கிருஷ்ணை வந்தாள் | 7 | மாலா மாதவன்

 கிருஷ்ணை வந்தாள் | 7 | மாலா மாதவன்

பொங்கல் படையல் வைப்போம் காளி

புடவை புதிது வைப்போம்

தங்க மாலை கொண்டு உன்னைத்

தனித்து ஒளிரச் செய்வோம்

அங்கம் உருளல் செய்வோம் காளி

அருளை வேண்டி நிற்போம்

சிங்க மாக வந்து நீயும்

சிறப்பை அள்ளி வழங்கு!’

“சுந்தர்! இங்க பாருங்களேன். இந்த நோட்டு அகல்யாவோடது. எவ்வளவு அழகா காளி மேல் பாடல்கள் எழுதி வைச்சிருக்கா. நானும் பாடி பாடி பார்க்கறேன். அவ கிட்ட ஏதோ சக்தி இருக்கு. நீங்க சொல்ற மாதிரி அவ ஒண்ணும் சித்தம் கலங்கினவ இல்ல”

“அன்னிக்கு நடந்தத நீ சொல்லும் போது எனக்கும் அப்படி தோணுது. ஆனால் நம் கூட இருக்கும் , நம்மோடு வளைய வரும் ஒரு பெண்ணுக்கு எப்படி தனியே தெய்வம் தரிசனம் தரும்? முதல்ல தெய்வம் இந்தக் காலத்துல எல்லாம் நேர வருமா?”

ஆத்திகனாய்ப் பேச்சைத் தொடங்கி நாத்திகனாய்ப் பேச்சை முடித்த சுந்தரவதனனைப் பார்த்து ராமனாதன்..

“அகல்யா நம்ம குழந்தைடா சுந்தர். அவளுக்கு ஒண்ணுன்னா நாம தானே பொறுப்பு. என் யோசனை என்னன்னா கூடிய சீக்கிரமே அவளுக்கு விவாகம் பண்ணிடலாமுன்னு. நீ என்ன சொல்ற ஜோதி. இதைச் சாக்கிட்டாவாது வெளிநாட்டுல இருக்கற நம்ம பிள்ளை, மாட்டுப்பொண்ணு, பேத்தியை வரச் சொல்லலாம்”

“ம்க்கும்! அதிலும் உங்க லாபத்தைப் பார்த்துடுங்கோ!” குறும்பாய்ச் சொன்னவள்..

“ஆமா சுந்தர். அகல்யா பூஜையறையில் பூஜை பண்ணிண்டு இருக்கா. வந்ததும் பேசி முடிவெடு. கூடிய சீக்கிரம் அவளுக்குக் கல்யாண மேளம் கொட்டறோம். அவ்வளவுதான்!”

கோபியின் குடும்பம் வந்து சொன்னது, அகல்யா காலில் விழுந்து நீ தான் எங்க குலசாமின்னு சொன்னது. போகும் போது வீரா தாத்தா. எல்லாம் அகல்யாம்மா அருள்ன்னு சொன்னது எல்லாம் ஜோதி சொல்லச் சொல்ல பிரமிப்பாகத் தான் இருந்தது சுந்தருக்கு. ஆனாலும் நம்ப முடியவில்லை.

பூஜையறையில் இருந்து வந்த அகல்யா…

“அப்பா! இன்னிக்கு விதைக்கறதா இருந்த நெல்லை விதைக்க வேணாம்ன்னு சொல்லுங்கப்பா. மாரியம்மா மழையாக் கொட்டப் போறா. வெதப்புக்கு வெள்ளோட்டம் விட்டா வெள்ளக்காட்டுல விளையாத நெல்லாயிடும்” சன்னதம் வந்தவளைப் போல் ஆவேசமாகச் சொன்னாள்.

