கந்தசஷ்டியும் முருகப்பெருமானின் தோற்றமும்
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி, 6 தாமரை மலர்களில் 6 குழந்தைகளாக உருவானது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட 6 குழந்தைகளும் அன்னை பராசக்தியின் அணைப்பால் 6 திருமுகங்கள், 12 திருக்கரங்களுடன் ஒரே சக்தியாக ஒன்றாகி, ஆறுமுகனாகக் காட்சி தந்து, சூரபத்மனை வதம் செய்து, தேவர்களை காத்தது.
முருகப் பெருமானின் அவதார நோக்கமே சூரனை வதம் செய்வதற்காகத்தான் தோன்றியது. சிவனின் தவத்தைக் கலைக்க அனுப்பிய மன்மதன் எய்த பாணத்தால் கோபமுற்று மன்மதனை எரித்துவிடுகிறார் சிவபெருமான். மன்மதனின் மனைவி ரதியின் வேண்டுதலால் மன்மதனை உயிர்த்தெழச் செய்த சிவன்பெருமான் மன்மதன் இனி உருவமற்ற மன்மதனாக விளங்குவார் எனப் பணிக்கிறார். அதற்குப் பதிலாக மன்மதனுக்கு இணையான அழகு படைத்த முருகப்பெருமானை தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளின் வழியே ஆறுமுகன் முருகப்பெருமானை அவதரிக்கச் செய்கிறார். சிவனின் அம்சமே முருகப்பெருமான். சிவன் வேறு முருகன் வேறு அல்ல என்பதே இதன் தத்துவம்.
முருகப் பெருமான் சூரபத்மனுடன் போரிட்ட 5 நாட்களையும் நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். 6ஆவது நாள் சூரசம்ஹாரமும், 7ஆவது நாள் முருகன் – தெய்வானைத் திருக்கல்யாண வைபமும் நடக்கிறது.
நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும், எல்லாம் நொடியில் நீங்கி, எதிரிகள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும்.
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில், 6 நாள் ஸ்கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. சூரசம்ஹாரம் அக்டோபர் 30 தேதி நடக்கிறது. சஷ்டி திதி அக்டோபர் 30 ஆம் தேதி காலை தொடங்கி அக்டோபர்
31ஆம் தேதி காலை முடிவடைகிறது.
வடபழநி ஆண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் மகாகந்தசஷ்டி விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி விழா 24ஆம் தேதி தொடங்கியது. விழாவின் பிரதான நாளான 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரமும் இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை (28/10/2022) அன்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பழனி ஆண்டவரைத் தரிசனம் செய்தனர். நேற்று நடந்த விழாவில் தமிழக இசைக் கவின்கலை பல்கலைக்கழகம், அரசு இசைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து 108 பேர் கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை வடபழனி முருகன் கோயில் தெரியும். அதுபோல் வேறொரு வடபழனி திருச்சி-பெரம்பலூர் சாலையில் உள்ளது. இத்தலத்து முருகன் கந்தபெருமான் பழநியில் இருப்பது போல் ஆண்டிக் கோலத்துடன் சிறிய குன்றின் மீது எழுந்தருளியுள்ளார்.
முருகப் பெருமான் தலங்களில் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
சஷ்டி விரதத்தின் ஆறாவது நாள் பக்தர்கள் திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடலாம். அந்த நாளில் இரவு அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு முடிந்தால் மாவிளக்கு போடலாம். அப்போது பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிலரோ அடுத்தநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேதியத்தை தரிசனம் செய்த பின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவார்கள்.
நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும், எல்லாம் நொடியில் நீங்கி, எதிரிகள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும்.
தமிழ் தெய்வம் முருகன்
தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, முருகப்பெருமான் தோள்கள் பன்னிரெண்டு.
முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம் பதினெட்டு நயனங்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு.
முருகவேளின் முகங்கள் ஆறு. வீடுகள் ஆறு. பிரணவ மந்திர எழுத்து ஆறு (ச,ர,வ,ண,ப,வ) தமிழில் இன எழுத்துக்கள் ஆறு. (வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவை ஆறு ஆறு எழுக்கள்).
முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை ஆயுதமாகும். தமிழில் ஆயுத எழுத்து (ஃ) தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுத எழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், வேல் வடிவில் அமைந்திருக்கும். இந்த ஆய்த எழுத்து போல் தனிநிலை எழுத்து வேறெந்த மொழியிலும் இல்லை.
`தமிழ்’ என்ற சொல்லிலேயே இந்த மூவினத்தையும் காணலாம்:
`தமிழ்’ என்ற சொல்லில் `த’- வல்லினம். மி -மெல்லினம். `ழ்’ -இடையினம்.
அதுபோலவே `முருகு’ என்ற சொல்லிலும் `மூவினம்’ காணலாம்.
`முருகு’ என்ற சொல்லில் மு -மெல்லினம். ரு-இடையினம். `கு’ – வல்லினம்.
எனவே தமிழையும் முருகனையும் பிரித்துப் பார்க்க இயலாது. ஆம்! தமிழே முருகன்! முருகனே தமிழ்!
சுவாமிமலையில் உள்ள 60 படிகளும் அறுபது தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும். முருகன் இந்திரனின் ஐராவதம் யானையை அவனிடமிருந்து காணிக்கையாகப் பெற்று தன் வாகனமாக ஏற்றுக்கொண்டு இந்திரனுக்கு அருள் செய்ததும் இந்தத் தலத்தில் தான்.
முருகன் வள்ளியை மணம் புரிந்தது திருத்தணியில்! ஏனைய படை வீடுகளுக்கு இல்லாத பெருமை இத்தலத்திற்கு உண்டு. நான்முகன், திருமால், நாரதர், அகத்தியர் ஆகியோர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர்.
சூரசம்ஹாரத்திற்குப் பிறகு சூரபத்மன் முருகனிடம், தம்மை ஆட்கொண்டு அருள் செய்யும்படி கூறினான். அவ்வாறே தவமிருந்து அசுரன் முருகனுக்கு மயிலாக அமர்ந்து, பிறகு மலையாக மாறினான். அதுவே திண்டிவனத்தை அடுத்துள்ள `மயிலம்’ முருகத் தலம்.
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ளது குமரகிரி முருகன் கோயில். கருப்பண்ணசாமி என்பவர் இந்தக் கோயிலைக் கட்டினார். அவருக்கும் இங்கே தனிச் சன்னதி உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் தலத்தில்தான் முருகப் பெருமான் கந்தபுராணம் பாட கச்சியப்ப சிவாச்சாரியருக்கு `திகடச’ என்ற அடியை எடுத்துக் கொடுத்தார். கந்தபுராணம் இந்த ஆலயத்தில்தான் அரங்கேற்றப்-பட்டது.
ஆதி காலம் தொட்டு இங்கே குறிஞ்சி நிலக் கடவுள், அவரே. தொன்மையிலும் தொன்மையான `தொல்காப்பியம்’ இதை `சேயோன் மேய மைவரை உலகமும்’ என்கிறது. முருகனே சங்கப் புலவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். மிகப் பழைய `திருமுருகாற்றுப் படை’யில் நக்கீரர் இவர் புகழையே பாடுகிறார். திருமுருகாற்றுப் படையைப் பாராயணம் செய்ய, கடுமையான நோயும் குணமாகிவிடும் என்பது சித்தர்கள் சொல்லியுள்ள உண்மை.