ஒற்றனின் காதலி | 4 | சுபா

 ஒற்றனின் காதலி | 4 | சுபா

ந்தப் பெண் வெள்ளை நிற ஸாரி அணிந்திருந்தாள். புடவை நெடுக வெளிர் ரோஸில் பூக்கள் சிந்தியிருந்தன. ரோஸ் நிறத்தில் ரவிக்கை. தலையில் ஓர மல்லிகைச் சரம். பின்னப்பட்ட பின்னல், பாம்பு போல் தொங்கிக் கொண்டிருந்தது.

என் வரவால் சலனப்பட்டு, அவள் திரும்பிப் பார்த்தபோது, தெரிந்த அவள் முகம், என்னை ஒரு விநாடியில் சொர்க்கத்திற்குக் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டது.

ஐந்து விரல்களையும் உபயோகப்படுத்தி, மெல்ல உயர்த்திப் பிடித்துக் கொஞ்சத் தோன்றும் மோவாய். சிவப்பான சின்ன அதரங்கள். நீளமான மூக்கு. கண்கள் பெரியவை. அகன்றவை. அவை கடலையும் நினைவுபடுத்தின. மானையும் நினைவுபடுத்தின. முயலையும் நினைவுபடுத்தின. கரிய, கரிய பார்டர் லைன் கொண்ட அந்தக் கண்களை பார்த்துக் கொண்டே இருப்பதற்காகவே, இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றியது. இமைகளை ஒருமுறை படபடத்தாள். கொஞ்சம் அகன்ற நெற்றியில் வேல் போல் திலகம் வைத்திருந்தாள்.

இந்த காலத்தின் ஸ்டிக்கர் சமுத்திரத்தின் நடுவில் அந்த செஞ்சாந்து வேலே ஒரு வினோதம். வித்தியாசம். மடக்கினால், இந்தப் பெண்ணைத்தான் மடக்க வேண்டும் என்று என்னை உடனே, உடனே ஒரு இன்ஸ்டண்ட் தீர்மானம் எடுக்க வைத்த, மாசு மருவற்ற, பளபளப்பான, மினுமினுப்பான, அப்பாவியான முகம்.

அவள் என்னைப் பார்த்துவிட்டு, உடனே திரும்பி, அவள் ஆர்டர் செய்திருந்த குளிர்பானத்தைக் குடிக்கத் தொடங்கினாள். நான் பிரமித்து போய் உட்கார்ந்திருந்தேன்.

அவள் முதுகு தெரிந்தது. டைட்டாக ரவிக்கை. ரவிக்கையின் விளிம்பு மீறி லேசாகப் பிதுங்கிய சந்தன, தந்த, தங்க உடல்.

இடுப்புச் சரிவு. அதன் விரிவு. அப்புறம் தெரிந்த அந்த கும்மென்ற குடம்.

மதன காமராஜன் கதைகளில் ஒரு நாயகன், உலகிலேயே சிறந்த அழகியை, அவன் கண்ணெதிரே சந்தித்து விட்டால், மயக்கம் போட்டு விழுந்து விடுவான். அந்த மாதிரி மயக்கம் போட்டு விழுந்திருக்க வேண்டியவன் நான்.

எப்படியோ சமாளித்தேன். எப்படிச் சமாளித்தேன் என்ற பிற்பாடு நிறைய சந்தர்ப்பங்களில் யோசித்துப் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதில் கிடைத்ததில்லை. இவள்தான். தக்கலை, தங்க வயலில் காணக் கிடைக்கும் ஒரே தங்கச் சிலை. நிஜமாகவே தங்கச் சிலை. இவளை மட்டும் நான் தேற்றிவிட்டால், ஆயிரக் கணக்கில் டாலர்கள். அவ்வளவு கிடைக்கும்.

சர்வர், வந்து என்னருகில் நிற்பது தெரிந்தது. மரியாதைக்காக ஒரு முறை குனிந்து நிமிர்வது தெரிந்தது. மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மெனு கார்டை காட்டி என்னவோ கேட்கிறான் என்று தெரிந்தது. ஆனால், எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

நான் ஒரு மாதிரி மேகங்கள் சூழ்ந்த வெட்ட வெளியில், மலைகளின் முகடுகளுக்கு மேல், குளிர் குளிராக சஞ்சரித்துக் கொண்டிருந்தேன்.

பேரர் என்னைத் தொட்டான்.

தொட்டபின், நான் தொபீலென்று கீழே விழுந்தேன்.

“ம்” என்று திடுக்கிட்டுப் போய் ‘ம்’மினேன்.

“என்ன சார் உடம்பு சரியில்லையா?”

“இல்லையே, ஐ’ம் ஆல் ரைட்.”

“கொஞ்ச செகண்டுகளுக்கு முன்னால் நீங்கள் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருந்தீர்கள். பேய் அடித்துப் போட்ட மாதிரி.”