என்னதிது இப்படிச் சொல்றா? இந்த வெயில் காலத்துல மழையாவது? அதிலும் வெள்ளக்காடுன்னு சொல்றா? இப்ப விதைநெல் விதைக்க தலைக்கு மேல கொட்டான் சுமந்துண்டு எல்லோரும் கோவிலுக்கு வருவாங்களே. என்ன சொல்லி திரும்பப் போகச் சொல்றது? இவளை நம்பி மழை வரும்ன்னு சொல்லலாமா? நாளப் பின்ன இவ சொன்னான்னு சொல்லி நடக்கலன்னா சித்தம் கலங்கிடுத்துன்னு முத்திரை குத்திருவாங்களே. நினைத்த சுந்தரவதனனின் மனது..

அப்படியே பலித்தாலும் அகல்யாவை சாமின்னு முத்திரை குத்திடுவாங்களே. பின்ன எப்படி இவளுக்கு கல்யாணம் காட்சின்னு பண்றது? அம்மனோட அம்மனா இவளையும் கோவில்ல உட்கார வைச்சுட்டா அகல்யாவின் திருமண வாழ்க்கை..

யோசித்து யோசித்து தலை வலித்தது. வெளியே வந்து வானத்தைப் பார்த்தவர் மழை வரும் அறிகுறி சற்றும் தெரியாமல் இருக்கவே இன்னும் குழப்பமுற்றார்.

சரி.. சொல்ல வேண்டாம். காளியம்மா கோவில்ல பொங்கல் வைச்சு நம்ம பிரார்த்தனையை நிறைவேத்திடுவோம். வந்த மறுநாளே பண்ணனும்ன்னு நாள் பார்த்தும் திரும்ப செக்கப் அது இதுன்னு அலைஞ்சதில் பண்ண முடியாமப் போச்சு. ஒருவேளை செஞ்ச வேண்டுதல நிறைவேத்தலன்னு தான் ஆத்தா இவ மேல இறங்கிட்டாளா?

ஒரு அப்பாவாய் அகல்யா மீதான யோசனைகள் அவருக்கு அதிகரித்தது. ஊரும் பேரும் ஒருவர் இருக்கும் வரைக்கும் முக்கியம் அல்லவா?

ஜோதியையும், அவள் கணவர் ராமனாதனையும் இங்கேயே கொஞ்ச நாள் இருக்கச் சொல்லி விட்டார். ராமனாதன் நடுவில் தேவகோட்டைக்குப் போய் துணிமணிகள் எடுத்து வந்திருந்தார். இனி அகல்யா கல்யாணம் முடிந்தால் தான் அவர்களும் கிளம்புவதாகச் சொல்லி விட்டார்கள். நல்லதாப் போயிற்று. பணத்தை மட்டும் வைத்து பந்தல் போட முடியும். அந்தப் பந்தல் சிறக்க உற்ற உறவுகள் வந்தால் தானே முடியும். உறவுகளை நேசிக்கத் தெரிந்தவர் சுந்தரவதனன் என்றாலும் அவரின் காதல் திருமணத்தால் பெற்றவர்கள் விட்ட சாபம் அந்தப் பக்கத்து உறவுகளைத் தள்ளியே வைத்து விட்டது. இப்போது பெற்றவர்களும் போய் இருக்கும் ஒரே அக்கா அலமேலுவிடம் அவன் பையன் வாசஸ்பதி மூலமாகச் சேர்ந்தாகி விட்டது. இன்னும் அக்காவை நேரே பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. போன் செய்து கேட்கணும் என நினைத்தவர் சட்டென்று எதையோ நினைத்து விதிர்த்தார்.

