“செம்மொழி என தமிழை முதன்முதலில் மெய்ப்பித்த தமிழறிஞர் – பரிதிமாற் கலைஞர்”
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி முதன் முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர். தமிழ் மீது கொண்ட தீராத பற்றால் சூரிய நாராயண சாஸ்திரி என்ற தமிழ் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்டார். மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள விளாச்சேரியில் 1870 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் பிறந்தார். தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றுத் தேர்ந்தார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி மன்னரின் உதவியை பெற்று சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார். தமிழ் மொழி, தத்துவத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 23 வயதில் தான் பயின்ற கல்லூரியில் கிடைத்த தத்துவத் துறை ஆசிரியர் பணியை ஏற்காமல், குறைந்த சம்பளமாக இருந்தாலும் தமிழ்த் துறையையே தேர்வு செய்து பணி செய்தார்.
செந்தமிழ் நடையில் இவர் சுவைபட விவரிக்கும் ஆற்றலில் ஈர்க்கப்பட்டு, மற்ற துறை மாணவர்களும் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பார்கள். தமிழ் அறிவும் ஆர்வமும் கொண்ட மாணவர்களை தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாத்திர நூல்களைக் கற்பித்தார் பரிதிமாற் கலைஞர். நாவல், உரைநடை நாடகம், செய்யுள் நாடகம், கவிதை நூல், ஆய்வுநூல், நாடக இலக்கண நூல் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.தமிழ் மொழியின் வரலாறு, தமிழ் புலவர் சரித்திரம், மதிவாணன், ரூபாவதி, மான விஜயம், தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருது உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். சென்னை பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்ட போது, அதை மீண்டும் சேர்க்கப் போராடியவர் பரிதிமாற் கலைஞர்.
இவரது தமிழ் மொழிப் பற்றைப் போற்றும் வகையில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி விளாச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து, அங்கு பரிதிமாற் கலைஞரின் வெண்கலச் சிலையை நிறுவி கடந்த 31.10.2007-ஆம் ஆண்டு அவரே நேரடியாக வந்து நினைவு இல்லத்தைத் திறந்துவைத்தார். மத்திய அரசும் பரிதிமாற் கலைஞரின் தமிழ்ச் சேவையைப் போற்றும் வகையில் தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது. இந்த இல்லம் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவிகள் இந்த நினைவில்லத்துக்கு வந்து செல்கின்றனர். மேலும், தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும் மாணவர்களும் இங்கு வந்து பரிதிமாற் கலைஞரின் புத்தகங்களை தங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர். தமிழ்,தமிழர் முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பரிதிமாற் கலைஞர் 1903-ல் மறைந்தார். கல்லூரி இதழ்களில் எழுதிய கட்டுரைகளிலும் கவிதைகளிலும் சரி, உ.வே.சா.வுக்கு எழுதியதாகக் கிடைக்கும் கடிதங்களிலும் சரி, அவர் மறைவு வரை அனைத்து இடங்களிலும் சூரியநாராயண சாஸ்திரியார் என்கிற பெயரையே பயன்படுத்திவந்திருக்கிறார். மத்திய அரசு, மறைமலையடிகள் பெயரில் அஞ்சல் தலை வெளியிட்டு கெளரவித்தது போல் பரிதிமாற் கலைஞர் என்கிற பெயரில் வெளியிடாமல் சூரியநாராயண சாஸ்திரியார் பெயரில்தான் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழுக்காக தொண்டாற்றி மறைந்த பரிதிமாற் கலைஞரின் பிறந்த தினம் இன்று (ஜூலை 6). இந்நாளில் அவரை நினைவு கூர்வோம்.