“ஆம், கொஞ்ச நேரத்திற்கு முன்னால் எனக்கு ஒரு மாதிரி மயக்கம் வந்து விட்டது.”

“என்ன சார் சாப்பிடுகிறிர்கள்?”

ஒன்றும் சாப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை, அவளைப் பார்த்ததும், என் மனம், வயிறு, நெஞ்சு எல்லாம் நிறைந்து விட்டது.

“ஒரே ஒரு லெமனேட்” என்றேன்.

என்னை வினோதமாகப் பார்த்துவிட்டு, அகன்றான் அவன்.

லெமனேட் வந்தது. குடித்தேன். ஒரே உறிஞ்சலில் டம்ளர் காலி. நான் உட்கார்ந்திருந்தேன். எனக்கு, என் இரை சிக்கிவிட்டது. அதை ஃபாலோ பண்ண வேண்டும். எங்கே இருக்கிறாள் என்று கண்டுபிடிக்க வேண்டும். எப்படி அவளைச் சிக்க வைப்பது என்று திட்டம் போட வேண்டும்.

நான் இந்த மாதிரி தீவிர சிந்தனையில் இருந்த நேரத்தில் என்னை அறியாமல் நடந்துவிட்ட அந்த விஷயத்தைத் தவற விட்டேன்.

எனக்கு லெமனேட் கொண்டு வந்த பேரரின் குரல் உயர்ந்திருந்தது.

“இந்த மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பேன், நான். காசு கொடுத்துவிட்டு நீங்கள் போங்கள். இல்லையா, கழுத்தில், காதில் போட்டிருக்கும் எதையாவது கழற்றிக் கொடுங்கள்” என்று கத்தினான் அவன்.

என் தங்க தேவதை நின்றிருந்தாள்! கொடிபோல் வாடியிருந்தாள். அவள் கண்கள், கண்ணீர் சொரியத் தயாராய் இருந்தன.

அவள் என்ன செய்வதென்று புரியாத ஒரு பார்வையுடன் கண்களைச் சுழற்றினாள். என்மேல் அவள் பார்வை தயங்கியது. நின்றது.

என்னை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

நான், என் அதிர்ஷ்டத்தை வியந்தேன். என்னைத் தேடி அவளே வருகிறாளா?

“எக்ஸ்க்யூஸ் மீ.”

“என்ன வேண்டும் மேடம்?” என்று அவள் எக்ஸ்க்யூஸ்மீயை முடிக்கும் முன்பே கேட்டேன்.

“ஐ’ம் வெரி, வெரி ஸாரி” என்னும்போது, அவள் கண்கள் மேலும் கலங்கிவிட்டது.

“ப்ளீஸ், என்ன என்று சொல்லுங்கள்?”

“என் பர்ஸ் தவறிவிட்டது. எங்கே என்று தெரியவில்லை. நான் சாப்பிட்ட கூல்ட்ரிங்க்ஸிற்குத் தர என்னிடம் காசு இல்லை. தயவு செய்து பத்து ரூபாய், கடன் தர முடியுமா? நான் உங்களுக்கு அந்தப் பணத்தை வீட்டிற்குப் போய்க் கொண்டு வந்து தந்து விடுகிறேன்” என்றாள்.

“அவ்வளவுதானா? பத்து ரூபாய்தானே? அதற்காகவா நீங்கள் இவ்வளவு தூரம் அப்செட் ஆகியிருக்கிறீர்கள்?” என்றேன். பாக்கெட்டில் இருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்.

பேரர் குனிந்து வாங்கிக் கொண்டான்.

“என் லெமனேட்டுக்கும் சேர்த்து” என்றேன்.

“தாங்க்யூ சார்.”

“பாக்கியை நியே வைத்துக் கொள்.”

“தாங்க்யு வெரிமச் சார்.”

பேரர் எங்கள் இருவரை விட்டுவிட்டுப் போய்விட்டான்.

“போகலாமா?” என்று கேட்டேன்.

“ம்” என்றாள். அவமானப்பட்டிருந்ததால், அவள் முகம் சிவந்திருந்தது.

“இதெல்லாம் சகஜம். இதற்கெல்லாம் வருத்தப்படாதீர்கள்! பை தி பை பர்ஸில் நிறைய பணம் இருந்ததா?”

“நிறைய இல்லை. ஒரு ஐம்பது ரூபாய் இருந்தது. எனக்குப் பணம் போனதுகூட கவலையில்லை. ஒரு ஹோட்டலில் வந்து அவமானப்பட்டுவிட்டோமோ என்றிருக்கிறது. கொஞ்ச நேரத்திற்குள் என்னைப் பற்றி அவன் என்னவெல்லாம் நினைத்திருப்பான். நீங்கள் என் வீடு வரை வர முடியுமா? உங்களிடம் அந்தப் பணத்தை திருப்பித் தந்துவிடுகிறேன். உங்களுக்குச் சிரமமாய் இருந்தால், உங்கள் அட்ரஸைக் கொடுங்கள். நானே உங்கள் இடத்திற்குக் கொண்டு வந்து பணத்தைத் தந்து விடுகிறேன்.”

