அப்துல் கலாமின் குருவாக இருந்த சுவாமி சிவானந்தர்
சுவாமி சிவானந்தர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு மட்டு மல்ல பல கோடி மக்களுக்கு உந்து சக்தியாக (inspiration) இருந்த மகான்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற சிற்றூரில் செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்தார். இந்து மதத்தின் முக்கியமான நூல்கள் யாவும் தமிழ்/சமஸ்கிருதம் மூலமாகக் கற்றுத் தெளிந்த அவர் அப்பையா தீட்சிதர் என்ற சில நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த மகானின் வம்சத்தில் தோன்றியவர்.
சுவாமி சிவானந்தரின் வாழ்க்கை வரலாறு இந்தியர்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்துமத கொள்கை களில் முதன்மையானதான சகிப்புத்தன்மையை அவர் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்தார். எம்மதமும் சம்மதம் என்பதை ஆத்மசுத்தியோடு கடைப் பிடித்து வந்ததோடு யாவரும் அதன்படியே வாழவேண்டும் என்றும் அறிவுறுத்தி வந்தார். அவருடைய பக்தர்களில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் முதற்கொண்டு சர்வசமயத்தைச் சேர்ந்தவர்களும் உண்டு.
பூர்வாசிரமத்தில் அவர் ஒரு மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மலேசியாவில் ஏராளமான சம்பாத்தியம் உடைய ஒரு புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார். ஏழை எளிய மக்களின் நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்ததோடு அவர்களுக்குப் பண உதவியும் செய்தார்.
தனது தொழிலில் மிகச் சிறந்த வெற்றி பெற்று ஏராளமான செல்வம் சேர்த்த அவருக்கு இந்த லௌகீக வாழ்க்கை மீது பற்று இல்லாமல் போனது. யாவற்றை யும் துறந்துவிட்டு ஆன்மிக வேட்கை காரணமாக இந்தியா திரும்பி இமயமலை யில் முனிவர்கள், தவசிகள், யோகிகள் போன்றவர்களுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு சுவாமி விஸ்வானந்தா பூர்வாசிரமத்தில் குப்புசாமி என்ற பெயரில் இருந்தவருக்கு சுவாமி சிவானந்த சரஸ்வதி என்று தீக்ஷா நாமம் சூட்டி அவருக்கு 1924 ஜூன் 1ஆம் தேதி சன்னியாச தீட்சை செய்து வைத்தார்.
தெய்வநெறிக் கழகம் (Divine Life Society) என்ற ஆன்மிக சேவை அமைப்பை இமாசலத்தில் ரிஷிகேஷ் நகரில் தோற்றுவித்து உலகமெங்கும் ஆன்மிக வாழ்க்கை வாழ மக்களுக்கு வழிகாட்டி ஊக்கம் கொடுத்தார் சிவானந்தர். அவர் ஒரு இமயஜோதி என்று அவரது அடியார்கள் அழைத்தார்கள்.
Serve Love Give Meditate Realize என்ற ஐந்து ஆங்கிலச் சொற்கள் அவர் தந்த தாரக மந்திரம் ஆகும். சேவை செய்தல், அன்பு செய்தல், கொடுத்து உதவுவது, தியானம் செய்வது, தான் யார் என்று அறிந்து கொள்வது இதுதான் ஆன்மீக வாழ்க்கை நெறியில் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதன் ரத்தினச்சுருக்கமான விஷயம். இவை யாவற்றிலும் மனித குலத்திற்குத் துன்பப்படும் உயிர்களுக்குச் சேவை செய்வதுதான் தலையாயது என்று சொல்லி வந்தார்.
இந்தியா முழுவதும் அவருக்கு ஏராளமான பக்தர்கள், அடியார்கள் உண்டு; சிறப்பாக வடநாட்டில் ஏராளமான பக்தர்கள் உண்டு. இந்தி மொழியிலும் திறமை பெற்றிருந்த சுவாமிகள் தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியிலும் ஆன்மிக நூல்கள் பல எழுதி இருக்கின்றார். தனது வாழ்நாளில் சுமார் 250க்கு மேற்பட்ட நூல்கள் எழுதி உள்ளார். ஒவ்வொரு நூலும் அறிவு களஞ்சியம் என்றால் மிகையாகாது.
எந்தத் துறையில் நூல் எழுதினாலும் வெறும் தகவல்கள் அடிப்படையில் மட்டும் அல்லாமல் அவரது ஆழ்ந்த தியானம் மற்றும் உள்ளுணர்வு மூலம் பெற்ற ஏராளமான பொக்கிஷம் போன்ற உண்மைகளை காணலாம். சுவாமிகள் எழுதிய ஒரு நூலை வாசித்த ஒருவர் அவரைப் பெரிதும் நேசித்து அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் அவரது மற்ற நூல்களைப் படிக்கப் பேரார்வம் கொள்வதும் இயல்பானது.
வெறும் புத்தகப் புழுவாக வரட்டு வேதாந்தம் மட்டுமே பேசாமல் அவருடைய தொடர்பில் வந்த மக்கள் யாவரையும் ஆன்மிக நெறிமுறைகளை மற்றும் அன் றாட நடைமுறைகளைப் பின்பற்ற வைத்து அதற்குப் பெரிய தூண்டுகோலாக விளங்கினார். அவரை நேரடியாக அணுகமுடியாத மக்களுக்கு கடிதங்கள் வாயிலாக ஆன்மிக வாழ்க்கை வாழ வழிகாட்டினார். தபால் வழி பயிற்சிகளும் வழங்கி வந்தார்.
