மறைந்தும் வாழும் வில்லிசை

 மறைந்தும் வாழும் வில்லிசை

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் மறைந்தார் என்ற செய்தி உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வில்லில் இருந்து விரலை சொடுக்கிய உடனே அம்பு பாய்ந்து தாக்கு வதைப்போல சுப்பு ஆறுமுகம் மேடையில் அமர்ந்த உடனே அவர் உதடுகளிலிருந்து தமிழ்ச் சொற்கள் அம்புபோலப் பாய்ந்துவரும். அது எதிரிலே அமர்ந்திருக்கும் தமிழர்களின் இதயங்களை மயங்கவைக்கும்.

அந்தளவுக்கு வேகம், திக்காத, தெளிவான, தேசபக்தி உணர்வூட்டும் கருத்துகள், இனிய தமிழின் பழம்பெருமை, தேசியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, புதிய சொற்களின் பிரவாகம், அடுக்குத்தொடர்கள் வந்து விழுந்து அவரது வில்லிசைக் கச்சேரி களைகட்டும். ‘தந்தனத்தோம் என்று சொல்லியே’ தமிழர்களை 83 ஆண்டுகள் கட்டிப்போட்டார் சுப்பு ஆறுமுகம் என்றால் மிகையில்லை.

சுப்பு ஆறுமுகம் வில்லிசை முழங்காத தமிழகப் பகுதிகளே இருக்காது எனலாம். அந்தளவுக்கு அவர் தமிழோடும் தமிழ்ப் பாடல்களோடு பல இடங்களில் பயணப்பட்டு வில்லிசையின் வேந்தராக வாழ்ந்தார்.

மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ மேல் சுப்பு ஆறுமுகத்துக்கு ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக, அதே சாயலில் தனது 16வது வயதிலேயே ‘குமரன் பாட்டு’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது ‘பொன்னி’ என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் வெளியானது.

சிறுவயதில் இருந்தே தமிழ் மீதும், எழுத்து மீதும் தீராக் காதல் கொண்ட அவர், கோவில் திருவிழாக்களில் இசைக்கப்படும் வில்லுப்பாட்டு இசை வடிவத்தைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். கோவில்களில் தேவாரம், திருவாசகமும் பாடினார்.

திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியிலும் படித்தார். (அதன் பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் மூன்று ஆண்டுகள் படித்தார்.)

அவர் படித்த பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழா, நடிகர் என்.எஸ்.கே தலைமை நடந்தது. அதில் ‘காந்தி பெயரைச் சொன்னவுடன் கம்பெடுத்து வந்தவங்க!
கண்முன்னால அதே கம்பில் காந்திக் கொடி கட்டினாங்க!’ என்று சுப்பு ஆறுமுகம் பாடியதைக் கேட்ட என்.எஸ்.கே., ‘‘உங்கள் பள்ளியில் இருந்து எனக்கு எந்தப் பரிசும் வேண்டாம். ஒரே பரிசு இந்த சுப்பு ஆறுமுகத்தைத் தாருங்கள்…!’’ எனச் சொல்லியதுடன், சுப்பு ஆறுமுகத்தின் அம்மாவிடமும் அனுமதி பெற்று அவருடன் சென்னைக்கு அழைத்துச் சென்றார் என்.எஸ்.கே. அப்போது சுப்புவுக்கு அவருக்கு வயது 16.

கலைவாணர் கம்பெனியில் வில்லுப்பாட்டு, சினிமா என அவர் பாடல் எழுதத் தொடங்கியபோது அவருடன் உடுமலை நாராயண கவி, கே.பி.காமாட்சி ஆகியோருடன் இணைந்து எழுத்துப்பணி செய்தார்.

17வது வயதிலேயே என்.எஸ்.கே பாடும் ஒரு திரைப்பாடலை எழுதினார். பல்லாண்டுகள் அவருடன் திரைப்படப் பணிகள் தொடர்ந்தது. அதன்பிறகு நடிகர் நாகேஷ் நடித்த 60 படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதிக்கொடுத் துள்ளார் சுப்பு ஆறுமுகம்.

காந்திஜியின் மீது தீராத பக்தி கொண்டிருந்த சுப்பு ஆறுமுகம் இந்திய வானொலியில் ‘காந்தியின் கதை’யை வில்லுப்பாட்டாக 54 வாரங்களுக்கும் மேலாக வில்லிசை நடத்தியவர் சுப்புஆறுமுகம். தமிழ் வரலாறு, இலக்கியம், மருத்துவம், அறிவியல் என பலப்பல பாடுபொருள்களில் வில்லுப்பாட்டுப் பாடி தமிழுக்கு ஆகச்சிறந்த படைப்புகளைத் தந்தார்.

சுப்பு ஆறுமுகம் பூர்வீகம் திருநெல்வேலியில் உள்ள நெல்லை சத்திரம் புதுக் குளம் கிராமம். சுப்பு ஆறுமுகம் தந்தை ஆ.சுப்பையா பிள்ளை, தயார் சுப்பம்மாளுக்கு 28-06-1928 அன்று கடைக்குட்டி மகனாய் பிறந்தார். அவர் தந்தையார் இசைக் கலைஞர், பொம்மை செய்யும் தொழில் செய்தவர். குறிப்பாக ‘ஆசு’ கவி.

மனைவி மகாலட்சுமி.  அவர்களுக்கு மூன்று வாரிசுகள். மூத்தவர் முனைவர் எஸ். சுப்புலட்சுமி, இளையவர் எஸ்.காந்தி, வில்லுப்பாட்டு இசைக் கலைஞர். மூன்றாம் மகள் எஸ். பாரதி திருமகன். இவர் வில்லிசைத் தொடர் பணிக்காக கலைமாமணி விருது பெற்றவர். தந்தை வில்லிசை வேந்தரின் பெயரை வில்லிசை ராணியாக இன்றுவரை காப்பாற்றி தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் கணவர் திருமகன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பணி ஓய்வு. இவர்களது மகன் கலைமகனும் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று வில்லுப்பாட்டில் மற்ற மொழிகளும் இணைய நிகழ்ச்சி செய்கிறார்.

தன் 85வது வயதோடு, வில்லிசைக் கச்சேரி நடத்துவதை நிறுத்திக்கொண்டு, எழுத்துப் பணியில் இருந்த சுப்பு ஆறுமுகம் தற்போது முதுமையின் காரணமாக காலமானார். 

சுப்பு ஆறுமுகம் தமிழக அரசு வழங்கிய பாரதி விருதும், பத்மஸ்ரீ விருதும்,  மத்திய அரசின் சங்கீத நாடக விருதும் பெற்று நிறைவாழ்வு வாழ்ந்தவர். அன்னாரின் புகழ் தமிழ் உள்ளளவும் வாழும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...