“ராமனாதன்.. ஜோதிம்மா இங்கே வாங்க. உங்க கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சது ஞாபகம் வந்துடுத்து. அன்னிக்கு ஜோதிம்மா கேட்டாளே .. எப்படி வாசஸ்பதி நம்பர் உனக்குத் தெரியும்ன்னு? என் போனில் யாரோ பதிந்து வைத்திருந்தார்கள்ன்னு சொன்னேன்.. அது அவள் தான். அவளே தான். அன்னிக்கு நான் ஐசியூவில் இருந்த பொழுது அவளை நான் என் கண்ணால் பார்த்தேன். குட்டிப் பெண்ணாய், பட்டணிந்து , நகையெல்லாம் அணிந்தபடி என் பக்கம் அமர்ந்திருந்தாள். என் தலையைக் கோதிக் கொடுத்தாள். அகல்யா! அகல்யா என்றேன் பலகீனமாய். நான் இருக்கேன் கவலைப்படாதே என்றாள். அவள் அவள் நம் காளி தாம்மா! இன்றைக்கே போய் பொங்கல் வைத்து விடலாம். மழை பெருக்கெடுத்தாலும் விட வேண்டாம். அவள் அருளுக்கு நான் நன்றி செலுத்தலேன்னா எப்படி?”

“உண்மை தான் சுந்தர். நாட்டில் பாதிப்பேர் துன்பம் வந்தால் ஆண்டவனிடம் பேரம் பேசுறோம். எனக்கு இதைத் தீர்த்து வை. உனக்கு நான் இதைச் செய்யதேன்னு. ரொம்ப சின்னப் பிரார்த்தனையா உன் கோயிலுக்கு வந்து ஒரு தேங்காய் உடைக்கிறேன்னு சொல்லி அப்படியே செய்யாம விட்டவங்க எத்தனை பேர்? காக்கும் வரை கடவுள். காரியம் ஆச்சுன்னா கல்லுன்னு சொல்ற மாதிரி தான் நிறையப் பேர் நடந்துக்கறாங்க. ஆனா திருப்பதி பெருமாள் நின்னு வசூலிப்பார்ன்னுவாங்க.”

“எங்க அலமேலு அக்காவுக்கு வானமலைப் பெருமாள் குலதெய்வம். அவங்க புகுந்த வீட்டுல வானமலைப் பெருமாளைத் தவிர எந்த சாமியையும் சேவிக்க மாட்டாங்க. அவங்க பரம்பரையில யாரோ அம்மன் மேல கோபமா இருந்தாங்களாம். அது அப்படியே யாரும் போகாம விட்டுப் போச்சு.”

“பின்ன எப்படி சுந்தர்? அகல்யாவை அவங்க வீட்டுக்குக் கொடுக்கணும்ன்னு சொல்ற. அவ எப்படி நம்ம காளியைச் சேவிக்காம இருப்பா? பிரச்சனை வருமே.” ஜோதி கவலைப் பட்டாள்.

“இப்ப எங்க இருக்கா அகல்யா?”

“ஊருல மழை பெய்யப் போகுதுன்னு சொன்னவ அப்படியே மயக்கமா இருக்குன்னு சொன்னா. நான் தான் சித்த தூங்குன்னு அறைக்கதவைச் சாத்திட்டு வந்தேன்.” ஜோதி சொன்னாள்.

ஓ! ஆமா.. அதைச் சொல்ல விட்டுப் போச்சு. வாசல்ல யாராவது போனா ஊருக்குள் சொல்லி விடலாம். இன்னிக்கு நாள் நல்லா இல்ல. வெதைக்க வேணாம்ன்னு. இரு! சொல்லிட்டு வரேன் என்ற சுந்தரவதனன் வீட்டை விட்டு இறங்கி நடந்தார்.

வழியில் பார்த்த வீரா தாத்தாவிடம் சொல்லி ஊரில் சொல்லச் சொன்னார்.

அவர் திரும்பி வீட்டில் உள்ளே வந்து பார்த்த பொழுது அகல்யா எழுந்திருந்தாள்.

“ஏம்மா அகல்யா! இன்னிக்குப் போய் காளியம்மனுக்குப் பொங்கல் வைச்சு வேண்டுதல நிறைவேத்திடலாம்ன்னு உன் பெரியம்மா சொல்றா. என்னம்மா போவோமா? வேண்டிய சாமானெல்லாம் ஞாபகமா எடுத்துண்டு வந்துடறியா? நான் முதல்ல போய் பூஜைக்கு ஏற்பாடு பண்ணச் சொல்றேன். வேளையோட முடிச்சுட்டு வந்துடலாம். மத்தியானத்துக்கு மேல மழை வந்துட்டா சிரமம்.”