ஆயிரக்கணக்கான தன்னலம் கருதாத துறவிகளை உருவாக்கி, இந்திய நாட்டின் அடையாளம் ஆன்மிகம். ஆகவே தமது வாழ்நாளுக்குப் பிறகும் மக்களுக்கு உதவு வதற்காக ஆன்மிக வழிகாட்டிகளைத் தந்தார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், சுவாமி சிவானந்தரையே தனது குருவாகக் கூறுவார். அப்துல் கலாமின் வாழ்க்கையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் சுவாமி சிவானந்தர். அப்துல் கலாமின் இளம் வயதில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பார்ப்போம்…
விமானப் படையின் பைலட் தேர்வில் தோற்றிருந்ததால் மனம் ஒடிந்து விரக்தி யான நிலையில் கலாம் இருந்த காலம் அது. அகில இந்திய அளவில் நடந்த தேர்வில் கலாம் ஒன்பதாவது இடத்தைப் பெற்றிருந்தார். ஆனால், அவருக்கு முன்பு இடம் பிடித்திருந்த எட்டு பேருக்கும் வேலை கிடைத்தது. கலாமுக்குக் கிடைக்கவில்லை. கலாமின் சிறு வயது கனவு விமானியாக வேண்டும் என்பதே. வாழ்நாள் கனவு சிதைந்து போனதை எண்ணிக் கவலையுடன் ரிஷிகேசத்தில் மலை முகட்டின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தார் அவர். ‘மாணவன் தயாரான வுடன் ஆசிரியர் தானாகக் கிடைப்பார்’ என்பார்கள். அதைப் போலவே குருவாக கலாமிடம் சென்றார் சுவாமி சிவானந்தர். கலாம் நடந்ததை அவரிடம் கூறினார்.
கலாம் கூறியதைக் கேட்டதும் சிவானந்தர், “நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல்” என்று அறிவுரை கூறினார். `அந்தத் தருணம்தான் என் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம்’ என்று கலாம் அடிக்கடி குறிப்பிடுவார். அன்று மட்டும் கலாம் சோர்ந்து போயிருந்தால் இந்தியாவின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி நமக்குக் கிடைத்திருக்க மாட்டார். கலாமுக்கு மட்டு மல்லாமல் வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த பலருக்கும் வாழ்வில் ஆன்மிக ஒளி ஏற்றியவர் சுவாமி சிவானந்தர். சுவாமி சிவானந்தர் போற்றிய மனித நேயத்தை நாமும் போற்றி, தொண்டு செய்வோம்!
சிவானந்தர் அமுதமொழிகள்
* எளிமையான அதே சமயத்தில் சத்துள்ள ஆகாரங்களை உண்ணுங்கள். உண் ணும்முன் கடவுளுக்குச் சமர்ப்பணம் செய்யுங்கள். சரிவிகித உணவை உட்கொள் வதும் அவசியம்.
* மிளகாய், பூண்டு, புளி போன்ற உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். காபி, டீ, மாமிசம், மது போன்ற உணவுவகைகளை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
* தினமும் பத்து பதினைந்து நிமிடங்களாவது யோகசனப் பயிற்சியோ, உடற் பயிற்சியோ செய்யுங்கள். நீண்ட தூர நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள் ளுங்கள். முடிந்தால், சுறுசுறுப்பை உண்டாக்கும் விளையாட்டில் ஈடுபடுங்கள்.
* தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தை கடைபிடியுங்கள். விடுமுறை நாட்களில் நான்கு மணி முதல் எட்டுமணி நேரம்வரை மவுனம் நல்லது. இது மனதுக்கு நல்லது. கண், வாய், செவி, மூக்கு, நாக்கு ஆகியவற்றை முடிந்தள வுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
* உண்மையே பேசுங்கள்.இரக்கமும், கனிவும் கொண்டிருங்கள். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஒளிவுமறை வின்றி திறந்த மனத்துடன் எல்லோரிடமும் பழகுங்கள்.
* நெஞ்சில் நேர்மையைப் பின்பற்றி வாழுங்கள். நன்மைக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உழைத்துப் பணம் சேருங்கள். நியாயமான வழியில் வராத எப்பொருளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். பெருந்தன்மை உணர்வுடன் செயல் படுங்கள்.
* கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சகிப்புத்தன்மையுடன் பிறர் குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும் செய்யுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும், சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.
* தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள். உங்கள் சாதனைகளையும், ஆன்மிக எண்ணங்களையும் குறை கூறுபவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர் களிடம் இருந்து விலகி விடுங்கள்.
* உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடைமைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையையும், உயர்ந்த சிந்தனையையும் பெற்று வாழுங்கள்.
* பிறருக்கு நன்மை செய்து வாழ்வது தான் உயர்ந்த வாழ்வு. தன்னலமில்லாமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் பணியையோ, தொழிலை யையோ கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகச் செய்யுங்கள். அதை அவருக்கே அர்ப்பணித்து விடுங்கள்.
* உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதத்தை தானம் செய்யுங்கள். உலகமே உங்கள் குடும்பம் என்ற பரந்த நோக்குடன் வாழுங்கள்.
* பணிவுடன் எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள். ஆடம்பரம், போலி கவுரவம், டம்பம், கர்வம் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்.
* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்துவிடுங்கள். எல்லா நிலைமையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
* கண்ணில் காணும் அனைத்திலும் கடவுளையே காணுங்கள். காலை எழும் போதில் இருந்தே கடவுள் சிந்தனையோடு அன்றாடப் பணிகளைத் தொடங் குங்கள்.
* அன்றாடம் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு தெய்வப் பாடல்கள் பாடுங்கள். எளிய மந்திரங்களைச் சொல்லுங்கள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள்.