். சரணங்களில் பாடகரைத் தொட நீளும் ரசிகரின் கையைப் பிடித்து
உடனிருத்தி ரசிகரையும் குழைந்து, அதிர்ந்து, மிதந்து, முழங்கி நிமிரவைக்கும் குரல் அது. எந்தெந்த ராகங்களின் பெயர் இடம்பெறுகிறதோ அந்த இடங்கள் அதே ராகத்திலேயே அமைக்கப் பட்ட இசையில், ‘கா..னடா’ என்று பாலமுரளி உருக்கி உருக்கி வார்க்கும் வீச்சு அநாயாசமாக வெளிப்படும். ‘என் பாட்டு தேனடா’ என்று அனுபவித்து நகரும் அடுத்த வரியின் எல்லையில், ‘இசைத் தெய்வம் நானடா!’ என்ற அசத்தல் இடத்தில் அந்தப் பாட்டுத் தேர் நிலைக்கு வந்து நிற்பது கண்ணீர் சொரியவைப்பது.
பி.சுசீலாவுடன் அவர் பாடிய ‘தங்க ரதம் வந்தது’ பாடல், சிருங்கார ரசனையில் தொடுக்கப்பட்டிருந்த மதுவின் கோப்பை. கவிக்குயில் படத்துக்கான அவரது, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’, காற்றுடன் அவர் நடந்த வேக நடையின் உரையாடல் பரிமாற்றம். அதில் சரணத்தில், ‘கண்கள் சொல்கின்ற கவிதை இளவயதில் எத்தனை கோடி’ என்ற இடம் கொண்டாட்டக் களம். அதே பாடலைத் தாமும் தனியே பாடியிருந்த எஸ்.ஜானகி, ‘பாலமுரளி பாடியிருந்தது தெரிந்திருந்தால் நான் பாடி இருக்கவே மாட்டேன்’ என்று சொன்னாராம். இளையராஜாவின் மறக்க முடியாத வரிசையில் முக்கிய இடமொன்றில் இருப்பது இந்தப் பாடல்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளிலும் திரை இசையில் பாடிய பாலமுரளி, தாமே இசையமைக்கவும் செய்தவர். ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘நவரத்தினம்’ படத்தில், எம்ஜிஆருக்கும் குரல் கொடுத்தவர் (‘குருவிக்காரன் பொஞ்சாதி மட்டுமல்ல’ என்கிற ஆங்கில இசைப்பாடல் ஒன்றைப் பாடி அதற்கு ஏற்ற கீர்த்தனை ஒன்றையும் பாடி இருப்பார் ஒரு காட்சிக்காக).
‘ஒருநாள் போதுமா’ பாடல் காட்சியில் நடிக்கும் முன்பு, நடிகர் பாலையா அந்தப் பாடல் ஒலிப் பதிவையும், பொதுவாக பாலமுரளி கிருஷ்ணா பாடும் விதத்தையும் கவனித்துவிட்டு வந்ததாகச் சொல்வார்கள். திரை நிரம்பிய ஒரு பேரவை. இரண்டு பக்கங்களிலும் வண்ண வண்ண உடைகள் அணிந்தபடி விதவிதமான வாத்தி யக்காரர்கள். பின்னே விசிறிக் கொண்டிருந்தபடி முக அசைவில் அசத்திக் கொண்டிருக்கும் உசிலைமணி முதலானவர்களுக்கு நடுவே நாயகமாகக் கம்பீர வடிவில் மீசையை அடிக்கடி நீவிவிட்டுக்கொண்டே ‘ஒருநாள் போதுமா’ என்று பாடுவதாக நடித்தது பாலையாதான் என்றாலும், ‘இசைத் தெய்வம் நானடா’என்ற இடத்தில் சாட்சாத் பாலமுரளி கிருஷ்ணா அங்கே தோன்றிவிடுவதாகப் படும்!
அந்தத் தன்னுணர்வும், துணிவு மிக்க ஞானச் செருக்கும் பெருகி வெளிப்படும் ஒரு காந்தாரக் குரலை ஒரு குழந்தையின் புன்னகை நழுவியோட இசைத்துக்கொண்டே இருந்த மகத்தான மனிதரே இப்போது மறைந்துவிட்டிருக்கிறார், தமது இசை மேதைமைக்கு சாகா வரம் அளித்துவிட்டு!
எஸ்.வி.வேணுகோபாலன்
– இந்து தமிழ் திசை