“முதலில் வெளியே போவோம்” என்றேன்.

வெளியே வந்தோம்.

“உங்கள் வீடு எங்கே இருக்கிறது?” என்று கேட்டேன். தங்கவயல் பிரதேசமே சொர்க்க பூமியாகத் தெரிந்தது.

சாலையில் போனவர்கள் எல்லாம் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனதில் இருந்து, அவள் அழகின் பரிமாணத்தை என்னால் முழுமையாக உணர முடிந்தது. அப்படிப் பார்த்தவர்களில் ஒரு பயலாவது என்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமே. ம்ஹூஹூம்.

ஒரு ஆம்பிளை என்றால், ஒரு ஆம்பிளையும் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

“நேரு சுரங்கத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது” என்றாள்.

நான், அவள் சொன்னது, அவள் வீட்டைப் பற்றி என்று புரிந்து கொள்ள ஒரு வினாடி நேரம் எடுத்துக் கொண்டேன்.

எங்களைக் கடந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோவை வழி மறித்து நிறுத்தினேன்.

“ஏறுங்கள். நானே கொண்டு விடுகிறேன்” என்றேன்.

“எதற்கு வீண் சிரமம்?”

“சிரமமாவது இன்னொன்றாவது. பரவாயில்லை ஏறுங்கள். இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் உதவாவிட்டால், அப்புறம் நம் பிறப்பிற்கே அர்த்தமில்லாமல் போய் விடுகிறது.”

அவள் சிரித்தாள். “தாங்க்ஸ்” என்று ஏறிக் கொண்டாள்.

நானும் ஏறினேன். ஆட்டோவின் பின்சீட்டில், அவள் ஒரு மூலை. நான் ஒரு மூலை.

வண்டி ‘டர்டர்’ என்று உறுமிக் கிளம்பியது.

“எங்கே சார்?”

“நேரு சுரங்கம்.”

“இங்கே லெஃப்டில்” என்றாள், நேரு சுரங்கத்தை நெருங்கியவுடன்.

அதுவரை மௌனமாக வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள். நானும் முதல் நாளே, முதல் மணி நேரத்திலேயே அவளிடம், அதிகமாக நெருங்காமல் மௌனம் சாதித்தேன்.

“மூன்றாவது வீடு.”

நின்றது. இறங்கினாள்.

“நீ வண்டியை எடுப்பா” என்றேன்.

“என்ன சார் இது? உள்ளே வந்து பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடலாமே” என்றாள் அவள் ரகசியமாக.

“பத்து ரூபாய்க்குப் போய் கணக்குப் பார்க்காதீர்கள். ஒரு ஃப்ரண்ட் என்றால் செய்ய மாட்டோமா? பரவாயில்லை மேடம், விடுங்கள்” என்றேன்.

வாக்குவாதம் செய்ய விருப்பப்படவில்லை போலும்.

“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“பணத்திற்காக என்று கேட்பதாய் இருந்தால், நான் சொல்லவே இல்லை.”

“உங்கள் அட்ரஸைச் சொல்லக் கூடாதா? அவ்வளவு ரகசியமான இடமா நீங்கள் இருப்பது?”

லாட்ஜ் பெயரைச் சொன்னேன். ரூம் நம்பரைச் சொன்னேன்.

“உங்கள் பெயர்?” என்றாள்.

“சிவரஞ்சன்.” என்றேன்.

ஆட்டோவைத் திருப்பச் சொன்னேன். திரும்பியது.

ஆட்டோவின் பின்பக்கச் சதுரம் வழியாக நான் பார்த்தபோது, அவள் வாசலில் நின்று ஆட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

பரவாயில்லை. முகவரியாவது தெரிந்ததே. பத்து ரூபாயில் எனக்கு அதிர்ஷ்டம் இவ்வளவு இருக்கிறதே.

விட்டுப் பிடிக்கலாம். அவள் பெயரைக் கேட்கவில்லை. என்ன செய்கிறாள் என்று கேட்கவில்லை. அதெல்லாம் முதல் சந்திப்பில் கேட்டால் சந்தேகம் வந்து விடும். ஒரேயடியாக விலகப் பார்ப்பார்கள்.

எங்கே போய்விடப் போகிறாள்?

எப்படியாவது இவளை வீழ்த்தியே தீருவது என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டேன்.

அன்றைக்கு இரவு கலர், கலராய் கனவுகள்.

கனவுகளின் ஒவ்வொரு ஃப்ரேமிலும், என் தங்க வயல் தேவதை இருந்தாள்.

–காதலி வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...