ஆருத்ரா தரிசனம் இரண்டாம் நாள் திருவாதிரைக் களி படையல்

மார்கழி மாதப் பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளைத் திருவாதிரை விவாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஆருத்ரா தரிசனம் என்றும் அழைக்கின்றனர். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம். இந்த நட்சத்திர நாளில் சிதம்பர நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷமானது.

சிவ ஆலயங்களில் திருவிழாக்கள் வெவ்வேறு நாட்களில் நடந்தாலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி மட்டும் ஒரே நாளில் நடத்தப்படும். அன்றைய தினம் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு தங்க அங்கி அலங்காரமும் சந்தனக் காப்பு அலங்கரமும் மலர் அலங்காரமும் ஒவ்வொரு கோயிலும் வெவ்வேறு மாதிரி அலங்காரங்கள் செய்விக்கப்படும்.

சிவபெருமான் நடனமாடிச் சிறப்பித்த ஐந்து இடங்களை பஞ்ச சபைகள் அதாவது ஐம்பெரும் சபைகள் என்று அழைக்கிறார்கள். அவை பொற்சபை (சிதம்பரம்), வெள்ளி சபை (மதுரை), ரத்தினசபை (திருவாலங்காடு), தாமிர சபை (திருநெல்வேலி), சித்திரசபை (குற்றாலம்).

மார்கழித் திருவாதிரை திருவிழா, ஆனித் திருமஞ்சனம் உள்ளிட்ட ஆறு நாட்கள் நடராசருக்குத் திருவிழா எடுத்து வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.

சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகளில் பொற்சபை உள்ள இடம் சிதம்பரம். இதற்குத் தில்லை என்றொரு பெயரும் உண்டு. இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், நடராஜர் என்றழைப்படுகிறார். இத்தலத்தில்தான் தாருகா வனத்து ரிஷிகளின் செருக்கை அடக்க சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். தங்களால் நெடுங்காலமாகச் செய்துவரப்பட்ட தவம், அக்னி, வேத மந்திரங்கள் முதலிய எதனாலும் சிவபெருமானை வெல்லமுடியாது போகவே ரிஷிகள் தோற்றுவிட்டதாக ஒப்புக்கொண்டனர்.

அதன்பிறகு சிவபெருமான் தன்னுடைய ருத்ர தாண்டவத்தை ஆனந்த தாண்டவமாக மாற்றி அவர்களுக்கு அருள்புரிந்தார்.

மார்கழி மாதம் குளிர் அதிகமாக இருக்கும் எங்கும் எதிலும் குளிர்ச்சிதான். அதனால் அம்மாதத்தில் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் வரும் நாளில் ருத்ர தாண்டவம் ஆடியவரை அபிஷேகங்களால் மேலும் குளிர்விக்கின்றோம்.

ஆருத்ரா தரிசனம் அன்று சிவபெருமானை வணங்கி வழிபடுபவர்களுக்கு எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். ஆணவம் அழிந்து அன்பு உண்டாகும்.

நடனமாடும் நடராஜர் சிலை பல தத்துவங்களை நமக்குச் சொல்கிறது. இறைவனுக்குரிய ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல், என்ற ஐந்தொழில்களின் விளக்கமாகத்தான் இந்த ஆடவல்லானின் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

சென்னை வடபழநியில் உள்ள சாந்தநாயகி உடனுறை ஸ்ரீவேங்கீஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆருத்ரா விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுவாமி ஆலயத்தை ஏழு முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிவ தலங்களில் மகத்துவமும் தனித்துவமும் நிறைந்தது உத்தரகோசமங்கை எனும் திருத்தலம். இந்தத் திருத்தலம் ராமநாதபுரத்துக்கு மிக அருகில் உள்ளது. இங்குள்ள நடராஜப்பெருமான் சிலை ஐந்தரை அடி உயரம் கொண்டது. முழுவதும் மரகதத் திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்ட அபிஷேகம் நடைபெறும். அதுவும் 37 வகை மூலிகைகளால் செய்யப்படும்.

ஆருத்ரா தினமான அன்று மட்டுமே நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம். இன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு நடராஜர் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.

ஆருத்ரா அபிஷேகத் தினத்திற்கு அடுத்த நாள் வரும் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று திருஆதிரைக் களியுடன் ஏழு அல்லது ஏழுக்கு மேலான காய்கறிகள் கலந்த கூட்டுடன் இறைவனுக்குப் படைத்தளிக்க வேண்டிய முக்கியமான திருநாள். மோதகத்தின் ஒரு வகையான திருவாதிரைக் களி மிகவும் சுவையுடையது.

ஆருத்ரா தரிசனத்தின்போது கபாலத்தில் தலைச்சுழியில் அபூர்வமான ஆகர்ஷண சக்திகள் எழுகின்றன. இவற்றை விரயம் செய்துவிடாமல் உடல் நாளங்களில் ஈர்த்துக்கொள்ளவே ஆலய வழிபாட்டிற்குப் பிறகு இல்லத்திலும் பூஜையைத் தொடர்வதாகும். உள்ளத்தில் ஆத்மலிங்கம் ஒளிர்வதால் தினசரி தலைக்கு நீராடுவதையும்கூட ஆத்மலிங்க அபிஷேகமாக உத்தமத் தெய்வீக நிலைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம் அன்று சிவபெருமாளை வணங்கி வழிபடுபவர்களுக்கு எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். ஆணவம் அழிந்து அன்பு உண்டாகும். இறைவனிடம் கொள்ளும் பக்தி முக்தி அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!