கிருஷ்ணை வந்தாள் | 10 | மாலா மாதவன்

 கிருஷ்ணை வந்தாள் | 10 | மாலா மாதவன்

நெற்றித் திலகம் மின்ன – காளி

நீயும் இங்கு வருவாய்

பெற்றெ டுத்தத் தாயாய் – வந்து

பேணி நலம் காப்பாய்

உற்றுத் தெளிந்தோம் நாங்கள் – காளி

உன்னை அறிந்து வந்தோம்

பற்று பாசம் வைத்தோம் – எங்கள்

பந்தம் என்றும் நீயே

ருக்கொழுந்து வாசம் கொல்லையெங்கும் கமகமத்தது.

“எனக்குக் கல்யாணம் வேண்டாம். நான் உன்னை விட்டுப் போக மாட்டேன் கிருஷ்ணை.”

“அம்மாவாய் நான் சொல்வதைக் கேள் அகல்யா. மகளான உனக்குத் திருமணம் செய்து வைப்பது என் கடமையும் கூட. உனக்காகத் தானே உனக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுத்து அந்த வீட்டுக்கு நீ செல்ல வேண்டுமென்று போன் செய்யச் சொல்லி உன் அப்பாவைத் தூண்டினேன். நாளை போய் பாரேன். உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கான்னு என் கிட்ட வந்து சொல்லு என்ன..” கிருஷ்ணை ஆதுரமாய்ப் பேசினாள்.

“உன்னை விட்டு எப்படி நான்?” சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள் அகல்யா.

“ம்ஹும்.. நீ அடங்க மாட்டாய்.. இப்படி அழுகையில் கரைந்தாயென்றால் நான் கிளம்பறேன்.” பொய்க்கோபம் காட்டினாள் கிருஷ்ணை.

“இல்லை. அழ மாட்டேன். நீ போகாதே!” அகல்யா கிருஷ்ணையின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“அகல்யா! நீ போகும் உன் புகுந்த வீடு என்னை ஆராதித்த வீடு. ஆனால் இப்போது என்னை மறந்த வீடு. உன்னால் தான் அந்த வீட்டில் என்னை ஞாபகப் படுத்த முடியும். ஏன்னா நீ என் மகளாச்சே!”

“ஆக என் மூலமாய் உனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு. அதான் என்னை உன் கருவியா வைச்சுண்டு இருக்கியா? உண்மையாவே என் மேல பாசம் இல்லையா?” கிருஷ்ணையிடம் பேசிப் பேசி அவளைத் தெய்வமாகவே பார்க்கத் தோன்ற வில்லை அகல்யாவுக்கு. சக மனுஷியிடம் பேசுவது போல் குறைபட்டாள். கோபப்பட்டாள். ஆதங்கப் பட்டாள்.

“அசடு! நீ வேற உன் குடும்பம் வேறயா? நீ புதுப்பெண்ணாய் அந்த வீட்டினுள் நுழையற. உன்னைப் பார்த்துக் கொள்ளும் தெய்வமா உன்னோடு இருக்க நானும் நுழையறேன். விஷயம் அவ்வளவு தான்.” கிருஷ்ணை சிரித்தாள்.

“ஆமாம்.. அது எப்படி நீ வரும் பொழுதெல்லாம் மருக்கொழுந்து வாசம் அடிக்குது?”

“ஏன்னா.. என் அகல்யா கட்டும் மருக்கொழுந்து மாலை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. அதன் வாசனை என் மீது எப்பவும் இருக்கிறது.”

கிருஷ்ணை சொன்னதும் அகல்யாவுக்கு மகிழ்ச்சியில் கண்கள் விரிந்தன.

“என் மாலையை அவ்வளவு பிடிக்குமா உனக்கு?”

“மாலையோடு உன்னையும்!” அகல்யாவைத் தழுவிக் கொண்டாள் கிருஷ்ணை. அந்தத் தழுவல் மறுநாள் அகல்யா புறப்படுவதற்கான சக்தியைக் கொடுத்தது.

சுந்தரவதனன் “அகல்யா!” எனத் தேடி வரவும் அத்துடன் பேச்சை நிறுத்தி விட்டு விடைபெற்றாள் கிருஷ்ணை.

றுநாள்.. காட்டூரில்..