“சரிப்பா. இப்ப எப்படிப்பா மழை வரும்? மழை மேகமே இல்லையே!” மயக்கத்தின் முன் மழை வருமென்று அவள் சொன்னது அவளுக்கே தெரிய வில்லை.

புரிந்து கொண்ட ஜோதி.. பேச்சை மாற்றினாள்.

“சரி வா அகல்யா! கொஞ்சம் மாவிளக்கும் போடுவோம். எல்லாம் எடுத்துக்கலாமா? சுந்தர் ! நீ இவரோட முன்னாடி போய் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணு. நாங்க வந்து பொங்கல் பண்றோம்.”

ஜோதி தயாரானாள்.

அகல்யாவுக்கு ஒரு பட்டுப்புடவையை எடுத்துக் கொடுத்து உடுத்தி வரச் சொன்னாள்.

“ஏன் பெரிம்மா.. பட்டெல்லாம்?”

“பெரிய பொண்ணா லட்சணமா இருடா கண்ணு. வா! கிளம்பு! உன் கிருஷ்ணை காத்திருப்பாளே!”

அவளைக் கிளப்பும் வழியாக கிருஷ்ணை என்ற பெயரைச் சொன்னதும் சிட்டாகப் பறந்து ரெடியாகி ஜோதி பெரியம்மாவுடன் கோவிலுக்கு வந்து விட்டாள் அகல்யா.

இன்னும் கிருஷ்ணை இவளருகில் வரவில்லை. எல்லோரும் இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் போலும். குறும்புக்காரி. சமயத்தில் குட்டிப் பெண்ணாகத் தான் நடந்து கொள்வாள்.

அகல்யா தனக்குள் சிரித்தபடி ஓரத்து அடுப்பில் பொங்கலை வைத்தாள். பொங்கல் வைப்பதற்கென மண் அடுப்பும், விறகுகளும் அங்கு இருந்தன. பணம் கட்டி விட்டால் போதும். அவரவர் பாத்திரம் கொண்டு வந்து பொங்கல் வைத்து வழிபடலாம்.

சுந்தரவதனனின் குடும்பமும் அதே போல் பொங்கல் வைத்து மனதார அம்மனை வழிபட்டனர்.

பூஜையின் போது அகல்யா மனமுருகிப் பாடினாள்.

*ஆண்டாண்டு காலமுந்தன் அண்மை வேண்டி

அன்பென்ற பெருமழையில் நனைய வேண்டி

ஊண்விட்டு உள்ளத்தில் உனையே இருத்தி

உளமாறப் பூசனைகள் ஊடே செய்து

பூண்டபெரு ஆரம்போல் பக்திப் பெருக்கில்

புலனைந்தை அடக்கிப்பின் பூவைச் சொரிந்து

வேண்டிடுவோர் மத்தியிலே வீணோ நானும் விடைசொல்வாய் என்காளி விரைவில் நீயே

கிருஷ்ணை தன் காற்சலங்கை குலுங்க கர்ப்பகிரகத்துக்குள் தாண்டவம் ஆட ஆரம்பித்தாள். அகல்யாவின் ஒவ்வொரு வரிக்கும் அவள் உள்ளிருந்து அபிநயம் பிடிக்க அகல்யாவின் கண்களுக்குப் பெருவிருந்தாய் அமைந்தது. உணர்ச்சிப் பெருக்கில் அகல்யா இன்னும் பாடினாள்.

