“உச்சத்தை தொட்டது தக்காளியின் விலை..!”
தக்காளி தினசரி உணவு பயன்பாட்டில் தவிர்க்க முடியாத பொருளாகி உள்ளது. அன்றாட சைவ மற்றும் அசைவ உணவுகளில் தக்காளி மிக முக்கிய பொருளாக உள்ளது. ஆனால் அதன் விலை நிலையற்றது. தக்காளியின் உற்பத்தியை பொருத்து விலை மாற்றம் ஏற்படும். ஒரு நாள் அதிகமாக இருக்கும். மற்றொரு நாள் விலை குறைவாக இருக்கும்.எளிதில் அழுகக்கூடிய பொருள் என்பதால் விலை நிலையில்லாமல் இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி மகசூல் வெகுவாக அதிகரித்ததன் காரணமாக அதன் விலை கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. பெரிய சந்தைகளில் மொத்த விலையில் ரூ.5க்கும் தக்காளி விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தமிழ்நாட்டில் தக்காளி மகசூல் 75 சதவீதம் குறைந்தது. மேலும், தக்காளி அதிகம் பயிரிடப்பட்டுள்ள பகுதியில் பெய்த மழையால், வயல்களில் உள்ள செடிகளில் தக்காளி அழுகியது. அதேநேரத்தில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி கிலோ ரூ.40 வரை விற்பனையானது. இந்நிலையில் வரத்து குறைவினால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்து கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை திடீரென இருமடங்கு உயர்ந்து விற்பனையானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் இடமாக கோயம்பேடு சந்தை இருக்கிறது. இந்த சந்தைக்கு தினமும் 1,200 டன் காய்கறிகள் வரும். ஆனால் பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும். ஆனால் இன்று வெறும் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்திருக்கிறது. அதாவது தக்காளி வரத்து பாதியாக குறைந்திருக்கிறது. எனவே விலை அதிகமாக இருக்கிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், “கடந்த மாதம் முழுவதும் தக்காளி கிலோ.10 ரூபாய்க்குதான் விற்பனையானது.
மேலும் அதிக அளவில் மீதமிருந்ததால் நாங்கள் கொட்டிவிட்டோம். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. வழக்கமாக வரும லோடு எதுவும் இன்று வரவில்லை. மொத்த வியாபாரிகளான எங்களுக்கு போதுமான அளவு தக்காளி வராதபோது சில்லறை வியாபாரிகளுக்கு எப்படி தக்காளி கிடைக்கும்? எனவே தற்போது எங்களுக்கு கிடைத்துள்ள லோடை கொண்டு வியாபாரம் செய்து வருகிறோம். வரத்து பற்றாக்குறைதான் இந்த விலையேற்றத்திற்கு காரணம். மட்டுமல்லாது சில வியாபாரிகள் குளிர்சாதன கிடங்கில் சேமித்து வைத்து அடுத்த நாளும் விற்பனை செய்கின்றனர். ஆனால் எல்லா வியாபாரிகளுக்கும் இது சாத்தியமில்லை. எனவே அரசு குளிர்சாதன கிடங்குகளை கட்டி தர வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் காய்கறிகளை சேமித்து வைத்து தட்டுப்பாடு ஏற்படாமல் விற்பனை செய்ய முடியும். தற்போது 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.800-900 வரை வாங்கி வருகிறோம்” என்று கூறுகின்றனர். வெளி மாநிலங்களிலிருந்தும் தக்காளி போதுமான அளவில் வராததும் இந்த திடீர் விலையேற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. தக்காளி மட்டுமல்லாது பீன்ஸ் மற்றும் இஞ்சியும் கிலோ ரூ.100ஐ தொட்டிருக்கிறது. இதனால் சென்னை மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுகளில் தக்காளி வாங்க வந்தவர்கள் வேறு வழி இல்லாமல் புலம்பி கொண்டே தக்காளியை வாங்கி சென்றதை காண முடிந்தது. இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.