அலமேலு அங்குமிங்குமாய் பரபர என நடந்து கொண்டிருந்தார். அவரின் கணவர் ராஜாராமனின் குலதெய்வம் வானமலைப் பெருமாள். அங்கு செல்ல அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். கணவர் இருந்தவரை அடிக்கடி போவார்கள் . திடீரென்று ஒருநாள் நெஞ்சு வலி என்று விழுந்தவர் தான் . அதன் பின் மனோவை விட ஒற்றை ஆளாய்த் தன் தலை மேல் பொறுப்பு எடுத்துக் கொண்டு அத்தனை தொழிலையும் கவனிப்பவன் வாசஸ்பதி தான். வானமலைப் பெருமாள் பெயரைத் தான் அவனுக்கு வைத்திருக்கிறது. குடும்பமே பெருமாளைத் தவிர வேறு எந்த சாமியையும் கும்பிடாத குடும்பம்.

“அம்மா! மாலையெல்லாம் நம்ம மதுரை சொக்கலிங்கத்துட்ட சொல்லி இருக்கேன். போகும் போது ரெடியா இருக்கும்.. வாங்கிப்போம். மனோ கிளம்பிட்டானா? வழக்கம் போல செவப்பு வேட்டியும் சட்டையுமா இருக்கப் போறான். ஒழுங்கா நல்லதனமா பேண்ட் சட்டையோட வரச் சொல்லுங்க. வர்ற பெண்ணுக்கு இவனை பிடிக்க வேண்டாமா?”

“அவன் தான் கல்யாணமே வேணாங்கறானே பதி. உனக்குப் பிடிச்சிருக்கா பாரேன். இரண்டு தடிமாடுகளையும் வீட்டுல வைச்சுண்டு.. எப்படா ஒரு மருமக வருவான்னு இருக்கு எனக்கு!”

“இப்ப வர்றது உங்க தம்பி பொண்ணாச்சே. விட்டுக் கொடுப்பீங்களா நீங்க? அதான் ஆளப் பார்க்காமையே ஜோடி சேர்த்து விடுறீங்க.”

“நானே இன்னும் பார்த்ததில்லடா. சின்னக் குழந்தையா அவளைச் சுந்தரும், வேணியும் தூக்கிண்டு நம்ம பாட்டி வீட்டு வாசல்ல வந்து நின்னப்ப எங்க அம்மாவும் அப்பாவும் நாயை விரட்டற மாதிரி விரட்டின்னா விட்டா. நான் அப்ப அம்மா வீட்டுல தானிருந்தேன். உங்களை எல்லாம் அழைச்சுண்டு போயிருந்தேன்.”

“ஏம்மா.. அப்படி என்ன தப்பு செய்தார் மாமா?”

“சொந்த மாமா பொண்ண அவனுக்கு நிச்சயம் பண்ணி இருக்க, கூடப் படிச்சவளைக் கல்யாணம் பண்ணிண்டான் சொல்லாமக் கொள்ளாம. அப்புறமும் வந்தானா? .. ம்ஹூம்! எனக்குத் தான் மனசு கெடந்து அடிச்சுக்கும். சுந்தர் எப்படி இருக்கானோ? என்ன பண்றானோன்னு? இவனா மரமாட்டம் எங்க நினைப்பே இல்லாம நின்னுட்டான். அப்புறம் என்ன நினைச்சானோ இல்ல அவன் பெண்டாட்டி வேணி எடுத்துச் சொன்னாளோ கைக்குழந்தையோட வந்து நின்னான். அப்பா அம்மா திட்டி விரட்டினாலும், நான் தான் தெருமுனை கோவில்ல அவாள இருக்கச் சொல்லி யாருக்கும் தெரியாம ஓடிப் போய் பார்த்தேன்.

அழகான பொண் குழந்தையை வைச்சுண்டு வேணி என் தம்பி சுந்தரோட நின்னு அக்கா! என் குழந்தைக்கு நீங்க தான் பேர் வைக்கணும்ன்னா. நான் தான் வாய் நிறைய அகல்யான்னு கூப்பிட்டேன்.”

“ஓஹோஹோ! பெயர் வைச்சதே நீங்க தானா? அப்ப நான் எங்கிருந்தேன்?” வாசஸ்பதி கேட்டான்.

“நீயும் என் கூட தாண்டா இருந்த படவா. உன்னை உட்கார வைத்து உன்மடியில் அகல்யாவை இட்டாள் உன் அத்தை. பேர் வைச்சதும் பெண்டாட்டி ஆக்கிட்டியாடா பயலேன்னு கூட நான் கிண்டல் செய்தேன். ம்ஹும்! அப்புறம் தான் எல்லாம் மாறிப் போச்சு!”