நினைவெல்லாம் நீயென்று நித்தம் சொல்லி

நீங்காது வடிவழகை நின்றே வணங்கி

வினையகற்ற வேண்டுமென்று விரதம் பூண்டு

வீட்டோடு தெய்வமுனை விரும்பித் துதித்து

சுனைபோல வற்றாத சுயமாம் பக்தி

சூழ்ந்திருக்கும் வேளையிலே சுடரை ஏற்றும்

அனைவருக்கும் ஈடாமோ இணையோ நானும்

ஆய்ந்துசொல்வாய் ஆலம்பா டிகாளி நீயே

கிருஷ்ணையின் தாண்டவ வேகம் அதிகரித்தது.

இங்குமங்கும் போகும்போது இறைவா என்றே

இசைபோல அழைப்பேனே நானும் உன்னை

தங்குமிடம் நுழைந்திட்டால் தாயே என்பேன்

தாண்டிவெளி சென்றிட்டால் தாயே என்பேன்

பங்குணவை உண்ணும்முன் பசியில் நினைப்பேன்

பாழும்பசி முந்திடும்பின் பாட்டில் வடிப்பேன்

எங்குமுள்ள சக்தியென உன்னை நானும்

இயல்பாக நடத்துகின்றேன் இதுவென் தவறோ?”

இங்கும் அங்குமாய் சிரிப்புடன் நடந்து காண்பித்தாள் கிருஷ்ணை. அவள் முகம் அகல்யாவின் பாட்டால் மகிழ்ச்சியில் ஜொலித்தது.

அன்னையுந்தன் அழகுடைய நாமம் போற்றி

அன்றாடம் பாடுகிறேன் ஆசை தீர

முன்னம்வந்து நிற்பாயோ மூழ்கித் திளைக்க

முனைப்போடு வாசலையே விழிகள் தேடும்

நின்னழகில் மெய்மறந்து நிலவே ஒளியும்

நித்தமுன்னை சித்தமேற்றி நிலவைக் காண்பேன்

சின்னபல வார்த்தைகளால் சேர்த்தேன் மாலை

செழிப்புறவே சேர்ப்பித்தேன் சேயாய் நானும்

வார்த்தைகளை வாங்கி மாலையாய் அணிவித்துக் கொள்வது போல் பாவனை செய்தாள் கிருஷ்ணை. அகல்யா கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உடல் சிலிர்த்தது.

பாட்டாலே பூஜிப்பேன் பாவை உன்னை

பலவாறு போற்றிடுவேன் பகலும் இரவும்

வாட்டுமிந்த வல்வினைகள் வாடி ஓட

வந்திங்கே உன்னருளை வழங்கு தாயே

கூட்டத்தின் ஓரத்தில் உனையே நினைத்து

குரல்கொடுக்கா நெஞ்சமது நானே அம்மா

நாட்பொழுதும் நாவாலே பாட்டி சைக்க

நகராது எம்மோடு இருப்பாய் அம்மா!”

இப்போது சலங்கை சலசலக்கச் சின்னப் பெண்ணாய் ஓடிவந்து அகல்யாவின் மடிமேல் உட்கார்ந்து கொண்டாள் கிருஷ்ணை. மெய்மறந்து பாடிய அகல்யாவின் கன்னத்தில் முத்தமிட்டு மறைந்தாள். அது அனைவரின் கண்ணை மறைத்து அவள் கொடுக்கும் பரிசு.

பாட்டு கேட்ட அனைவருக்கும் உடல் புல்லரித்தது. சுந்தரவதனன் நெகிழ்ந்து போய் கண்ணில் பெருக்கெடுத்த நீரோடு மகளை அணைத்துக் கொண்டார்.

“இந்தப் பாடலை கோவிலில் கல்லில் எழுதி நிறுத்தி விடலாம்மா. அம்மனைக் கும்பிட வரும் எல்லோரும் பாடட்டும்!”

என்று சுந்தரவதனன் சொல்ல பூசாரியும் ஆமோதித்தார்.

அப்பா சொன்ன யோசனை அகல்யாவைக் குளிர்வித்தது. அந்தளவு பாட்டு அத்தனை பேர் உள்ளத்தையும் தொட்டது.

–கிருஷ்ணை வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...