திரைக்கலை வித்தகர் நடிகர் மனோபாலா மறைந்தார்

 திரைக்கலை வித்தகர் நடிகர் மனோபாலா மறைந்தார்

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா திடீரென காலமானார். 69 வயதாகும் மனோபாலா கடந்த 10 நாட்களுக்கு மேலாக கல்லீரல் பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்தபோதுதான் இறப்பு ஏற்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (3-5-2023) காலமானார்.
இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக மனோபாலா பணிபுரிந்தார்.   அப்படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்
1982களில் ‘ஆகாய கங்கை’ என்ற திரைப்படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா, அதன் பிறகு ரஜினியின் ’ஊர்க்காவலன்’ உள்பட பல படங்களை இயற்றினார்.

1985-ல் மோகன், ராதிகா, ஜெய்சங்கர், நளினி நடிப்பில் வெளிவந்த பிள்ளை நிலா ,1987-ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சிறைப்பறவை திரைப்படம், 1989-ல் விஜயகாந்த் , சுஹாசினி, ரேகா நடிப்பில் வெளியான என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், 1990 ஆம் ஆண்டு சத்யராஜ், சீதா, ஷோபனா நடிபில் மல்லுவேட்டி மைனர் ,  1993-ஆம் ஆண்டு பாண்டியன், பானுப்ரியா, ரஞ்சிதா, கீதா நடித்து வெளிவந்த முற்றுகை போன்ற எண்ணற்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

24 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார்.  ஏராளமான திரைப்படங்களில் அவர் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் சிரஞ்சீவியின் ’வால்டர் வீரய்யா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக்க கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராக மிளிர வேண்டும் என்கிற கனவோடு இருந்த மனோபாலாவுக்கு நடிகராகவே ஜொலிக்க முடிந்தது. அதுவும் இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் மக்களை மகிழ்வித்து வருகின்றன. இவர் நடிகர், இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சில தரமான படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக இவர் தயாரித்த முதல் படமான சதுரங்க வேட்டை பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து சதுரங்கவேட்டை 2 தயாரித்தார். இதையடுத்து பாம்புச்சட்டை என்கிற படத்தைத் தயாரித்தார்.

நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, செண்பகத் தோட்டம், நந்தினி, அன்னை, கடைசியாக 2002ல் இயக்கிய  படம் 777.

மேலும் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி அதில் சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்தும் வந்தார். இப்படி ஓய்வில்லாமல் சினிமாவை சுற்றியே அவரது வாழ்க்கை அமைந்தது. ஓய்வறியாத கலைஞனைக் காலன் அழைத்துக்கொண்டான்.

தனது நண்பனை இழந்து விட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கலை தெரிவித்துள்ளார். அதேபோல் சூர்யா, இயக்குனர் வெங்கட் பிரபு போன்றோர் தங்களது இரங்கலை பதிவிட்டுள்ளனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...