“நீங்களும் அப்பாவுமாவது அப்புறம் போய்ப் பார்த்திருக்கலாம். பாவம் அந்த குட்டிப் பொண்ணு”

“அந்தக் குட்டிப் பொண்ணு இப்போ இளம்பெண்ணாகிட்டா. வேணியும் அகல்யாவின் சிறுவயதில் டைபாய்டில் போய்விட்டாள். அப்பவும் சுந்தர் தனியே இங்கு வந்து நின்றான். உன் பாட்டி தாத்தாவுக்கு மனமிளகவே இல்லை. ஏனென்றால் அவர்கள் பார்த்து வைத்த எங்கள் மாமாவின் பெண் சுந்தர் கிடைக்கலன்னு மனசு ஒடிஞ்சு விரக்தியில் போயிட்டா. அந்தக் கோபம் துணையை இழந்து வந்த சுந்தரை பார்த்து உன் வம்சமே விளங்காதுடான்னு சாபமிடச் செய்தது.

” பாவம்மா மாமா! காதல் என்ன அவ்வளவு தவறா?”

“அதனால் தான் நான் உறுதி எடுத்துக் கொண்டேன். என் பசங்க காதல் திருமணம் செய்தால் தாராளமாய்ச் செய்துக்கோங்கடான்னு சொல்லணும்ன்னு. எங்கே வடக்க ஒண்ணு தெற்க ஒண்ணுமா இங்க வேண்டாம்ன்னு நிக்குது.”

“அப்பல்லாம் அந்தப் பொண்ணு அகல்யாவை பார்த்து நான் என்னம்மா சொல்லுவேன்?”

“என்ன சொல்லுவ? ஒண்ணும் சொன்னதா ஞாபகமில்ல. ஆனா சமயத்தில் கேட்ப.. ஏம்மா தங்கச்சிப் பாப்பாவ யாருக்கோ கொடுத்துட்டன்னு? அன்னிக்குக் கோவில்ல உன் மடியில் கிடத்தியதால அப்படிக் கேட்கறியோன்னு நினைச்சுப்பேன்”

“தங்கச்சிப் பாப்பாவா? நோ! நோ!” தலையை உலுக்கிக் கொண்டான் வாசஸ்பதி. அவன் மனம் போகும் போக்கு இப்போது தெள்ளந்தெளிவாகத் தெரிந்தது. இதுவரை யார் மேலும் வராத விருப்பம் இப்பொழுது அகல்யா மீது எட்டிப் பார்க்கிறது. பார்ப்போம். நீங்குதா நிலைக்குதா என்று.

“சரி போய் மனோ கிளம்பியாச்சான்னு பாருங்கம்மா. என்னேரமும் பூஜைன்னு சிவப்பு வேட்டி கட்டிக்கிட்டு ரூமுல உட்கார்ந்துக்கறான். பேச்சும் ஒரே தத்துவம் தான். என்னத்த கிளம்பி வந்து என்னத்த பொண்ணைப் பார்த்து.. என்னத்த.. அட போங்கம்மா! நீங்க ரெடி பண்ணிட்டுக் கூப்பிடுங்க. நான் வேலை விஷயமா ஒரு போன் பண்ணிட்டு வரேன். ஒரு அரை மணிக்குள்ள கிளம்பினா தான் மதுரைக்குள்ள போய் மாலைய வாங்கிட்டு போகச் சரியா இருக்கும்.” இள ஊதா நிறச் சட்டையும், அடர் நீலத்தில் பேண்ட்டும் அணிந்து கிளம்பினான் வாசஸ்பதி.

ஆகாய நீலம் மனதிற்கு அமைதியைத் தரக் கூடியது. மென்மையான பெண்கள் என்றும் ஆகாய நீலத்தை விரும்புவர் என எதிலோ ஒரு துணுக்கு படித்திருந்தான். அதனாலோ என்னவோ அகல்யா தன்னை முதன்முதலாகப் பார்க்கப் போகிறாள் என நீலத்தைத் தன் உடையாகத் தேர்ந்தெடுத்தான்.

“மனோ! மனோ” அவன் அறைக் கதவைத் தட்டினார் அலமேலு. சிலபல தட்டல்களுக்குப் பிறகு ஆழ்ந்த தியானத்தில் இருந்தவன் விழித்துத் திறந்தான்.

தலையில் குளித்த ஈரம் சொட்டிக் கொண்டிருக்க சிவப்பில் வேட்டி அணிந்து வெற்று மேல் உடம்புடன் வந்து கதவைத் திறந்தான். திறந்ததும் மலர்களின் மணமும், சாம்பிராணியின் மணமும் கமகமத்தது. நன்கு படித்தவன் தான். ஆனால் வேலையில் மனம் செல்லவில்லை.

இவை நிகழ்வதற்கு முன்னோடியான அந்நாளை அலமேலு நினைத்துப் பார்த்தாள். அன்று மனோ தன் காலேஜ் நண்பர்களோடு கேரளா டூர் போயிருந்தான். அங்கு ஒரு மாந்திரீகரைப் பார்த்துக் கவரப்பட்டு நண்பர்களை விட்டு விட்டு அவரோடு உதவியாய்த் தங்கி விட்டான். மையோ மாந்திரீகமோ என்ன செய்தாரோ அவரும் இவனைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டார். மீண்டும் திரும்பி வந்தவன் அறைக்குள்ளேயே அடைந்து யாரோ அளித்த ஒரு மந்திரத் தகடுக்குப் பூஜை புனஸ்காரம் என வாழ்ந்து வருகிறான். முன்பு சாப்பிடாமல் இருந்தான். இப்போது சொல்லிச் சொல்லி சாப்பிட வெளியில் வருகிறான். ஆனால் இயல்பான பேச்சில்லை. எங்கோ வெறித்திருப்பான். ஏக்கத்தில் பார்த்திருப்பான். ஒரு வேளை காதல் தோல்வியோ? அதைத் தான் பூஜை என்னும் போர்வையில் மறைக்கிறானோ என்று கூட விசாரித்துப் பார்த்தாகி விட்டது. அது எதுவுமே இல்லை. அந்த மாந்திரீகர் வழியில் எதுவோ புகுந்து இவனை ஆட்டுவிக்கிறது. பேயோ பிசாசோ என்னவென்று புரிய மாட்டேங்கறது.

“என்னடா இது கோலம்? எலும்பும் தோலுமா.. நமக்கிருக்கற பணத்துக்கு நாலு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம். நாளுக்கு நாள் இப்படி மெலிந்து போறியேடா மனோ. உனக்கு என்ன தான் பிரச்சனை?”

மனோ அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி..கிளம்பு. நம்ம குலதெய்வம் வானமலைப் பெருமாள் கோவிலுக்குப் போகணும். இன்னிக்கு உன் சுந்தர் மாமா அதான் என் தம்பி குடும்பமும் அங்க வராங்க.”

நான் வரலையென்று தலையாட்டினான் மனோ.

“இல்ல நீ வந்து தான் ஆகணும். உன்னைப் பார்க்கணும்ன்னு உன் மாமா துடிச்சுட்டு இருக்கான்.”

“இல்ல நான் வரலை.”

“நீ கும்புடற அந்த மந்திரத் தகடு மேல ஆணையா சொல்றேன். நீ வர. வரலன்னா உனக்கு அம்மாவே இல்லாமப் போயிடும், சொல்லிட்டேன்!”

அலமேலு கோபத்துடன் சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

மனோ அறைக்குள் நுழைந்து படாரெனக் கதவைச் சாற்றிக் கொண்டான்.

“ஆழ விழுந்தேன் கிணற்றில் – நீ

அணைத்து தூக்கிக் கொண்டாய்

ஆளும் எந்தன் தாயே – உன்

அடிமை என்றும் நானே!” எனப் பாடியவன்

“நீ இருக்கும் இந்த இடத்தை விட்டு வேறு எங்கு போய் உன்னைக் கும்பிட நான்? போக உன் அனுமதி வேண்டும் அம்மா!”

மந்திரத்தகடில் பூ போட்டு மனதார பூஜை செய்தான். கிடைத்த சமிக்ஞையில் அரைமணியில் அலமேலுவுடன் வாசலுக்கு வந்திருந்தான். வாசஸ்பதிக்கு வியப்பான வியப்பு. அறையை விட்டு நகர யோசிப்பவன் அதைத் தாண்டி முதலடி எடுத்து வைத்திருக்கிறான். ஆக அகல்யா இவனுக்குத் தானோ? யோசித்தவன்.. தன் மனப் பெட்டகத்தில் குழந்தையாய் வரைந்திருந்த அகல்யாவைக் குமரியாய் வைக்கவா இல்லை குழந்தையாய் நிறுத்தவா எனத் திரும்பக் குழம்பிப் போனான்.

விர்ரெனக் காரைக் கிளப்பி போகும் வழியில் மாலைகளை வாங்கிக் கொண்டு பறந்தவன் நேரே போய் நிறுத்திய இடம் வானமலைக் கோவிலே.

மலை அடிவாரத்தில் காரை நிறுத்தி விட்டு மலை ஏறும்முன் குடும்பத்துடன் அடிவாரத்தின் முதல்படியைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளக் குனிந்து தொட்டான் வாசஸ்பதி.

–க்ருஷ்ணை வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...